சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து,
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து,
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம்.
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர்.
வி என்றால் பட்சி (மயில்) என்றும்,
சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும்
அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.
வைகாசி விசாகம் பற்றிய புராண கதை:
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன.
அதனைக் கண்ட முனிவர், "நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.
தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் விளையாண்டார்கள் அந்தக் குழந்தைகள்.
அதனால் மீன்கள் இறந்தன.
அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.
ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது.
அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.
ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது.
அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.
பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும்.
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ?
முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?
கண்ணையும் மறந்திருப்பேன்
கையுடன் கால்களும் மறந்திருப்பேன் முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே
எண்ணத்தின் ஒளிச்சுடரே
உன்னை எப்படி நான் மறப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?
பொன் பொருள் மறந்திருப்பேன்
இகழும் புகழும் மறந்திருப்பேன் முருகா
என்னுயிர் ஆன உன்னை
என்னுயிர் ஆன உன்னை
மறந்தால் எவ்விதம் வாழ்ந்திருப்பேன்?
நான் உன்னையும் மறப்பதுண்டோ?
நீந்திய நதி மறப்பேன்
வீடும் நிலமும் மறந்திருப்பேன்
வடிவேல் ஏந்திய உனை மறந்தால்
நான் ஏந்திய உனை மறந்தால்
உலகில் எத்தனை நாள் இருப்பேன்?
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
உன்னையும் மறப்பதுண்டோ?
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது அருளிச் செய்த கந்தர் அனுபூதி.
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7
ஏ மனமே, நீ கெட்டு வீணே ஒழிகின்றாய், நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக, இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம் செய்வாயாக,
வேலாயுதக்கடவுளின் திருவடிகளைத் தியானிப்பாயாக,
நீண்ட பிறவித் துன்பத்தை,
பொடியாக்கி ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக வினைகள் யாவையும் விட்டு விடுவாய் ..
அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8
குமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன்,
போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள்,
நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய,
மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9
கிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே,
தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது,
மோக வலையில் அகப்பட்டு,
ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்? ..
முருகா , அனைவருக்கும் நல்ல உடல் நலத்தையும் , மனோ பலத்தையும் தந்தருள வேண்டும் ...
முருகா சரணம்...
கந்தா சரணம்.....
வடிவேலா சரணம்.....
அன்புடன்
அனுபிரேம்.....
வைகாசி விசாகத் திருநாள் பற்றிய குறிப்புகள் நன்று. பழைய படங்கள்/ஓவியங்கள் நன்று.
ReplyDeleteநன்றி வெங்கட் சார் ...
Deleteமுருகா போற்றி போற்றி.
ReplyDeleteவைகாசி விசாகம் சிறப்பான நாள் சிறப்பான பகிர்வு.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
ReplyDeleteபதிவை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தேன்.
எப்படி மறந்தீர்கள்?
முருகனின் இப்பதிவை நேற்று பதிவு விட்டு , இன்று ஆழ்வார் பதிவு இட எண்ணி இருந்தேன் ...
Deleteஆனால் நேற்று பதிவு செய்ய இயலாததால் இன்று காலை முருகன் பதிவும் , மாலை ஆழ்வார் பதிவும் என வெளியிடுகிறேன்....
மறக்கவெல்லாம் இல்லை சார் ...ஆனாலும் உங்களின் ஆர்வமான கருத்துரைக்கண்டு மிக மகிழ்ச்சி ...
நம்மாழ்வார் அவதார பதிவு வாசித்து தங்களின் கருத்துக்களை பகிருங்கள் ...
பதிவைப் படிக்கும்போது, சூலமங்கலம் குரலில்
ReplyDeleteமுருகனுக் கொருநாள் திருநாள்
தமிழ் முதல்வனின்...
...
வைகாசி விசாகத் திருநாள்
பாடல்தான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அருமை. வாழ்த்துகள்
நன்றி சார் ...
Deleteஅனு படங்கள் ஓவியனள் தகவல்களும் சிறப்பு.
ReplyDeleteகீதா
நன்றி அக்கா ...
Delete