இன்று ஸ்வாமி நம்மாழ்வார் திருஅவதாரத் திருநாள் (வைகாசியில் – விசாகம்) ........
ஆழ்வார் வாழி திருநாமம்
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே
ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தான் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே
நம்மாழ்வார்
பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்
பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்
"வேறொன்றும் நான் அறியேன்,வேதம் தமிழ் செய்த
மாறன் ! சடகோபன்,வண்குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம், என்றேத்தும் மதுரகவியார் ! எம்மை
ஆள்வார், அவரே அரண் !
(-ஸ்ரீமந் நாத முனிகள்)
"நம்மாழ்வார் தவிர வேறொருவரையோ/வேறொரு பொருளையோ நான் அறிய மாட்டேன்;
வேதத்தின் அர்த்தங்களைத் தமிழாக அருளிச் செய்த மாறன் என்னும் திருநாமத்தை யுடையவரும்,
அழகிய திருக்குருகூர் நகருக்குத் தலைவருமான சடகோபர் என்னும் நம்மாழ்வாரே என்றும் எமக்கு உஜ்ஜீவனர் ஆவர்" என்று தோத்திரம் செய்தருளிய மதுரகவி ஆழ்வார் நம்மை ஆள்பவர்.
“வேறொன்றும் நானறியேன்...." என்பது மதுரகவியாழவார் நம்மாழ்வாரைப் போற்றுவதாகவும், நாதமுனிகள் மதுரகவி ஆழ்வாரைப் போற்றுவதாகவும் கொள்ளலாம்.
வேதம் தமிழ்செய்த... ஆழ்வார் அருளிச் செயல்கள், அளவிறந்த வேதங்களிலே எளிதிற் காண ஒண்ணாத படி மறைந்துகிடந்த தத்துவப் பொருள்களை எல்லாம் எடுத்துத் தெளிவுபடச் சொல்வதற்காகத் திருவவதரித்தவை. சுருங்கச்சொல்லல்,விளங்கவைத்தல் முதலிய அழகுகளோடு தத்துவப் பொருள்களின் சாரங்களை எடுத்துச் சொல்லி விளக்கும் தன்மையில் வடமொழி வேதங்களினும் இத்தென் மொழிவேதம் மிகச்சிறந்தது.
சம்ஸ்க்ருத வேதம் போலவே தமிழ்மறையாகிய திவ்யப்ரபந்தங்களும் நித்யம் என்பது ஆன்றோர் கொள்கை.
மாறன் ... ஆழ்வார் பிறந்த பொழுதே தொடங்கி- அழுதல்,பால்குடித்தல் முதலிய சாதாரண காரியங்கள் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால் இவருக்கு மாறன் என்று திருநாமம் வலிய வினைகட்கு மாறாக இருந்தலாலும், அந்ய மதஸ்தர்களின் வாதங்களுக்குச் சத்ருவாயிருந்தலாலும், பாண்டியநாட்டுக்குத் தலைமைக் கவியாகத் தோன்றியதாலும் வந்த பெயர் என்றும் சொல்லுவர்.
சடகோபன் ... கர்ப்பத்திலிருக்கும் போது ஞானிகளாய் இருக்கும் குழந்தைகள், பிறந்தவுடனே தமது ஸபர்ஸத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணவிடுந் தன்மையுடைய சடம் என்னும் வாயு, நம்மாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுவதற்கு வர, அப்பொழுது அவர் அதனை ஹுங்காரத்தால் ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால் சடகோபர் என்று திருநாமமாயிற்று.
எம்பெருமானுடைய திவ்யமங்கள குணங்களாகிய அமுத வெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராதல் பற்றி ஆழ்வார். மற்ற எல்லா ஆழ்வார்களும் அவ்வாறே அந்தப் பெயர் பெற்றனர். ஆனால் ஆழ்வார்களுக்குத் தலைவரான நம்மாழ்வாருக்கே "ஆழ்வார்" என்னும் பெயர் நன்றாக விளங்குகிறது. நம் சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும்.
மாறன், பாரங்குசன், வகுளாபரணன், திருநாவீறுடையபிரான், திருக்குருகூர்நம்பி, குருகைப்பிரான், வழுதிநாடன் முதலிய திருநாமங்களும் இவருக்கு உண்டு.
குருகூர் ... நூற்றெட்டுத் திவ்யதேசங்களுள் பாண்டியநாட்டுத் திவ்ய தேசங்கள் பதினெட்டில் ஒன்று, ஆழ்வார்திருநகரி என்று பிரசித்தி பெற்றது. குருகாபுரீ என்று வடமொழித்திருநாமம்.
ஏறு ... வடமொழியில், புங்கவ: ருஷப: சப்தங்கள் போல் தமிழில் ஏறு என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர், ஶ்ரேஷ்டர் என்றபடி, “வண்குருகூறேறு“ என்றவிடத்து வண்மையைக் குருகூரில் அந்வயிப்பதிலும் குருகூரேற்றில் அந்வயிப்பது அழகு. அடியார்களுக்கு அமுதவெள்ளமாக, அருளிச்செயல்களை உபகரித்தருளிய உதாரசிகாமணியாகிய குருகூரதிபதி என்பதாம்.
முதலடியில் “நான் அறியேன்“ என்று ஒருமையாகக் கூறியதற்கு ஏற்ப “என் வாழ்வாம் என்றேத்தும்“ என்று மேலும் ஒருமையாகவே கூறவேண்டியிருக்க, "எங்கள்" என்று பன்மையாகக் கூறியது – தம்மோடு சம்பந்தம் பெற்ற ப்ரபந்ந குலத்தவர் அனைவரையும் கூறியவாறாம். திருவிருத்தத்தில் ஆழ்வார் “இனி யாம் உறாமை“ என்று முதலிற் பன்மையாகக் கூறி, மேல் “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்று ஒருமையாகக் கூறியதை – தம்முடைய சம்பந்தம்பெற்ற பரபந்நர்கள் எல்லார்க்குமாகத் தாம் ஒருவர் விண்ணப்பம செய்கிறார் என்று கொள்வது போல.
(நன்றி சுவாமி --- பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் ---)
முந்தைய பதிவுகள் ...
நம்மாழ்வார் அருளிச் செய்த
பெரிய திருவந்தாதி
2585
முயற்றி சுமந்து, எழுந்து* முந்துற்ற நெஞ்சே,*
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி,* நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவி* யுள் பொதிவோம்,* நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ் (2) 1
2586
புகழ்வோம் பழிப்போம்* புகழோம் பழியோம்*
இகழ்வோம் மதிப்போம்* மதியோம் இகழோம்* மற்று-
எங்கள் மால்! செங்கண் மால்!* சீறல் நீ, தீவினையோம்*
எங்கள் மால் கண்டாய் இவை. 2
2587
இவை அன்றே நல்ல* இவை அன்றே தீய,*
இவை என்று இவை அறிவனேலும்,* -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க* ஒண்ணாது இறையவனே,*
என்னால் செயற் பாலது என்? 3
2588
என்னின் மிகு புகழார் யாவரே,* பின்னையும் மற்று-
எண் இல்* மிகு புகழேன் யான் அல்லால்,* -என்ன-
கருஞ் சோதிக்* கண்ணன் கடல் புரையும்,* சீலப்-
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள்பெற்று 4
2589
பெற்ற தாய் நீயே* பிறப்பித்த தந்தை நீ*
மற்றை யார் ஆவாரும் நீ பேசில்,* எற்றேயோ-
மாய! மா மாயவளை* மாய முலை வாய் வைத்த*
நீ அம்மா! காட்டும் நெறி. 5
2590
நெறிகாட்டி நீக்குதியோ,* நின்பால் கரு மா-
முறி மேனி காட்டுதியோ,* மேல் நாள் அறியோமை*
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே,* ஈது உரையாய்-
என் செய்தால் என் படோம் யாம்? 6
2591
யாமே அருவினையோம் சேயோம்,'* என் நெஞ்சினார்-
தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,* -பூமேய-
செம்மாதை* நின் மார்வில் சேர்வித்துப்,* பார் இடந்த-
அம்மா! நின் பாதத்து அருகு. 7
2592
அருகும் சுவடும் தெரிவு உணரோம்,* அன்பே-
பெருகும் மிக இது என்? பேசீர்,* -பருகலாம்-
பண்புடையீர்! பார் அளந்தீர்!* பாவியெம் கண் காண்பு அரிய*
நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு. 8
2593
'நுமக்குஅடியோம்' என்று என்று* நொந்து உரைத்து என்,* மாலார்-
தமக்கு அவர் தாம்* சார்வு அரியர் ஆனால்?* -எமக்கு இனி-
யாதானும்* ஆகிடு காண் நெஞ்சே,* அவர் திறத்தே-
யாதானும் சிந்தித்து இரு. 9
2594
இருநால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர்,* எட்டோடு-
ஒரு நால்வர்* ஓர் இருவர் அல்லால்,* திருமாற்கு-
யாம் ஆர் வணக்கம் ஆர்* ஏ பாவம் நல் நெஞ்சே*
நாமா மிகஉடையோம் நாழ்? 10
14
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
15
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் - உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்
(உபதேசரத்தினமாலை)
ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!!
அனுபிரேம் 💕💕💕...
No comments:
Post a Comment