28 June 2026

ஸ்ரீரங்கம், பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம்

 ஸ்ரீரங்கம்,பெரியகோவில் ஜேஷ்டாபிஷேகம் - இன்று (28/06/2026)




அரங்கருக்கு வருடாவருடம் ஆனி மாதம், ஜ்யேஷ்டா (கேட்டை) நட்சத்திரத்தன்று , விசேஷமாக திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும்.

 ."ஜேஷ்டா" என்ற ஸம்ஸ்க்ருத சொல் 'பெரிய' என்ற பொருள் உரைக்கும். ஜ்யேஷ்டா நக்ஷத்திரம் (கேட்டை ) என்றால், 'பெரிய நட்சத்திரம்'என்றும் பொருள் கொள்ளலாம்.


கங்கையிற் புனிதமாய, காவிரி -

அரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும், "பெரிய பெருமாளான" மூலவர்

ஸ்ரீ ரங்கநாதருக்கு, இந்த ஆனி மாதத்தில், "பெரிய நட்சத்திரத்தில்"

(ஜ்யேஷ்டாநக்ஷத்திரத்தில்), ஸ்ரீரங்கத்தில் இரு பிரிவாக, தெற்கிலும்,

வடக்கிலும் ,"பெரிய மாலை"போல , தவழ்ந்து ஓடும் , தமிழகத்தின் புண்ணியமான ,புராதனம் மிக்க ,"பெரிய நதியான " தென் திருக்காவிரியில், இருந்து,"பெரிய கோபுரமான" ராஜ கோபுரத்தின் வழியே , தீர்த்தம் கொண்டு வரப்பட்டு,விசேஷமாக ,

"பெரிய கோயிலான"அரங்கர் ஆலயத்தினில் உள்ளே, எழுந்தருளியிருக்கும், பெருமாளான, அழகிய மணவாளருக்கும் ,(நம்பெருமாளுக்கு) ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி தாயாருக்கும் "பெரிய அபிஷேகம்"செய்யப்படும்.

பெரிய நட்சத்திரத்தில் ,பெரிய நதியில் இருந்து ,பெரிய கோபுரத்தின் வழியே ,

பெரிய அளவில் (29 குடங்களில் 1 தங்கம்+28 வெள்ளி), பெரிய கோயிலில் உள்ள பெரிய பெருமாளுக்கு ,பெரிய அளவில் ,வெகு விமரிசையாக நடைபெறும் ,திருமஞ்சனம் என்பதாலேயே ,இதனை "பெரிய திருமஞ்சனம்" என்று அழைக்கிறார்கள்.

(வருடத்தில் பதினோரு மாதங்கள், (ஐப்பசி தவிர) ஸ்ரீ ரங்கத்தின் வடக்கு பகுதியில் ஓடும், வட திருக்காவிரியில் இருந்து, யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும். ஆனால் இந்தப் பெரிய திருமஞ்சனத்திற்கு மட்டும் வழக்கம் போல், கொள்ளிடக் கரையிலிருந்து தீர்த்தம் எடுக்காமல், ஸ்ரீரங்கத்தின் தெற்குப் பகுதியில்-அம்மாமண்டபத்தில் காவிரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தென் திருக்காவேரியில் தீர்த்தம் எடுக்க முடியாத அளவுக்கு மாசு பட்டிருந்ததால்,(!!) ஜேஷ்டாபிஷேகத்துக்கும், வட திருக் காவேரி (கொள்ளிடம்) யிலிருந்தே தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.










தேவ மரியாதைகளுடன் வரும் தீர்த்தம்:

"ஆண்டாள்"யானையின் மீது தங்கக் குடத்திலும், அர்ச்சகர்கள், வெள்ளிக் குடங்களிலும், காவிரித் தீர்த்தத்தை வேத கோஷங்கள், பாசுரங்கள் பாடி பெருமாளின் திருமஞ்சனத்துக்காக, ஊர்வலமாக சித்திரை வீதிகள் வழியாக எடுத்து வருவார்கள். பெரிய பெருமாளுக்கு பெரிய அபிஷேகம் ஆயிற்றே ! எனவே மங்கள இசையும் பெரிதாக10 தவில்கள்10 நாதஸ்வரங்கள்!

அரவணையில் அறிதுயில்கொள்ளும்,பெரியபெருமாளுக்கு 'புனுகு சட்டம்' அபிஷேகம்:

மூலவரான பெரிய பெருமாளுக்கு, "தைலக்காப்பு"

அகில்கட்டை, சந்தனக்கட்டை,சாம்பிராணி, வெட்டிவேர், நல்லெண்ணெய் மற்றும் புனுகு, பச்சைகற்பூரம் கொண்டு, மண்பாத்திரத்தில், விறகு அடுப்பில் , ஒரு சோதனைக் குழாய் போன்ற அமைப்பிலான பானைகளைக் கொண்டு பரிசுத்தமாக காய்ச்சிய தைலம்,பாரம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தயாரிக்கப்படுகிறது. இந்த பெரிய அபிஷேகத்தன்று மட்டுமே ,பெரிய பெருமாளுக்கு திருமுடி முதல் திருவடி வரை (ஆதிஷேசனுக்கும்), சாற்றப்படும்....

இதை "புனுகு சட்டம் "என்றும் சொல்லுவர்.

மூலவர் திருமேனி கல்லினாலோஅல்லது மரத்தினாலோ(தாது) செய்யப்பட்ட விக்ரஹம் அல்ல.

முழுக்க முழுக்க "சுதையினால் " அதாவது, சாளக்ராமங்கள் மற்றும் சுண்ணாம்பு, இன்னும் பிற படிமங்களைக்கொண்ட( சுண்ணாம்புக்காரை) கலவைகளால் ஆன திருமேனி. இதனால், மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யும் வழக்கம் இல்லை. திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் மட்டுமே சாத்தப்படும். பூ, மாலைகள் சாத்தப் படுவதில்லை.

பரமாத்மா படைத்த பிரம்மா முதல் நாரதர், சூரியன், அவரின் குலத்தின் வழி வந்த இக்ஷுவாகு, தசரதன், அவர் மகன் ஸ்ரீ ராமர் அவர் பின்பு விபீஷணன் மற்றும் பன்னிரு ஆழ்வார்களாலும், ஸ்வாமி ராமாநுஜராலும், பலப்பல ஆச்சார்யர்கள் முதலானோர்களால் பூஜிக்கப்பட்ட, இன்னும் பல கோடி ஆண்டுகள் பூஜிக்கப் போகின்ற அழிவில்லாத , அநாதியான,

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவரான ,"பெரிய பெருமாளான " மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் திருமேனியை பாதுகாக்கும் பொருட்டு, இந்த தைலமானது,

ஸ்ரீ ரங்கநாதரின் திருமேனியில் உள்ள, வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் களைந்து சாற்றப்படுகிறது.

இந்த "தைலக்காப்பு " சாற்றப் படுவதால் நாளை முதல், ஒரு மண்டல காலத்திற்கு அரங்கரின் திருமேனி திருவடி முதல் திருக்கண்டம்(கழுத்து) வரை " திரையிடப்பட்டு , திருமுக தரிசனம் மட்டும் சேவையாகும்.

ஒரு மண்டல காலத்தில் தைலக் காப்பு உலர்ந்த பின் பெருமாளுக்கு வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து மூலவர் ஸ்ரீ ரங்கநாதரின் திருவடி முதல் திருமுடி வரை , மீண்டும் சேவை ஆகும் .

(ஜேஷ்டாபிஷேகத்திலிருந்து ஒரு மாதம் கழித்து ஆடி 18 அல்லது 28 ஆம் நாள் பெரிய பெருமாள் திருவடி சேவை அருள்வார்.நம்பெருமாள் முதல் புறப்பாடு கண்டருள்வார். இந்த ஆண்டு ஆடி 18--03/8 அன்று பெரிய பெருமாள் திருவடி சேவை ஆகும்.)

உற்சவர் நம்பெருமாளுக்கு, பரிபூரண அபிஷேகம்:

அதைப்போலவே, உற்சவரான, நம்பெருமாளுக்கும், உபயநாச்சிமார்களான , ஸ்ரீ தேவிமற்றும் பூ தேவி தாயார்களுக்கும், அவர்களின் திருமேனியைக் காக்கும் பொருட்டு அரங்கரின் முதல் பிரகாரமான "திருவெண்ணாழி",

(திரு+வெண்+ஆழி="திருவெண்ணாழி",திரு +பால்+கடல்= அதாவது திருப்பாற்கடலில்) திருச்சுற்றில்,ஏழு திரையிடப்பட்டு, நம்பெருமாள் மற்றும் உபயநாச்சிமார்களுக்கு,

அவர்களின் திருமேனியின் மேல், வருடம் முழுவதும்,சாற்றப்பட்டு இருக்கும், தங்ககவசத்தினைக் களைந்து, நேரிடையாக திருமேனியில், பால், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் செய்விக்கப் படும். இந்தத் திருமஞ்சனத்தை, அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சேவிக்கமுடியாது.

இது "பெரிய ஏகாந்த திருமஞ்சனம் "என்று சொல்லப்படுகிறது .

நம்பெருமாள் திருமேனியில் சாற்றப்பட்டு உள்ள, தங்க கவசத்தின் உள்ளே, பச்சைக் கற்பூரம் ஒரு பாதுகாப்பு கவசம் போல், மெல்லிய துணிகளைக் கொண்டு, திருமேனி முழுவதும் சாற்றப் பட்டு இருக்கும். அந்த பச்சைக் கற்பூரக் கவசமானது, உற்சவரின் திருமேனியை ஆண்டு முழுவதும் , பாதுகாக்கும் பொருட்டு, சாற்றப் படுகிறது.

பொதுவாக பச்சைக்கற்பூரம் கொண்டு, பாதுகாக்கும் எந்த பொருட்களும் , நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருக்கும். அதோடு புழு, பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் வர விடாமல் தடுக்கும்.

 இதற்காகவே, நம்பெருமாளுக்கும் , உபயநாச்சிமார்களுக்கும், இத்தகைய சிறப்பு மிக்க, பச்சைக் கற்பூரம் கொண்டு, ஒரு கவசமும் அதன் மீதே, தங்ககவசமும், ஆபரணங்களும், வைர,வைடூரிய, மாணிக்கங்களும், பூமாலைகளும் சாற்றப் படுகின்றது.

இப்படிப்பட்ட, தைலக்காப்பும், பச்சைக் கற்பூறக் கவசமும் "நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள்", என்பதில், நாம் பெருமை கொள்ள வேண்டும் .இந்த பாதுகாப்பு முறைகள், காலங்காலமாக அழியாதது. அரியது. மெய்ஞ்ஞானம் கண்ட விஞ்ஞான முறை.இந்தப் பாதுகாப்பு முறைகளை,

இன்றும், இன்னும் வரப்போகும் காலங்களிலும் தொடரச் செய்வது மட்டும் அல்ல, அதை சரியாகச் செய்வதும் நமது கடமையாகும்.

பெரிய கோவிலில், இந்த "பெரிய திருமஞ்சனம் "தவிர மற்ற எந்தக் காலத்திலும், நம்பெருமாளுக்கோ,உபய நாச்சிமார்களுக்கோ ,பால் ,தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் ( அபிஷேகம்) செய்வது கிடையாது . வருடம் முழுவதும் நடக்கும், திருமஞ்சனங்களில், காவிரித்தீர்த்தத்தில் (வெந்நீர் கூட உண்டு) ,சந்தனம் மற்றும் குங்குமப்பூ கலந்தே திருமஞ்சனம் நடக்கும் . இன்றைய திருமஞ்சனத்துக்கு பக்தர்களும் பால், தயிர், இளநீர், பன்னீர் போன்ற திரவியங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

பெரிய திருப்பாவாடை உற்சவம்:

ஜேஷ்டாபிஷேகத்துக்கு அடுத்த நாள் ‘பெரிய திருப்பாவாடைத் தளிகை’ பெரிய பெருமாள், சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். 

அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளைகள்,வாழைப்பழம், மாங்காய், தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நைவேத்தியம் செய்த பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

இதற்கு "பெரிய திருப்பாவாடை " என்று பெயர். பெரிய திருப்பாவாடைத் தளிகை. நாள்தோறும் பெருமாளுக்கு நடைபெறும் நிவேதனங்களில், ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால்,அதற்குப் பிராயச்சித்தமாக, இந்தப் "பெரிய தளிகை" அமுது செய்விக்கப்படுவதாக ஐதீகம்!.

சந்தனக்காப்பு:

இன்று ஒருநாள் , "பெரிய திருமஞ்சனத்தன்று"மட்டுமே, மூலஸ்தானத்தில், உள்ள சுவர்களில், சந்தனம் பூசப்படும் . வருடம் முழுவதும் செய்யப்படும், ஆரத்தி வருடம் முழுவதும் அணையாமல் சுடர்கின்ற தீபஒளியின், படிமங்கள் அரங்கனின் மூலஸ்தானத்தில், படர்ந்து இருக்கும். அதை இன்று ஒருநாள் மட்டுமே சுத்தம் செய்து, சுவர்களுக்கு சந்தனத்தால், பூச்சு பூசப்படும்.

ஆபரண அணிகல அணிவரிசை:

அதோடு மட்டுமல்லாமல்,

நம்பெருமாள் திருமேனியில் வருடம் முழுவதும் சாற்றப்பட்டு இருந்த, தங்கக்கவசங்களும் வைர,வைடூரிய, மாணிக்க மகுடங்களும்.

திருப்பாதுகைகளும் , இந்தப் 'பெரியதிருமஞ்சனத்தின்' போது மட்டுமே , பொதுமக்களின் முன்பு ,பார்வைக்கு வைக்கப் பட்டு, தங்க நகைகள் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி துவங்கும்-யாகசாலைக்கு முன்புள்ள தொண்டை மான் மேட்டில். ஆனால் பாதுகாப்பு கருதி,இப்போது பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதியில்லை.

கோவில் நிர்வாகத்தார், ஸ்தலத்தார்கள் பக்தர்களின் சில பிரதிநிதிகள் முன்னிலையில் இவை கணக்கெடுக்கப்பட்டு பரிசுத்தம் செய்வதற்காக பொற்கொல்லர்களிடம் தரப்படுகின்றன. அவர்கள் அங்கேயே அவற்றைச் சுத்தப்படுத்தி, மாலை 4.30 மணியளவில், மீண்டும் இவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கிறார்கள். அவை, எடைகள் சரிபார்க்கப்பட்டு,மீண்டும் அரங்கரின் திருமேனியிலும் உபய நாச்சிமார்களின் திருமேனியிலும் சாற்றப்படும்.

பரதாழ்வார்,பெற்ற பேறு நாமும் பெறலாம்:

பரதாழ்வார் ஸ்ரீராமரின் பாதுகைகளைத் தன் சிரசில் வைத்து,எடுத்து வந்து, ராஜ சிம்மாசனத்தில் வைத்து வணங்கினார்.

 இன்று நம்பெருமாள் தம்,"ஆசன பத்மத்திலே அழுந்திய திருவடி நிலைகளை"-தங்கத் திருவடிக் கவசங்களை, திவ்யமான பாதுகா நிலைகளை பக்தர்களின் சிரசில் வைத்து அருள்பாளிக்கிறார்.

பொன்னும்,மணியும்,பவளமும், முத்தும் பொறித்த அபயஹஸ்த -வைத்த அஞ்சல் என்ற கை-அங்கிலும் நம் சிரசில் சாத்தப்படுகிறது.(நம்பெருமாளின் நகைகளில் பாதுகைகளையும்,அபய ஹஸ்த அங்கிலையும் மட்டும் வெளியே கொணர்ந்து தொண்டைமான் மேட்டில் அமர்ந்து சாதிப்பார்கள்)

"திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய்" என்னும் பெரியாழ்வார் திருமொழியை இன்று கண்ணார,நெஞ்சார அனுபவிக்கலாம்.

இரவு 10.30 மணிக்கு மூலவர் பெரிய பெருமாளுக்கு, மங்களஹாராத்தி நடக்கிறது. இன்றும்,நாளை மாலை 4.30 வரை மூலவர் மற்றும் உற்சவர் சேவை கிடையாது.





பெரியபிராட்டியார் ஜேஷ்டாபிஷேகம்

பெரியபெருமாளுக்குப் போலவே, பெரியபிராட்டியாருக்கும் சில நாட்கள் கழித்து ஜேஷ்டாபிஷேகமும் திருப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது.

இதற்குச் சில நாட்கள் கழித்து, சக்கரத்தாழ்வாருக்கும், காட்டழகிய சிங்கருக்கும், உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் --நன்றி சுவாமி )



பெரியாழ்வார் திருமொழி

4-8 எட்டாம் திருமொழி - மா தவத்தோன் 

திருவரங்கத்தின் பெருமை 



406

பெருவரங்கள் அவைபற்றிப்
      பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
      உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
      குயில் கூவும், குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
      என் திருமால் சேர்விடமே     (5)



407

கீழ் உலகில் அசுரர்களைக்
      கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
      கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
      தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
      ஆளம் வைக்கும் அரங்கமே (6)
   

408

கொழுப்பு உடைய செழுங்குருதி
      கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
      பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
      தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
      அடிதொழும் சீர் அரங்கமே    (7)


ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!

நம்பெருமாள்  திருவடிகளே சரணம்!!!!!



அன்புடன்
அனுபிரேம்💜💜💜

No comments:

Post a Comment