26 June 2026

ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி)

நேற்று   ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம் (ஆனியில் – ஸ்வாதி) 







  ‘பொங்கும் பரிவாலே’ வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில் குறிப்பிடுகிறார். 

மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்ளாசாசனம் ( பல்லாண்டு பாடுவது ) செய்தாலும், பெரியாழ்வார் போல அவர்கள் செய்யவில்லை. 

பெருமாளிடம் கோபித்துக்கொண்டார்கள், என்ன வேண்டுமோ அதைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று எண்ணி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் இவர் பெரியாழ்வார் ஆனார். 

ஸ்ரீவேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் பெரியாழ்வார் என்ற பெயர் ஏன் வந்தது என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறார்.  ஆண்டாள் திருமுடியில் சூடிக் கொடுத்து அதனால் மணம் பெற்ற மாலையைக் களைந்து அதை அதை எம்பெருமானுக்கு விட்டு சித்தர் மூலமாக ஸ்மர்பித்தாள். இதனால் மனம் உகந்து விட்டுசித்தரைப் மெச்சி ‘பெரியாழ்வார்’ என்ற திருநாமத்தை தந்தான் என்கிறார். 

நல்ல செய்தி சொல்லுபவருக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழட்டி கொடுப்பதில்லையா ? அது போல தான். சாதாரண செய்திக்கே முத்து மாலை என்றால் ஆண்டாளின் மாலைக்கு ? அதனால் தான் பெரியாழ்வார். 



ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனில்  சோதி வந்தான் வாழியே

தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும் தம் அப்பன் வாழியே

செல்வ நம்பிதனைப் போலச்   சிறப்புற்றான் வாழியே

சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

தந்தை           : முகுந்தர்

தாய்              : பதுமவல்லி

பிறந்த நாள்  : 9ம் நூற்றாண்டு குரோதன ஆண்டு ஆனி மாதம்

நட்சத்திரம்    : சுவாதி (வளர்பிறை ஏகாதசி திதி)

கிழமை           : திங்கள்

எழுதிய நூல்   : பெரியாழ்வார் திருமொழி

பாடிய பாடல் : 473

சிறப்பு : திருமாலின் வாகனமான கருடனின் அம்சம்

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டும், பெரியாழ்வார் திருமொழியும் ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் முதல் ஆயிரத்தில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளன.

இதில் பெரியாழ்வார் திருமொழியில் ஆழ்வார் யசோதை பாவனையில் ஸ்ரீ கண்ணபிரானின் குழந்தைப் பருவ வைபவங்களைப் பாடிய பாசுரங்கள் தனித்துவமாக விளங்குகின்றன.

இவை தமிழ் இலக்கியத்தில் "பிள்ளைத் தமிழ்" என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தவை.

தமிழ் இலக்கியத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன.

அவற்றுக்கு எல்லாம் ஆதி பிள்ளைத்தமிழ் காவியமாகவும், சிகரம் வைத்தாற் போலப் பிரகாசிப்பதும்  பெரியாழ்வார் பாடிய கண்ணன் பிள்ளைத்தமிழ் ஆகும்.


முந்தைய  பதிவுகள் ...
















பெரியாழ்வார் திருமொழி

முதற் பத்து
முதல் திருமாெழி


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*   உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு (2)

1

          

அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே 

2

          

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்*  வந்து மண்ணும் மணமும் கொண்மின்* 
கூழாட்பட்டு நின்றீர்களை*  எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்*  இராக்கதர் வாழ்*  இலங்கை 
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே

3

 

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து*  எங்கள் குழாம்புகுந்து*
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி*  வந்துஒல்லைக் கூடுமினோ*
நாடும் நகரமும் நன்கறிய*  நமோ நாராய ணாயவென்று*
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்*  வ‌ந்து பல்லாண்டு கூறுமினே

4
          



அண்டக் குலத்துக்கு அதிபதி*  ஆகி அசுரர் இராக்கதரை* 
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த*  இருடிகேசன் தனக்கு* 
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது*  ஆயிர நாமம் சொல்லிப்* 
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து*  பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே  

5













ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே!
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் - நன்றிபுனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர்பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள்

16


உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்

20








    ஓம் நமோ நாராயணாய நம!!
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!


அன்புடன் 
அனுபிரேம் 💛💛

No comments:

Post a Comment