இன்று சித்திரையில், கார்த்திகை உய்யக்கொண்டார் என்று நாதமுனிகளால் போற்றப்பட்ட, ஸ்ரீபுண்டரீகாக்ஷரின் 1200வது திருநக்ஷத்திரம்! (19.04.2026)
உய்யக் கொண்டார் வாழித் திருநாமம்:
வால வெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே !!!
உய்யக்கொண்டார் அவதார ஸ்தலம் திருவெள்ளறை!
திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் திருநாமம் தான், இவருடைய இயற்பெயர்!
நாதமுனிகள், நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிர திவ்யபிரபந்தங்களைப் பெற்றபோது, எதிர்வரும் காலத்தில் ஜகதாசார்யராக அவதரிக்கப் போகும், ராமாநுஜர் விக்ரஹத்தையும் (பவிஷ்யதாசார்யர்) உடன் பெற்றார். அந்த விக்ரஹத்துக்கு நாதமுனிகள் திருவாராதனம் செய்து வந்தார். தம் அந்திமக் காலத்தில் அந்த விக்ரஹத்தை உய்யக்கொண்டாரிடம் கொடுத்து, தமக்குப் பேரனாகத் தோன்றப்போகும், யமுனைத்துறைவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்!
உய்யக்கொண்டாரும் தம் காலத்தில், அந்த ராமாநுஜர் விக்ரஹத்திற்கு திருவாராதனம் செய்து வந்தார்!
ஒரு சமயம், உய்யக்கொண்டாரின் ஆசார்யர் நாதமுனிகள், தம் தேவியரை (அரவிந்தப்பாவையார்) அவர்தம் தாய்வீட்டுக்கு கொண்டு விட்டு வருமாறு, சீடர் உய்யக்கொண்டாரைப் பணித்தார். அவ்வாறு சென்ற உய்யக்கொண்டாரின் மேன்மையை அறியாத அங்குள்ளோர், அவரை வீட்டு முற்றத்தில் ஓர் ஓரத்தில் உட்கார வைத்து பழைய சாதமும், நீர்மோரும் கொடுத்தார்களாம். ஆனால் அவர் அதை ஆசார்ய பரிஜனம் அருளிய உன்னத பிரசாதம் என்று மிகப் பரவசத்துடன் ஸ்வீகரித்தாராம்.
தத் உச்சிஷ்டம் சுகாவஹம் என்று!
இதை அறிந்த நாதமுனிகள், உய்யக்கொண்டாரின் நிஷ்டையை மெச்சி என்னை உய்யக் கொண்டீரோ என்று வியந்து பாராட்டினார், அதுவே அவரது திருநாமம் ஆயிற்று!
இவருக்கு உய்யக்கொண்டார் என்னும் பெயர் வர, வேறொரு வைபவமும் பிரதானமாகச் சொல்லப்படுகிறது - நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தில் வல்லவர்! அஷ்டாங்க யோகம் மூலம் ஒருவர் உடல் உபாதைகள் பற்றி யோசிக்காமல், எந்தத் தடையும் இல்லாமல், எம்பெருமானை அனுபவிக்க முடியும். அந்த யோகத்தின் மூலம் அவர் மோட்சமும் அடைய முடியும்!
நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் அஷ்டாங்க யோகம் கற்றுக் கொள்கிறீரா என்று கேட்க, இவர் "பிணம் கிடக்க மணம் புணர்வார் உணாடோ?"
(இழவு வீட்டில் திருமணம் நடக்கலாமா) என்றார்.
இதன் உள்ளுறைப் பொருள், அறியாமையால், பலரும் இந்த சம்சாரத்தில் இருந்து கஷ்டப்பட, அடியேன் மட்டும் தனியாக எப்படி பகவத் அனுபவம் பண்ண முடியும்? எனவே, அனைவரும் உய்யும் வழிவகை சொல்லுங்கள்" என்று வேண்டினாராம்!
நாதமுனிகள் அவருடைய பரந்த உள்ளத்தை வியந்து நீரே உலகையும், உலகையுடைய ஸ்ரீமந்நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச்செயல்களையும், அவற்றைப் பெற்ற அடியேனையும், உய்யக் கொண்டவர் என்று பாராட்டி, அருளிச் செயல்களையும் அதன் அர்த்தத்தையும், ரஹஸ்யார்த்தங்களையும் முழுதும் அருளினார்!
உய்யக்கொண்டார் திருவெள்ளறையில் எழுந்தருளியிருந்த காலத்தில், கோவிலுக்குப் பின்னால் உள்ள பாறையில் அமர்ந்து தம் சீடர்களுக்கு இவற்றை அனுதினமும் உபதேசித்து வந்தார். அந்தப் பாறை, உய்யக்கொண்டார் பாறை என்று அழைக்கப் படுகிறது!
திருப்பாவை சம்பந்தம்
நாம் நாளும் சேவிக்கும் திருப்பாவைத் தனியன்களான,
'அன்னவயல் புதுவைஆண்டாள்',மற்றும் 'சூடிக்கொடுத்த சுடர் கொடியே' பாடியவர் உய்யக்கொண்டார் தான்.(இவர் வேறு கிரந்தங்களோ, தனியன்களோஇயற்றியதாகத் தெரியவில்லை)
ஆண்டாளுக்கு "ஆண்டாள்" என்னும் அற்புதமான திருநாமத்தை முதன் முதலாகப் பாடி அழைத்தவர் உய்யக்கொண்டார் தான்.
பெரியாழ்வாரோ/ஆண்டாளோ அவர்களது பாசுரங்களில் எங்கும்,’ஆண்டாள்' என்று குறிப்பிடவில்லை. ஆண்டாளே தம்மைக் "கோதை"--பட்டர்பிரான் கோதை/விட்டுசித்தன் கோதை / என்றே சொல்லிக் கொண்டார்
![]() |
1376.
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*
அகல் இடம் முழுதினையும்*
பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து
எழுவேன்* எனக்கு அருள்புரியே,*
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி* வண்டு
உழிதர* மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத்* திரு
வெள்ளறை நின்றானே.
1851.
துளக்கம் இல் சுடரை* அவுணன் உடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப் போய்*
அளப்பு இல் ஆர் அமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினைச்* சென்று வெள்ளறைக் காண்டுமே.
அன்புடன்
அனுபிரேம் 💖💖💖




No comments:
Post a Comment