ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் ஸ்வாமி எம்பெருமானார் சித்திரைத்திங்கள் திருஅவதார திருநக்ஷத்திர மஹோற்சவ திவ்யலங்கார திவ்யசேவை...
இராமானுச நூற்றந்தாதி
நாற்பத்து நான்காம் பாசுரம். இப்படி எம்பெருமானார் பெருமையை உபதேசித்த பின்பும் ஒருவரும் எம்பெருமானார் விஷயத்தில் ஈடுபடாததைப் பார்த்து அவர்களுடைய தன்மையை நினைத்து வருந்துகிறார்.
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும், எல்லை
இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண் அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி,
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே 44
பெரிய பூமியில் உள்ளவர்கள் புருஷார்த்தம் (குறிக்கோள்) எது என்று ஆசைப்படுவார்கள். சொல் வளத்தைக் கொண்டதாய் தனித்துவம் வாய்ந்ததாய் இயல் இசை நாடகம் என்று மூன்று வகையாக இருக்கும் தமிழும், ரிக் யஜுர் ஸாம அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் கணக்கிலடங்காத தர்ம மார்க்கங்கள் எல்லாமும் அலகலகாக ஆராய்ந்திருப்பவராய், நினைக்கப் பார்த்தால் நினைத்து முடிக்க முடியாததான கல்யாண குணங்களையுடையவராய், நல்லவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனந்தத்துடன் கொண்டாடும்படியிருக்கும் எம்பெருமானாருடைய திருநாமத்தை, நான் சொன்ன வார்த்தையை நம்பி, தெரிந்து கொண்டு சொல்லாமல் இருக்கிறார்கள். ஐயோ! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
உபதேச ரத்தின மாலை
இருபத்தேழாம் பாசுரம்
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் – என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நாற்றிசையும் கொண்டாடும் நாள்
இனி ஆழ்வார்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்ற, அவர்களுக்கு சேஷபூதரான, மற்றெல்லோருக்கும் நாதரான எம்பெருமானாரின் திருநக்ஷத்ர வைபவத்தை மூன்று பாசுரங்களில் அனுபவிக்கிறார். இப்பாசுரத்தில் எம்பெருமானார் அவதரித்த சித்திரையில் திருவாதிரைத் திருநாளின் ஏற்றத்தை உலகத்தாருக்கு நன்றாக அறிவிக்கிறார்.
உலகத்தவர்களே! இன்று சித்திரை மாதத்தில் சிறந்த நாளான திருவாதிரை நன்னாள். ஏனைய நாட்களைவிட இந்நாளுக்கு உண்டான ஏற்றம் என்ன என்று கேட்பர்களுக்கு நான் சொல்லுகிறேன், கேளுங்கள். யதிகட்கு இறைவனான எம்பெருமானார் திருவவதாரத்தாலே, நான்கு திசைகளிலும் இருக்கும் மக்களும் கொண்டாடும் ஏற்றத்தைப் பெற்ற நாள் இன்று.
மணவாள மாமுனிகள் தாமே ஆர்த்தி ப்ரபந்தத்தில் “அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா” என்று எம்பெருமானாரை அழைக்கிறார். எம்பெருமானார் அவதாரத்தாலே உலகத்தில் உள்ளவர் எல்லோரும் எம்பெருமானார் மூலமாகவே எம்பெருமானை அடைந்து உஜ்ஜீவனத்தைப் பெறலாம் என்பது திண்ணமாயிற்று. இப்படிப்பட்ட பெருமையை இவர் பெற்றிருப்பதாலே, இவர் அவதரித்த நாள் உலகத்தில் உள்ள அனைவராலும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
![]() |
முந்தைய பதிவுகள்...
எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1008 ஆவது திருநட்சத்திரம் 2025
மேல்கோட்டை - “தமர் உகந்த திருமேனி” 2025
ஸ்ரீபெரும்புதூரில் --- “தானுகந்த திருமேனி” 2025
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு (2023).....
அன்புடன்
அனுபிரேம்💖💖










No comments:
Post a Comment