20 April 2026

ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- சித்திரையில் ரோகிணி

 இன்று (20/04/2026) சித்திரையில் ரோகிணி.

ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீ பாஷ்யம் சொல்லச்,சொல்ல அதை ஓலைச் சுவடியில் எழுதி முடித்த "ஸ்ரீ எங்கள் ஆழ்வானின்" திருநட்சித்திரம்.

திருவெள்ளறையில் அவதரித்த இவரது இயற்பெயர் விஷ்ணுசித்தர்.






ஸ்ரீ எங்கள் ஆழ்வான்- வாழித்திநாமம்


சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே

 சித்திரை உரோகிணி நாள் சிறக்கவந்தோன் வாழியே

 பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே 

பங்கயச்செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே

 திருக்குருகைப்பிரான்பிள்ளான் திருவருளோன் வாழியே

 தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே

 தாரணியில் விண்டு மதம் தழைக்கவந்தோன் வாழியே 

தண்ணிளியோன் எங்காளழவான் தாளிணைகள் வாழியே.


ஸ்ரீ எங்கள் ஆழ்வான்

 திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி

அவதார ஸ்தலம் : திருவெள்ளறை

ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்

சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள்

பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)

 காலம் - 1069-1169 

க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்)

திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். 

இவர் பகவத்விஷய காலஷேபமும் ஸ்ரீபாஷ்ய காலஷேபமும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடியில் அதிகரித்துக்கொண்டார்.

 ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.



திருவெள்ளறை கைங்கர்யம்:

திருவெள்ளறையில் எம்பெருமானார் வாசம் செய்த இரண்டு ஆண்டுகளிலும் அவருடனேயே இருந்து, அனைத்து கைங்கர்யங்களையும் செவ்வனே செய்தார். அவர் உபயோகத்துக்காகவே ஒரு குளம் வெட்டி அதற்கு 'உடையவர் குளம்' என்று பெயரிட்டார்.

அந்தக்குளம் கோவிலுக்கு வடமேற்கே ஒரு கி.மீ.தூரத்தில் உள்ளது. இப்போது தண்ணீர் இல்லை. மழை பெய்தால் தண்ணீர் வரும்போலும்.

அங்கு உள்ள சிதிலமடைந்த, பெருமாள் சிலைகள் அங்கு ஒரு கோவில் இருந்ததைக் காட்டுகிறது.

உடையவருடைய சிலையும் அங்கு இருந்ததாக அருகில் வசிப்போர் கூறுகிறார்கள். அந்த குக்கிராமத்துக்கே 'உடையவர் குளம்' என்று பெயர்.


ஸ்ரீபாஷ்யம் கிரந்தக் கைங்கர்யம்:

ராமாநுஜர் உகந்தருளிய ஸ்ரீபாஷ்யத்தை, கூரத்தாழ்வான் ஓலைச்சுவடிகளில் எழுதினார். ஆனால், அவர் தம் கண்களை ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்துக்காக, கிருமி கண்ட சோழன் அரசவையில் தியாகம் செய்ததால், அவரால் தொடர்ந்து எழுதமுடியவில்லை ஸ்ரீபாஷ்யத்தை முடிக்க ராமாநுஜர் ஆழ்வானைப் போல ஒரு ஞானவிருத்தரைத் தேடிக் கொண்டிருந்தார். விஷ்ணுசித்தரைப் பற்றி சிலர் சொல்லக் கேட்டு, அவர் மூலம் எழுதி முடித்தார்.


கூரேசர் கூரத்து ஆழ்வான் ஆனதும்,

விஷ்ணுசித்தர் எங்கள் ஆழ்வான் ஆனதும்:


கூரேசர் திருவாய்மொழியில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆழ்ந்து விடுவார்.

உணர்ச்சிப் பெருக்கில் தம்மை மறந்த நிலையில் இருப்பார். இதனால் ராமானுஜர் இவரை "ஆழ்வான்" (ஆழ்வாரில்) என்றழைத்தார்.

கூரேசருக்கு, உடையவர், திருவாய் மொழிந்த, ஆழ்வான் என்ற பெயரே நிலைத்து விட்டது. விஷ்ணு சித்தர் ஸ்ரீ பாஷ்யம் எழுதும்போது அவரது சாஸ்திர/சம்பிரதாய ஞானம், கைங்கர்யங்கள், ஆசார்ய அபிமானம் எல்லாம் கூரத்தாழ்வான் போல் இருந்ததால் " நீர் எங்கள் ஆழ்வானோ ?"என்று வியந்தார். அப்போதிருந்து அவர் “எங்கள் ஆழ்வான்"ஆனார். 


ஸ்ரீபாஷ்ய காலட்சேபம்:

ராமாநுஜரிடம் இருந்த ஸ்ரீபாஷ்ய சிம்மாசனத்தைப் பெற்ற 'நடாதூர் ஆழ்வான்' என்னும் ஆசார்யரின் திருப்பேரர் 'வாத்ஸ்ய வரதாசார்யர்' (நடாதூர் அம்மாள்') நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீ பாஷ்யம் காலட்சேபம் கேட்க விழைந்தார்.

ஆழ்வான் தாம் தள்ளாத வயதில், தளர்ந்திருப்பதால், எங்கள்ஆழ்வானிடம் சென்று கேட்குமாறு பணித்தார்.

காஞ்சியிலிருந்து, திருவெள்ளறை வந்த வரதாசார்யர், எங்கள்ஆழ்வான் திருமாளிகைக் கதவைத் தட்டி 'நான்,வரதன் வந்திருக்கிறேன்' என்றார்.

உள்ளி்ருந்த எங்களாழ்வான் "நான் செத்தபின் வாரும்' என்று கூறினார். 

இது கேட்டுத் திகைத்த அவர் ஒன்றும் புரியாமல், காஞ்சிக்கே திரும்பிச் சென்று, தம் பிதாமகரிடம் நடந்ததைக் கூறினார்.

அவர் இவரிடம் "நீ இன்னும் பக்குவப்படாமல் 'நான்'என்று சொல்லியதால், அவர் அப்படிக் கூறினார். "நான்"என்னும் அகங்காரத்தைத் தொலைத்தால் தான் (அது செத்தால் தான்) ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பக்குவப்பட முடியும். மீண்டும் சென்று அவரிடம் "அடியேன் என்று சொல்"என்றார்.

மீண்டும் வந்த அம்மாள் "அடியேன்,தாசன் வரதன்" என்றார்.

எங்களாழ்வான் அவரை உகந்து வரவேற்று அவருக்கு ஸ்ரீபாஷ்யம், அதன் விசேஷ அர்த்தங்களை விரிவாக காலட்சேபம் செய்தார்.வரதாசார்யரே மிகவும் கீர்த்தி வாய்ந்த ஸ்ரீபாஷ்ய சிம்மம் எனத் திகழ்ந்த 'நடாதூர் அம்மாள்'.

எங்கள் ஆழ்வான்,தம் வாழ்நாள் முழுதும் தகுந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் காலட்சேபம் செய்து வந்தார். 

தம் அந்திமக் காலத்தில் திருவெள்ளறையை விட்டு, ராஜபாளையத்துக்குச் சற்றுத் தெற்கே உள்ள 'கொல்லங்கொண்டான்' என்னும் ஊரில் இருந்தார்.

அங்கிருந்தும் நடாதூர் அம்மாளுக்கு காலட்சேபம் செய்தார். அவர் இறுதிக்காலம் வரை (100 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.)

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் செய்து வந்தார்.


ஜகதாசார்யரும்,அம்மாள் ஆசார்யரும்

ஒரு முறை கூரத்தாழ்வானிடம் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் 'ஜகதாசார்யர்' யார் என்று கேட்க,ஆழ்வான்  பெரிய பெருமாள் திருமுன்பே நின்று,சென்று,

"சத்யம்,சத்யம், புனஸ்சத்யம் ஜகத்குரோ: ராமாநுஜ முனிம்" என்று சத்யம் செய்தாராம். (இந்த ஜகத்துக்கே அவர் உடையவர், ஆதலால் ஜகத்தில் உள்ளோர் அனைவருக்கும் ஆசார்யர்).

நடாதூர் அம்மாளின் கீர்த்தியும், மேன்மையும் அவர்தம் ஆசார்யருக்கே உரியது என்று, அவர் அர்ப்பணிக்க அவர் ஆசார்யர் எங்கள்ஆழ்வான் "அம்மாள் ஆசார்யன்" என்று அழைக்கப்பட்டார்.

இன்றும் எங்கள் ஆழ்வான் வம்சத்தினர் அம்மாள் ஆசார்யன் என்று அறியப்படுகின்றனர்.


கனவில் தோன்றி அருளிச் செய்த பெருமாள்!!

எம்பெருமானாருக்கு பல திவ்யதேசங்களில், எழுந்தருளியிருக்கும், பெருமாளும் கனவில் தோன்றி அருளியுள்ளனர். 

காஞ்சி தேவப் பெருமாள் பல முறை.

மேலும் ஸ்ரீரங்கம் பெரிய பிராட்டியார்; பூரி ஜெகந்நாதர்; ஸ்ரீகூர்மம் கூர்மநாதர் ஆகியோர்.

எங்கள் ஆழ்வான் கனவிலும் ஸ்ரீகண்ணன் எம்பெருமான் தோன்றி,

தம்பெயர் "ஆயர்தேவு என்றும், தாம் நஞ்ஜீயர் (ஸ்ரீரங்கம்) திருமாளிகையில் எழுந்தருளி இருப்பதாகவும் தமக்கு 'நாவல்பழங்களும்,வெண்ணெயும்' வேண்டும் என்று அருளினார்.

மறுநாள் காலை, எங்கள்ஆழ்வான் ஒரு கூடையில் நாவல்பழங்களையும்,

வெண்ணெயும் எடுத்துக் கொண்டு நஞ்ஜீயர் திருமாளிகைக்குச்சென்று,

'"ஆயர்தேவு"க்காக பழங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். 

இதைக் கேட்டு அதிர்ந்தார் நஞ்ஜீயர். 

தம்திருவாராதனைப் பெருமாளுக்கு, தாம் சூட்டிய செல்லப் பெயர் 'ஆயர்தேவு', தமக்கு மட்டும் தானே தெரியும்.

இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்து கேட்க,எங்களாழ்வான் நடந்ததைச்சொன்னார்.

உள்ளம் உருகிய நஞ்ஜீயர் ஆயர்தேவுப் பெருமாளின் மேன்மை/நீர்மை/எளிமை கண்டு கண்ணீர் விட்டார். 

எங்களாழ்வானிடம் ”ஆயர்தேவு உகந்தவர் நீரே"என்று போற்றினார்.


எங்கள் ஆழ்வான் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர்.

உடையவரை விட 80 ஆண்டுகள் இளையவர்.

இவரது திருவரசு கல்லங்கொண்டானில் உள்ளது.

(-- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்-- நன்றி சுவாமி )



1374.   

ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  

அரக்கன் தன் சிரம் எல்லாம்* 

வேறு வேறு உக வில் அது

 வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*

மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  

தாமரை மலர் வார்ந்த* 

தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*

  திருவெள்ளறை நின்றானே. 7



1375.   

முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி*  இருள் மிக

 உம்பர்கள் தொழுது ஏத்த* 

அன்னம் ஆகி, அன்று அரு மறை 

பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,

மன்னு கேதகை, சூதகம் என்று இவை*  

வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 

தென்ன என்ன, வண்டு இன் இசை முரல்*  திரு

வெள்ளறை நின்றானே.      8



ஸ்ரீ எங்கள் ஆழ்வான் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம் 💖💖💖

No comments:

Post a Comment