03 April 2026

திருவரங்கத்து அமுதனார் --- பங்குனி ஹஸ்தம்.

அண்ணல் இராமானுசரை, அநுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி தந்த திருவரங்கத்து அமுதனார் திருநட்சத்திரம்  -  நேற்று  (02/04/2026)--பங்குனி ஹஸ்தம்.




திருவரங்கத்தமுதனார் வாழி திருநாமம் !


"எந்தாதை கூரேசன் இணையடியோன் வாழியே !

எழில் மூங்கிற்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே !

நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே !

நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே !

பைந்தாம் அவ்வரங்கர் பதம் பற்றினான் வாழியே !

பங்குனியில் அத்த நாள் பாருதித்தோன் வாழியே !

அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே !

அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே !!!"


.'பெரிய கோயில் நம்பி' என்று அறியப்பட்ட இவர் பாடிய இராமானுச நூற்றந்தாதி அமுதம் போன்றிருந்ததால், உடையவர் இவரை "அமுதனார்" என்று போற்றினார்.




ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்த மஹான்கள் எல்லோருமே பெரும் தியாகங்களைச் செய்துள்ளார்கள்.

இந்த வரிசையின் தலைவர் தியாகராஜர் என்று போற்றப்படும் காஞ்சி தேவப்பெருமாள்! பேரருளாளர் !!

அவர் யாக நெருப்பில் தம்மையே தியாகம் செய்து திருமேனி எங்கும் தீப்புண் பெற்றார்.தம்முடைய திருக்குமாரைப் போலப் பாவித்து, காத்து, வளர்த்து, தவராசன் ஆக்கிய இராமாநுசரை ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்குத் தியாகம் செய்தார்.

அவரோடு சேர்த்து கூரத்தாழ்வான், முதலியாண்டான் மற்றும் பல சிறந்த ஆசார்யர்களையும் தியாகம் செய்தார்.

தாமே பிள்ளை லோகாசார்யராக ஸ்ரீரங்கத்தில் அவதாரம் செய்தார்.

தை ஹஸ்தத்தில் அவதரித்த கூரத்தாழ்வான் "(ஸ்ரீவைஷ்ணவ)  தரிசனம் காக்க தம் தரிசனம் இழந்தார் "கிருமி கண்ட சோழனிடமிருந்து இராமாநுசரைக் காப்பாற்ற தம் இரு கண்களையும் தாமே பிடுங்கி எறிந்து தியாகம் செய்தார். கூரத்தில் ராஜாவாக, மிகப் பெரிய செல்வந்தராக இருந்த ஆழ்வானும், அவர்தம் தேவியர் ஆண்டாளும் அனைத்து செல்வங்களையும் ஒரு வினாடியில் துறந்து,உடுத்திய வஸ்திரத்துடன் வந்து இராமாநுசர் திருவடிகளில் சரணடைந்தனர். 




பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த நம் திருவரங்கத்து அமுதனார், 'பெரிய கோயில் நம்பி' (பெரிய கோயிலின் தலைமை அதிகாரி/நிர்வாக அறங்காவலர்) என்னும் உயர்ந்த பொறுப்பையே இராமானுசருக்காகத் தியாகம் செய்தார்.

அந்தக் காலத்தில் மிகப்பெரிய கெளரவமான பதவி ! தம்மிடம் இருந்த கோயில் சாவியையும், நிர்வாகப் பொறுப்பையும் கூரத்தாழ்வான் மூலம் இராமாநுசர் வசம் ஒப்படைத்தார். பெரிய கோயிலில் அவர் செய்து வந்த புரோகிதக் கைங்கர்யம், பெற்று வந்த கோயில் மரியாதைகள் அனைத்தையும் தியாகம் செய்தார். இராமாநுசர் நியமனப்படி ஆழ்வானை ஆசார்யராக ஏற்றார்.

 பெரிய கோயில் நம்பி என்றழைக்கப்பட்ட திருவரங்கத்து அமுதனார், ராமானுசர் காலத்திலேயே "இராமானுச நூற்றந்தாதி" இயற்றினார். அதை அவரே பாட இராமானுசர் கேட்டு மங்களாசாசனம் செய்தார்.

ஒரு நாள் இராமாநுசரை வர வேண்டாம் என்று நியமித்து,

பெரியபெருமாளே அமுதனாரைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்!!.

ஆழ்வார்களின் அருளிச்செயல் வரிசையில் "இராமாநுச நூற்றந்தாதி"யையும்

 "நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில்" சேர்க்குமாறு பெருமாள் நியமித்தார்.


பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 

பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 

தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 

நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)


ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களில் கடைசி இரண்டு பாசுரங்களும் சாற்றுமறைப் பாசுரங்களாக இரண்டு முறை சேவிக்கப் படும். ஆனால் அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் மூன்று பாசுரங்கள்-

 "இருப்பிடம்வைகுந்தம்"(106),

"இன்புற்ற சீலத்து இராமாநுச"(107),

"அங்கயல் பாய் வயல்"(108)

சாற்றுமறைப் பாசுரங்கள். 

இதற்குக் காரணம் அமுதனாரும் அவர் சீடர்களும் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் அமர்ந்து, இராமாநுச நூற்றந்தாதி எழுதிக் கொண்டிருந்தனர்.

105 ஆவது பாசுரம் முடித்து, 106 தொடங்கும் முன்னர் அழகிய சிங்கரைச் சேவிக்க உடையவரே அங்கு வந்து விட்டார். உடனே அவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரைச் சேவித்தனர். சாற்றுமறைப் பாசுரங்களை எழுந்து நின்று சேவிப்பதால், எழுந்து நின்றதற்குப் பின்னால் சேவித்த மூன்று பாசுரங்களும் சாற்று மறைப் பாசுரங்கள் ஆயின!!!

இராமாநுச நூற்றந்தாதி உற்சவம் !!

பங்குனி பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று  இரவு (அமுதனார் அவதரித்த ஹஸ்த நட்சித்திரத்தில்) ,"சப்தாவரணம்" (சப்தம் இல்லாமல் பெருமாள் வீதி உலா வருவது) நடைபெறும்.

பெருமாள், வீதி புறப்பாடு நடக்கும்போது  அத்யாபக கோஷ்டியாரை  இராமானுச நூற்றந்தாதி பாசுரத்தைக் கோஷ்டியில் சாதிக்கச் சொல்லித், தானும் மற்ற அனைத்து மக்களும் காதுகுளிரக் கேட்பதற்காகப் பெரிய மேளத்தை, விடுத்து சிறிய மிருதங்கத்தை இசைக்கச் சொல்லி கட்டளையிட்டார். இந்த காரணத்தினால் இந்த விழா சப்தாவரணம் எனப்படுகிறது.

ஸ்ரீ ரங்கா! ரங்கா கோபுரத்திலிருந்து புறப்படும் போது சில வினாடிகள் வாத்தியம் ஒலிக்கப்படும். பின்னர் உத்திர வீதியின் நான்கு மூலைகளிலும் பெருமாள் எழுந்தருளும் போது சில வினாடிகள் ஒலிக்கப்படும். (பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருள்கிறார் என்று அந்தந்த வீதிகளில் உள்ளோர் அறிகைக்காக). மற்றபடி மிக அமைதியாக அத்யாபகர்கள் இராமாநுச நூற்றந்தாதி சேவிப்பது மட்டும் கேட்கும். பெருமாளும் தம் "உடையவரின்" பெருமையைப் கவனமாகக் கேட்டு இன்புற்று வருவார்.

இந்த திருநாளில் பெருமாள் வீதி வலம் வந்தபின், தாயார் சந்நிதியில் திருவந்திக்காப்பு கண்டருளி, உடையவர் சந்நிதிக்கு எழுந்தருள்வார். இராமாநுசரும் கைத்தலமாக (அர்ச்சகர் கையில் தாங்கியபடி) சந்நிதி திருமுற்றத்தில் எழுந்தருளி,

பெருமாளைக்கண்குளிரச் சேவிப்பார். 

பெருமாள் இராமாநுசருக்கு உடுத்துக் களைந்த பீதக ஆடை,மாலை, சந்தனம், தீர்த்தம்,சடாரி சாதிப்பார். இராமாநுசர் பெருமாளுக்கு இளநீர் அமுது நைவேத்யம் செய்வார்.

பெருமாள் போனகம் செய்த சேடத்தை புனிதமாக ஸ்வீகரித்துக் கொள்வார் இராமாநுசர்.

இந்த இராமாநுச நூற்றந்தாதி சப்தாவரணம் விழா பங்குனி உற்சவத்தில் மட்டுமல்லாது, தை,மற்றும் சித்திரை உற்சவங்களின் பத்தாம் நாளன்றும், இதே போல நடைபெறுகிறது.








ராமானுஜ நூற்றந்தாதி


106

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 

பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-

இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  

இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)

2896



   107

இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 

என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-

துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 

அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 


2897


   108

அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 

பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 

தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *

பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)

2898


                                 திருவரங்கத்து அமுதனார்திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம் 💖💖💖

No comments:

Post a Comment