22 April 2026

எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1009 ஆவது திருநட்சத்திரம்





எம்பெருமானார் வைபவம்

ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய அவதாரம்.  

ஜகதாசார்யன் என்று அறியப்படுகிறார். 

 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு நடுநாயகமாக இருக்கக் கூடியவர்.

 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் ஆல வ்ருக்ஷமாக வளரச் செய்தவர். 

 நம்மாழ்வார் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அறிவோம். அவர் வளர்த்த சம்பிரதாயத்தை பெரிய அளவில் வளரச் செய்தவர்.

  எம்பெருமானாருக்கு தனிச் சிறப்புகள் உண்டு. அவர் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே அவருடைய திருமேனி நம்மாழ்வாரால் காட்டிக் கொடுக்கப்பட்டது.  

எழுபத்து நான்கு சிம்ஹாசனாதிபதிகளைக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமானது பரவ வேண்டும் என்று பாடுபட்டவர்.   


"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்

ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்

ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று

பேசி வரம்பறுத்தார் பின்."


 என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் அருளிச் செய்த வண்ணம் எம்பெருமானை அடைய விரும்புபவர்கள் அனைவர்க்கும் இந்த உபதேசங்கள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினார். 

 அனைத்தது ஆத்மாக்களும் எம்பெருமானை அடைவதற்கு உரிமை பெற்றது. 

 அவைகளுடைய உரிமையை நாம் கொடுக்க வேண்டும் என்று கருணையுடன் “காரேய் கருணை இராமாநுசா” என்றபடி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்.

 அனைத்து திவ்ய தேசங்களையும் சீர் திருத்தி ஆங்காங்கே எம்பெருமானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் (திருவாதாரனம், தளிகை, பாசுரங்கள் சேவிப்பது, உத்ஸவங்கள் முதலியவை) சிறப்பாக நடக்கும்படிச் செய்தவர். 

  இந்த உலகில் உள்ள அனைத்து திவ்யதேசங்களிலும் அனைத்து கைங்கர்யங்களும் குறைவற நடக்கும்படி ஏற்பாடு செய்தவர். 

 இன்றளவும் எம்பெருமானர் வளர்த்த சம்பிரதாயம் பாரத தேசம் முழுவதும் பரந்து, விரிந்து, வளர்ந்து இருக்கிறது.


இவர் ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தவர்.  சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  

நவரத்நங்களைப் போன்று ஒன்பது க்ரந்தங்களை அருளிச் செய்தள்ளார். 

 அவையாவன ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த சங்க்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம் (திருவாராதன க்ரமம்) ஆகும்.  

இவை அனைத்தும் சம்ஸ்க்ருத க்ரந்தங்களாகும்.

 தமிழில் எம்பெருமானார் எந்த க்ரந்தமும் அருளிச் செய்யவில்லை. வேதாந்தத்தின் கருத்துக்களை ஸ்ரீபாஷ்யத்திலும், வேதார்த்த சங்க்ரஹத்திலும், வேதாந்த தீபம் மற்றும் வேதாந்த சாரத்திலும் எடுத்துரைத்துள்ளார்.  கீதா பாஷ்யத்தில் பகவத்கீதைக்கு சிறப்பான வ்யாக்யானம் அருளியுள்ளார்.  

கத்யத்ரயம் மூலமாக சம்பிரதாயத்தின் மிக முக்கியக் கருத்தான சரணாகதியை நிலை நாட்டியுள்ளார்.  

நித்ய க்ரந்தம் மூலமாக திருவாராதனம் செய்யும் முறையை எடுத்துக் காட்டியுள்ளார்.  திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும் முறையை தொடங்கி வைத்தவர்.  இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டவர்.







எம்பெருமானார் வாழி திருநாமம்


அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே


எம்பெருமானார் வாழி திருநாமம் விளக்கவுரை

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே –  இளையாழ்வாராக ஸ்ரீராமானுஜர் இருந்த காலத்திலேயே திருக்கச்சி நம்பிகளின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டு தேவப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்.    தேவப் பெருமாளின் முன்புதான் ஸ்ரீராமானுஜர் சந்நியாசம் மேற்கொண்டார்.  பேரருளாளப் பெருமாள் தான் எதிராசர் (எதிகளுக்குத் தலைவன்) என்ற பெயரையும் ஸ்ரீராமானுஜருக்குச் சூட்டியவர். அத்திகிரி (ஹஸ்திகிரி எனப்படும் காஞ்சீபுரம்) பேரருளாள எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்த எம்பெருமானார் வாழ்க.


அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே –  ஸ்ரீராமானுஜருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன.  திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளிடம் விடை பெற்று வருமாறு வேண்டினார்.  திருக்கச்சி நம்பிகள் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் தேவப் பெருமாளிடம் சென்று இளையாழ்வாருக்கு ஆறு சந்தேகங்கள் உள்ளன என்று கூற தேவப்பெருமாளும் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் ஆறு வார்த்தைகளை அருளிச் செய்கிறார்.

  “அஹமேவ பரம் தத்துவம்”, நான் தான் உலகில் பரம்பொருள், நமக்கு மேலாகவோ சமமாகவோ வேறு தெய்வம் கிடையாது என்பதை முதல் வார்த்தையாகக் கூறினார்.  

 இரண்டவதாக பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்பதைக் குறிக்கும் வகையில் “பேதமே சம்பிரதாயம் “ என்று கூறினார். 

மூன்றாவதாக ப்ரபத்தி (சரணாகதி) தான் உபாயம் என்பதை ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழியாக அருளிச் செய்தார். 

 நான்காவதாக சரணாகதி செய்தவனுக்கு சரீரம் கீழே விழும்போது முக்தி கிடைத்துவிடும் என்று கூறினார். 

ஐந்தாவதாக சரீரம் கீழே விழும்போது சரணாகதி செய்தவனால் என்னை நினைக்க முடியவில்லை என்றால் அதைப் பற்றி ஒன்றும் குறைவில்லை.  நான் அவனை எப்போதும் நினைப்பதால் அவனைக் கைக் கொள்வேன் என்று ஐந்தாவது வார்த்தையாகக் கூறினார்.  

ஆறாவது வார்த்தை எம்பெருமானாருக்கு நேராக ஒரு உபதேசமாக அமைந்தது.  பூர்ணாசார்யர் எனப்படும் பெரிய நம்பியை அடைந்து ஆச்ரயிக்கவும் என்று ஆறாவது வார்த்தையாக தேவப்பெருமாள் இளையாழ்வாருக்குப் பணித்தார்.  

இவ்வாறு தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீஇராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஆறு வார்த்தைகளைப் பெற்ற இளையாழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.


பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே – பாடியம் என்பது ஸ்ரீபாஷ்யம் என்பதன் தமிழாக்கம்.  மிகுந்த பக்தியுடன் ஸ்ரீபாஷ்யத்தை இயற்றினார் ஸ்ரீராமானுஜர்.  இந்த க்ரந்தத்தை எழுதுவதற்காக கூரத்தாழ்வனை அழைத்துக் கொண்டு போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெறுவதற்காக காஷ்மீர தேசத்தில் உள்ள ஸ்ரீசாரதா பீடம் சென்றார்.  அந்தக் க்ரந்தத்தைப் பெற்று வரும் வழியில் அங்கு இருந்தவர்களால் க்ரந்தம் பறிக்கப் பெற்றது.   ஆனால் கூரத்தாழ்வான் மனதில் அந்தக் க்ரந்தத்தை க்ரஹித்து வைத்திருந்தமையால். திருவரங்கம் அடைந்தவுடன்  கூரத்தாழ்வானைக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை ராமானுஜர் அருளிச் செய்தார்.    

வேதாந்தத்தில் எம்பெருமானை அடைவதற்கு  முக்கியமான உபாயமாகக் கூறப்பட்ட பக்தி யோகமத்தை மையக் கருத்தாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்தார்.  பிற்காலத்தில் சரணாகதி கத்யத்தில் எம்பெருமானை அடைவதற்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி அடைவது தான் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறந்த வழி என்று எடுத்துக் காட்டியுள்ளார்.    வேதாந்திகளுக்காக சொல்லும்போது பக்தியோகம் எம்பெருமானை அடையச் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.  அவ்வாறு மேன்மை பெற்ற எம்பெருமானார் வாழ்க.


பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே – பத்து ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை பெரிய நம்பி மற்றும் திருக்கோஷ்டியூர் நம்பியும் பணித்தபடி திருவரங்கத்தில் திருமாலை ஆண்டானிடம் கற்றுத் தேர்ந்தார்.  அவ்வாறு ஆழ்வார் பாசுரங்களின் உட்கருத்துக்களையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தேர்ந்த எம்பெருமானார் வாழ்க.


சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே – மகிழ் மாறன் என்றால் நம்மாழ்வார். 

 எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று வேறு ஒன்றிலும் கருத்தைச் செலுத்தாமல் மனது சுத்தத்துடன் இருந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவனம் அடைந்த எம்பெருமானார் வாழ்க.

  “பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன்” என்ற இராமாநுச நூற்றந்தாதி பாசுரத்தின் படி மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானார் வாழ்க.  அதனால்தான் இன்றளவும் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் திருவடி நிலைகள் ஸ்ரீராமானுஜம் என்று அழைக்கப்படுகிறது. 

 ஏனென்றால் ராமானுஜர் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்வதற்குச் சென்ற போது நம்மாழ்வார் “வாரும் ராமானுஜரே, இனி எம் திருவடிகள் ஸ்ரீராமானுஜம் என்றே அழைக்கப் பெறும்” என்று உகப்புடன் அருளினார். 

 ஏனைய இடங்களில் நம்மாழ்வார் திருவடிகளுக்கு மதுரகவிகள் என்று தான் கூறுவர்.


தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே – மிகப் பழைமையான பெரிய நம்பியின் திருவடிகளில் ஆதரத்துடன் இருக்கக் கூடிய ராமானுஜர் பல்லாண்டு வாழ்க.


சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே – சித்திரை மாதம் திருவாதிரை (ஆதிரை என்ற நக்ஷத்திரம் ராமானுஜர் அவதரித்தமையால் திருவாதிரை என்றே அறியப்படுகிறது) நாளுக்கு ஏற்றம் தரும் வண்ணம் அந்நாளில் அவதரித்த எம்பெருமானார் வாழ்க.


சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே  – சிறப்புப் பெற்ற ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பகவத் ஸ்ரீராமாநுஜரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.






இராமானுச நூற்றந்தாதி

நாற்பத்தைந்தாம் பாசுரம். இப்படி அவர்களைப்போலே விமுகராய் இருந்த தம்மை எம்பெருமானார் நிர்ஹேதுகமாக ரக்ஷித்த விஷயத்தை நினைத்து தேவரீர் செய்த நன்மையை என் வாக்கால் சொல்லி முடிக்க முடியாது என்கிறார்.


பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு

ஆறு ஒன்றும் இல்லை மற்று அச்சரண் அன்றி என்று இப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்

கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே


உடையவரே! தேவரீர் திருவடிகளைத்தவிர வேறு ப்ராப்யம் (குறிக்கோள்) ஒன்றுமில்லை. அதைத் தருகைக்கு அத்திருவடிகளைத்தவிர வேறு உபாயம் (வழி) ஒன்றும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஆழ்ந்த ஞானத்தாலே நம்பியிருப்பவர்களுக்கும் அந்த நம்பிக்கை இல்லாத எனக்கும் வித்தியாசம் பார்க்காமல் எனக்கு தேவரீரைத் தந்தருளிய இந்த நேர்மையை உண்மையாகச் சொல்லப் பார்த்தால் வாக்கின் சக்திக்கு உட்பட்டதன்று.




உபதேச ரத்தின மாலை


ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும் 
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை


ருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார்.


உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யமானது. ஏனெனில் எல்லா உலகத்தில் உள்ளவரும் வாழ்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்தச் செம்மையான திருவாதிரை நாளில் ஸ்ரீராமானுஜர் வந்துதித்தார்.


ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். உலகத்தில் உள்ளோரின் வாழ்ச்சிக்காகப் பாசுரங்களை அருளிச்செய்த்வர்கள். அவர்கள் செய்ததை அடிப்படையாகக் கொண்டு, எம்பெருமானார் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் நன்மை பெறும்படி ஸம்ப்ரதாயத்தை நன்றாக நடத்தினார்.

அமுதனார் இராமானுச நூற்றந்தாதியில் “உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்காயினரே” என்று அருளிச்செய்துள்ளார். இதற்கு வ்யாக்யானம் அருளிய மாமுனிகள் இதே விஷயத்தை அங்கும் அனுபவித்தார். ஒரு பெரிய மஹானான, ஆதிசேஷ அவதாரமான எம்பெருமானார் அவதரித்த அக்காலத்திலேயே அங்கிருந்தவர்கள் நன்மை அடைந்தார்கள் என்றும், ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச்செய்து, ஜனங்களின் ஞானத்தை வளரச்செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார் என்றும் இரண்டு விளக்கங்களை அங்கே அருளிச்செய்துள்ளார்.







முந்தைய பதிவுகள்...

1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி   எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை -2026



ஸ்ரீரங்கம்    ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு (2023).....

சுவாமி  இராமானுஜர் (2023)






உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்
அனுபிரேம்💖💖


No comments:

Post a Comment