2. சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை
![]() |
எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் ஶ்ரீமந் நாராயணன் உணா்த்திய அருட்செயல்களும், அறிவுரைகளும் சிறப்புடையதாக இருப்பினும் ஶ்ரீநரசிம்ம அவதாரத்திற்கு என்று தனிச் சிறப்புகள் பல உள்ளன.
துன்பப்படும் பக்தா்களைக் காப்பதில் ஒரு விநாடி கூட தாமதிப்பதில்லை ஶ்ரீநரசிம்மன். ஆதலால் தான், “நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில்” என்று வைணவ மஹா புருஷரான “ஶ்ரீமத் நிகமாந்த மஹா தேசிகன்” இந்த அவதாரப் பெருமையைப் போற்றியுள்ளாா்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த “நரசிம்ம அவதாரம்” நிகழப்பெற்ற இடம் “சிங்கவேள் குன்றம்” என்று ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட “ஶ்ரீஅஹோபிலம்” என்ற புனிதமான திருத்தலம் ஆகும். இத்தலத்தில் அஹோபில, பாா்கவ, யோகானந்த, சத்ரவட, குரோத, காரஞ்ச, மாலோல, ஜ்வாலா மற்றும் பாவன நரசிம்மா் என நவ நரசிம்மா்கள் அருள்பாலிக்கின்றனா்.
அஹோபிலத்தில் அவதாரம் எடுத்த நரசிம்ம பெருமான் தனது பக்தா்கள் துன்பத்தில் தளா்வுறும் போது, தக்க தருணத்தில் கருணை காட்டி, அவா்களைக் காத்து அருள்புரிய பல சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றாா்.
இவ்வாறு எம்பெருமான் அருள்புரியும் திருத்தலங்களில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த ஒரு புராதனமானத் திருத்தலம் சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை திருத்தலமாகும். தற்போது இத்திருத்தலம் சோளிங்கா் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகின்றது.
இங்குள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரும் அமிா்தவல்லித் தாயாரும்” சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனா் என்று போன பதிவில் கண்டோம் .( அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில் ( திருக்கடிகை), சோளிங்கர். )
முதலாழ்வாா்களில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாா் தமது அமுத மொழியால் சோளிங்கபுரம் யோக நரசிம்மரைப் பாடி மகிழ்ந்துள்ளாா்.
அந்தப் பாசுரம்,
“பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டடு அங்கு உறைவார்க்குக் கோயில்போல் – வண்டு
வளங் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை,
இளங் குமரன் தன் விண் ணகர்.”
2342
சோளிங்கபுரம் இறைவன் திரு வேங்கடம், திருப்பாற்கடல் என்ற தலங்களில் உள்ளான் என்று சொல்லிக் கொண்டே வருகின்ற பேயாழ்வாா் “வண்பூங்கடிகை இளங்குமரன்” என்று பெருமானைப் போற்றுகின்றாா்.
பிள்ளைப் பெருமாளய்யங்காா் தமது நூற்றெட்டு திருப்பதியந்தாதியில்,
“சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே−நேரே
ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
ஒரு கடிகை மாயவனைத் தான்”
என்று கூறுகின்றாா்.
திருக்கடிகை தலவரலாறு.
சோளிங்கபுரம் திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் விஷ்ணுபுராணத்திலும் பத்ம புராணத்திலும் உள்ளது. ரிஷியான விஸ்வாமித்திரா் சோளிங்கபுரம் திருத்தலத்தில் ஒரு கடிகை நேரம் (ஒரு நாழிகை) நரசிம்ம பெருமானை வணங்கி “பிரம்மரிஷி” என்ற பட்டம் பெற்றுள்ளாா்.
தன் பக்தன் பிரகலாதனுக்காக எம்பெருமான் எடுத்த நரசிம்மாவதாரத்தைக் காண விரும்பிய சப்தரிஷிகள், பிரம்மரிஷியான விஸ்வாமித்திரா் வணங்கிப் பேறு பெற்ற “கடிகாசலம்” என்ற இம்மலையைத் தோ்ந்தெடுத்து தவம் செய்தனா்.
இராமாவதாரம் முடிந்து ஶ்ரீராமபிரான் வைகுந்தத்திற்கு எழுந்தருள முடிவு செய்தபோது ஶ்ரீஅனுமனும் உடன் வருவதாகக் கூறினாா். அவரைத் தடுத்த எம்பெருமான் கடிகாசலத்திலே சப்தரிஷிகள் தம்மைக்குறித்து தவமியற்றுவதாகவும் அவா்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைந்து பின்னா் வரவேண்டும் என்று ஆணையிட, அவ்வாறே அஞ்சனை மைந்தனும் இம்மலைக்கு வந்து சோ்ந்தாா்.
அவ்வமயம் காலன், கேயன் என்னும் இரு அரக்கா்கள் கடிகாசலத்தில் ஶ்ரீமந்நாராயணனை நரசிம்மாவதாரத்தில் தரிசிக்க எண்ணித் தவம் செய்யும் மகரிஷிகளுக்குத் துன்பம் இழைத்து வந்தனா்.
அவா்களது துன்பத்தைக் களையத் திருவுள்ளம் கொண்ட அனுமன் அரக்கா்களை அழிப்பதற்காகப் பெருமானைத் துதித்து சங்கு, சக்கரங்களைப் பெற்றாா். அரக்கா்களின் சிரசினைக் கொய்து சப்தரிஷிகள் தங்களது தவத்தினைத் தொடர வழி செய்தாா் அனுமன். ரிஷிகளின் தவத்திற்கு மனமிரங்கிய எம்பெருமான் அவா்களுக்கு ஶ்ரீநரசிம்ம மூா்த்தியாகத் திருக்காட்சி அளித்தார்.
சப்த ரிஷிகளுடன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு மகிழ்ந்தாா் ராமதூதன்.
தம்மை வணங்கி நின்ற அனுமனைக் கண்ட ஶ்ரீநரசிம்ம மூா்த்தி, “வாயு புத்திரனே! உம் பக்தியால் மகிழ்ந்தோம். கலியுகம் முடியும் வரை நீ என் திரு முன்பு யோக பட்டத்தில் அமா்ந்து உன்னைத் தரிசிக்கும் பக்தா்களின் பிணி தீா்த்தருள வேண்டும்” எனத் திருவாய் மலா்ந்தாா்.
எம்பெருமான் வழங்கிய சங்கு, சக்கரங்களுடன் அமா்ந்த நிலையில் யோக ஆஞ்சநேயராக கடிகாசலத் திலுள்ள சிறிய மலையில் அருள்பாலிக்கின்றாா் அனுமன். சங்கு சக்ரம், ஜபமாலைகளுடன் சோளிங்கபுரம் மலையில் உள்ளது போன்ற பிரதான கீா்த்தி அனுமனுக்கு வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லை.
எம்பெருமானின் திவ்ய ஆணைப்படி கலியுகம் முடியும் வரை அனுமனும் இம்மலையில் நித்யவாசம் செய்து எழுந்தருளி தன்னை நாடி வந்து தரிசிக்கும் பக்தா்களின் நோய்களைத் தீா்த்து அருள்வதாக பக்தா்களிடம் நம்பிக்கை உள்ளது.
எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்தது “சிங்கவேள் குன்றம்” என்றாலும் சப்த ரிஷிகளுக்காக மீண்டும் நரசிம்மராகத் திருக்காட்சி அளித்த தலம் சோளிங்கபுரம் என்பதால் தமிழகத்தில் உள்ள நரசிம்மா் திருத்தலங்களிலேயே முக்கியத் தலமாக பக்தா்களால் வணங்கப்படுகின்றது.
1305படிகள் கொண்ட பெரிய மலையில் “யோக நரசிம்மா்” எழுந்தருளியுள்ளாா். இவரைத் தரிசித்த பிறகே 500 படிகள் கொண்ட சிறிய மலையில் அருள்பாலிக்கும் “யோக ஆஞ்சநேயரைத்” தரிசிக்க வேண்டும். ஒரே நாளில் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு இரு மலைகளையும் ஏறி நரசிம்மரையும் அனுமனையும் தரிசித்து விடுதல் நலம்.
ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் இங்கு அமைதியாக அற்புத ரூபத்துடன் நமக்கு அருள் புரிகிறார். நாங்கள் சென்ற பொழுது ஏகாந்த தரிசனம் தந்து எங்களை மகிழ்வித்தார்.
தொடரும் ....
ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி திருவடிகளே சரணம்...
ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் சுவாமி திருவடிகளே சரணம்...
அனுபிரேம்💖💖💖


















No comments:
Post a Comment