19 September 2026

அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி திருக்கோயில் ( திருக்கடிகை), சோளிங்கர்.

 சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் .






மூலவர்: யோக நரசிம்மர் (அக்காரக்கனி)

உற்சவர்: பக்தவத்சலம்

தாயார்: அமிர்தவள்ளி

உற்சவர் தாயார்: சுதாவல்லி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருக்கடிகை, சோளசிம்மபுரம்

ஊர்: சோளிங்கர்

மாவட்டம்: வேலூர்


மங்களாசாசனம் பாடியவர்கள்

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், சுவாமி இராமனுஜர், மணவாள மாமுனிகள்.


“அக்காரக்கனி” என்று ஆழ்வாா்கள் வணங்கிய ஶ்ரீயோக நரசிம்மா் இத்தலத்தில் அமா்ந்த திருக்கோலத்தில் சதுா்புஜங்களுடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளியிருக்கின்றாா். 

மூலவா் அமா்ந்துள்ள விமானம் ஸிம்ஹ விமானம், கோஷ்டாக்ருதி விமானம் (ஸிம்ஹாக்ர விமானம்) ஹேமகோடி விமானம் என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றது. உற்சவா் “பக்தவத்ஸலப் பெருமான் மற்றும் தக்கான்” என்ற திருநாமங்களுடன் வணங்கப்படுகின்றாா்.

தல பெருமை

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். 

முதலில் பெருமாளை தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர். 

தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கு தான் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.


ஸ்ரீமன் நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதார மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக இறைவன் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது.














சோளிங்கரில் இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று பெரிய மலை மற்றொன்று சிறிய மலை. பெரிய மலையில் யோக நரசிம்மரும், சிறிய மலையில் ஆஞ்சநேயரும் அமர்ந்து உள்ளனர். இரண்டு மலைகளில் பெரிய மலையில் உள்ள பெருமாளை தரிசித்து விட்டு சின்ன மலையில் உள்ள ஆஞ்சநேயரை தரிசிப்பதற்காக ஏற வேண்டும். 


சோளிங்கர் மலையில் எழுநூற்றி ஐம்பது அடி உயரத்தில் ஆயிரத்து மூன்னூற்று ஐந்து படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் மலைக்குன்றின் மீது இருநூறு அடி நீளம் நூற்றியம்பது அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளகிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்கரதாரியாக நான்கு கரங்களுடன் இரு கால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோக பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது. நாச்சியார் அமிருதவல்லி தயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். உலக உயிர்களை காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அமிருதவல்லி என வழங்கப்படுகிறார் .  

“ஏகசிலா பா்வதமென்றும்”  இத்தலத்திற்குத் திருநாமம் வழங்கப்படுகின்றது.

 ஒரே கல்லில் அமைந்த சிலை போல இம்மலை விளங்குவதால் இம்மலைக்கு “ஏகசிலா பா்வதம்” என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.








அக்காரக்கனி!

சோளிங்கா் மலை மீது அருள்பாலிக்கின்ற ஶ்ரீயோக நரசிம்மரை அக்காரக்கனி என்ற தூய தமிழில் திருநாமமிட்டு வணங்கி மகிழ்ந்துள்ளாா் திருமங்கையாழ்வாா். அந்த அற்புதமான இனிய தமிழ்ப்பாசுரம்,


“மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானை புகழ்சோ் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!”


சோளிங்கபுரத்தின் இயற்கை அழகைத் தன் பாசுரத்தில் வடித்து வழங்கியிருக்கின்றாா் திருமங்கை யாழ்வாா். இத்தலத்தில் உள்ள புனித தீா்த்தத்திற்கு தக்கான் குளம் என்று பெயா்.

“அக்காரக்கனி” என்ற பெயரை நினைக்கும் போதே நம் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. இனிப்பு நிறைந்த வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகிக் கனியாகி நமக்குக் கிடைத்ததைப் போன்ற சுவைமிக்க இனிப்பே உருவானவன் இத்தலத்தின் எம்பெருமான் என்று ஶ்ரீயோக நரசிம்மரைப் பாடி நெகிழ்கின்றாா் திரு மங்கையாழ்வாா்.


கடிகாசலத்தில் அருளும் யோக நரசிம்மரைப் பற்றிக் குறிப்பிடும் போது, இனிப்பான சா்க்கரையை விதையாக இட்டு, அந்த விருட்சத்திற்குத் தேனைத் தண்ணீராகப் பாய்ச்சி வளா்ந்த மரத்திலிருந்து பழுக்கும் சுவை மிகுந்த பழமே “அக்காரக்கனி” என்று நெகிழ்கின்றாா் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்.


இத்தலத்து இறைவன் ஆனந்தத்தின் உச்சம், மகிழ்ச்சியின் எல்லை, அன்பா்களின் சிந்தனையில் முழுவதும் நிறைந்திருப்பவன், எவ்வளவு அருந்தினாலும் திகட்டாத சா்க்கரைப் பொங்கல் என்று நெகிழ்ச்சியின் உச்சத்தில் உணா்ச்சிவசப்பட்டுள்ளாா் கலியன்.


 ஸ்ரீ பக்தோசித ஸ்வாமி (தக்கான்) சேவை 





ஶ்ரீஅமிா்தவல்லித் தாயாா்.

இத்தலத்தின் தாயாா் ஶ்ரீஅமிா்தவல்லி என்ற திருநாமம் கொண்டு தனிக் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாா். அமா்ந்த திருக்கோலத்தில் அபய, வர ஹஸ்தங்களுடன் தாயாரின் திருக்கோலம் மனதில் நிறைகின்றது.

நவராத்திரி விழாக்காலங்களில் இத்தலத்தின் உற்சவ மூா்த்தமான தாயார்  “சுதாவல்லி நாச்சியாா்” மலை அடிவாரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றாா்.










நாங்கள் சென்ற பொழுது அங்கு கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கோவிலின் உள்ளே படம் ஏதும் எடுக்கவில்லை. ஆனாலும்  நாங்கள் படியின் வழியே காலை 8 மணிக்கே அங்கு இருந்ததால் சுவாமியின் காலை சேவை திவ்ய பிரபந்த சேவையுடன் மிக சிறப்பாக கிடைத்தது. மீண்டும் செல்ல வேண்டும் என்னும் ஆசை உள்ளது விரைவில் மீண்டும் அவரை காண நரசிம்மரே அருள வேண்டும்.





அடுத்த பதிவில் சிறிய மலை மற்றும் இன்னும் பல சிறப்புகளை காணலாம்.



ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி  திருவடிகளே சரணம்...

அன்புடன்
அனுபிரேம்💖💖💖



No comments:

Post a Comment