09 October 2021

ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில், குணசீலம்

 குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் -


திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். 

இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. 
உத்ஸவர் - ஸ்ரீநிவாச பெருமாள் 
தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம்
இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார்.தல வரலாறு -

குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர், காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசீலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசீலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.
ஒரு சமயம் குணசீலரின் குரு தால்பியர், தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். அதனால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது.


ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒரு சமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோவில் எழுப்பினான். பிரசன்ன வெங்கடாஜலபதி எனப் பெயர் சூட்டப்பட்டது.தலச்சிறப்பு : 

உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.


பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார்.


மூலவர் எம்பெருமான் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் சங்கு, சக்கரம், வரதஹஸ்தம், கடிஹஸ்தம், சதுர்புஜத்துடன், இலக்குமியை மார்பில் தாங்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தனது வலக்கையில் செங்கோல் ஏந்தி இருப்பதால் செய்வினை கோளாறுகளை அகற்றுவதாக ஐதீகம். உற்சவர் ஸ்ரீனிவாசர் என்ற திருநாமத்துடனும் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராய் ஸேவை சாதிக்கிறார்.


குணசீலம் கோவில் அமைப்பு-

 கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். 

சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.உச்சிகாலத்திலும் அர்த்தஜாமபூஜை இரவு 8.30 மணிக்கு நடைபெற்றதும்,  ஸேவார்த்திகள் முகத்தில் பெருமாள் தீர்த்தம் தெளிப்பார்கள்.  சித்தபிரமை மற்றும் பலதோஷங்கள்  இதனால் 
தீருகின்றன என்பது ஐதீகம். 

மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.


பெருமாளின் திருக்கரத்தில் உள்ள செங்கோல், விசேஷமானது. இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி என்பது சிறப்பு. 
திருவாய்மொழி - ஆறாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி – உலகமுண்ட -

உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆருயிரே,* 
திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.

3550 

          


கூறு ஆய்,  நீறு ஆய், நிலன் ஆகிக் *  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 
சேறார்  சுனைத் தாமரை செந் தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.

3551

          வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 

தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆ ஆ என்னாயே!   

3552 

          ஆ ஆ ! என்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள் மேல்,* 
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-

தேவா*  சுரர்கள், முனிக் கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  

3553 

          


புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா! ஓ!,* 
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா! ஓ!,*

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே? 

3554ஸ்ரீ  பிரசன்ன வேங்கடாசலபதி திருவடிகளே சரணம் ...


அன்புடன்,
அனுபிரேம்3 comments:

 1. பதிவு அருமை. சமீபத்தில் இந்தக் கோவிலுக்குச் சென்றது நினைவிற்கு வருகிறது.

  முதல் பாசுரத்தில் உன பாதம் என்று வரவேண்டும். உன் பாதம் என்று வந்துள்ளது

  ReplyDelete
 2. பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன் இந்தக் கோயிலுக்கு

  கீதா

  ReplyDelete
 3. இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இப்பகுதியில் பார்க்கப்படவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில்.

  ReplyDelete