02 October 2021

ஸ்ரீ அப்பகுடத்தான் திருக்கோயில், கோவிலடி

ஸ்ரீ  அப்பால ரெங்கநாதர் சுவாமி திருக்கோவில்,  கோவிலடி, தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் கல்லணையில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும், திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் கோயிலடி என்ற ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் 6-வது திருத்தலம் ஆகும்.






மூலவர் : அப்பக்குடத்தான்

உற்சவர் : அப்பால ரங்கநாதர்

அம்மன்/தாயார் : இந்திரா தேவி, கமல வல்லி

தல விருட்சம் : புரஷ மரம்

தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி

ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பேர்








தலச்சிறப்பு : 

இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது.  

108 வைணவத் திருத்தலங்களில் 6 வது திருத்தலம் ஆகும். 

108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்'' என்ற திருநாமம் ஏற்பட்டது. 

இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது.

 இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபமன்யு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் " கோவிலடி'' எனப்பட்டது என்றும் கூறுவர். 

நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடிவிட்டுத்தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். 

   
பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். 
 அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும்  பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது.  இந்த பஞ்சரங்கதலங்கள்,  உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன.  அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள  தலங்களாகும்.


    ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
    அப்பால ரங்கம் -  திருப்பேர்நகர் (கோவிலடி),
    மத்திய ரங்கம்    -   ஸ்ரீரங்கம் (திருச்சி),
    சதுர்த்த ரங்கம்   -   திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
    பஞ்ச ரங்கம் (ஐந்தாவது ரங்கம்) -  திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).


  ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும்,  ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது  என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது.  ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள்  இத்தலத்தில் எழுந்தருளியதால், "ஆதி ரங்கம்" என்னும் பொருள்பட "அப்பால ரங்கம்"  என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
















தல வரலாறு: 

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான்.

அதற்கு துர்வாச முனிவர், "மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்,''  என்றார்.

இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது.

ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள்.

அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், "ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,'' என கேட்டான்.

அதற்கு அவர்,"எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,''  என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது.

அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார்.

உபமன்யுவிற்கு திருமாலும் காட்சி தந்து மன்னனின்  சாபம் தீர்த்தார்.

உபமன்யு மன்னனிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் பெருமாள் காட்சி  தருகிறார் .







இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க  சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.  திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின்  மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.  தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள்.  










கோவிலடிக்கு திருப்பேர் நகர் என்ற பெயரும் உண்டு. ‘திரு’ என்பதற்கு செல்வம் என்று பொருள். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி இக்கோவிலில் கனகவல்லி தாயார் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். மகாலட்சுமி இத்தலத்தை விட்டு பெயராமல் நிரந்தரமாக தங்கி இருப்பதால், இந்த திருத்தலத்திற்கு ‘திருப்பெயராத நகர்’ என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் இது மருவி ‘திருப்பேர் நகர்’ என்றானது.

தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.











நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33  பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
 






காவிரிக் கரையில் ஒரு மேட்டின் மேல் அமைந்துள்ள இக்கோவில், தொலை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கும், கொள்ளிட நதியில் ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கும் பேரழகு வாய்ந்தது. 
ஆழ்வார்கள் ஒரு ஸ்தலத்தில் அனுபவிக்கும் பெருமாளை மற்றோர் ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது மறக்கவொன்னா ஆற்றாமையால் மீண்டும் மங்களாசாசனம் செய்வது மரபும் வழக்கமுமாயிற்று. திருப்பேர் நகரில் வணங்கிப் போன பின்பும் அப்பக்குடத்தான் திருமங்கை மன்னனை விடாது பின் தொடர்கிறார். தம்மை விட்டு நீங்காத அந்த அர்ச்சாவதார சோதியை திருவெள்ளறை சென்று கண்டேன் என்று மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார்.




கொள்ளிடத்தின் தெற்குக்  கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசம்,
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அன்பிலுக்குக் கிட்டத்தட்ட நேர் எதிரே அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்றால்  இந்த இரு திவ்யதேசங்களுக்கும் இடையே உள்ள தூரம் 1 கிலோமீட்டர்தான். ஆனால், சாலை வழியே கோவிலடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, அரியூர் இவற்றைத் தாண்டி அன்பில் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.




3745

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து *
பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான் *
கார் ஏழ், கடல்  ஏழ், மலை  ஏழ், உலகு உண்டும் *
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே.


3746
பிடித்தேன், பிறவி கெடுத்தேன், பிணி சாரேன் *
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை *
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் *
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயின வாறே.


3747

எளிதாயினவாறு என்று, என், கண்கள் களிப்ப *
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் *
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் *
தெளிது ஆகிய சேண் விசும்பு  தருவானே.









ஸ்ரீ கமலவல்லீ (இந்திராதேவி) ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகளே சரணம் ...


அன்புடன்,
அனுபிரேம்



1 comment:

  1. அப்பக்குடத்தானை தரிசனம் செய்த நினைவுகளை மீட்டெடுக்க பதிவு உபயோகமாகியது, அங்கு பிரசாதமாகச் சாப்பிட்ட அப்பத்தையும்தான்.

    ரொம்ப நன்றாக, நிறைய படங்களுடன் எழுதியிருக்கீங்க. கோவிலுக்கு நிறைய படிகள் ஏறவேண்டியிருக்கும்.

    ReplyDelete