25 May 2021

நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்

 இன்று   சுவாமி நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரம்  (வைகாசியில் – விசாகம்)........



ஆழ்வார்  வாழி திருநாமம்



மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே




நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி
தந்தை : காரி
தாய் : உடையநங்கை

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி

எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்








திருவாய் மொழி

முதற் பத்து

மூன்றாம் திருவாய்மொழி - பத்துடை

எம்பெருமானது எளிமையை அருளிச் செய்தல்




பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய 

வித்தகன் * மலர்மகள்விரும்பும் நம்அரும்பெறலடிகள் *

மத்துறுகடைவெண்ணெய்களவினில் உரவிடையாப் புண்டு *

எத்திறம்! உரலினோடு இணைந்திருந்தேங்கியஎளிவே. (2)


1 2697



எளிவருமியல்வினன் நிலைவரம்பிலபல பிறப்பாய் * 

ஒளிவருமுழுநலம் முதலிலகேடிலவீடாம் *

தெளிதருநிலைமையதுஒழிவிலன் முழுவதுமிறையோன் *

அளிவருமருளினோடு அகத்தனன்புறத்தனனமைந்தே.


2 2698



அமைவுடையறநெறி முழுவதுமுயர்வற வுயர்ந்து *

அமைவுடைமுதல்கெடல் ஒடிவிடையறநிலமதுவாம் * 

அமைவுடையமரரும் யாவையும்யாவரும்தானாம் * 

அமைவுடைநாரணன்மாயையை அறிபவர்யாரே?


3 2699



யாருமோர்நிலைமையனென அறிவரியஎம்பெருமான் * 

யாருமோர்நிலைமையனென அறிவெளியஎம்பெருமான் * 

பேருமோராயிரம் பிறபலவுடையஎம்பெருமான் * 

பேருமோருருவமு உளதில்லையிலதில்லைபிணக்கே.


4 2700



பிணக்கறவறுவகைச்சமயமும் நெறியுள்ளியுரைத்த * 

கணக்கறுநலத்தனன் அந்தமிலாதியம்பகவன் * 

வணக்குடைத்தவநெறி வழிநின்றுபுறநெறிகளைகட்டு * 

உணக்குமின்பசையற அவனுடையுணர்வுகொண்டுணர்ந்தே.


5 2701



உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்துருவியந்தவிந் நிலைமை * 

உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலையுணர்வரிது உயிர்காள் * 

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து அரியயனரனென்னுமிவரை * 

உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இறைஞ்சுமின்மனப்பட்டதொன்றே.


6 2702



ஒன்றெனப்பலவென அறிவரும்வடிவினுள்நின்ற * 

நன்றெழில்நாரணன் நான்முகனரனென்னுமிவரை * 

ஒன்ற நும் மனத்துவைத்து உள்ளிநும்இருபசையறுத்து * 

நன்றெனநலஞ்செய்வது அவனிடைநம்முடைநாளே.


7 2703



நாளும்நின்றடுநமபழமை அங்கொடுவினையுடனே 

மாளும் * ஓர்குறைவில்லை மனனகமலமறக்கழுவி * 

நாளும்நம்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி * 

மாளுமோரிடத்திலும் வணக்கொடுமாள்வதுவலமே.


8 2704



வலத்தனன்திரிபுரமெரித்தவன் இடம்பெறத்துந்தித் 

தலத்து * எழுதிசைமுகன்படைத்த நல்லுலகமும்தானும் 

புலப்பட * பின்னும்தன்னுலகத்தில் அகத்தனன்தானே 

சொலப்புகில் * இவைபின்னும்வயிற்றுள இவைஅவன்துயக்கே.


9 2705



துயக்கறுமதியில்நன்ஞானத்துள் அமரரைத்துயக்கும் * 

மயக்குடைமாயைகள் வானிலும்பெரியனவல்லன் * 

புயற்கருநிறத்தனன் பெருநிலங்கடந்தநல்லடிப்போது * 

அயர்ப்பிலனலற்றுவன் தழுவுவன்வணங்குவனமர்ந்தே.


10 2706



அமரர்கள் தொழுதெழ அலைகடல்கடைந்தவன்தன்னை * 

அமர்பொழில்வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் * 

அமர்சுவையாயிரத்து அவற்றினுளிவைபத்தும்வல்லார் *

அமரரோடுயர்விற்சென்று அறுவர்தம்பிறவி யஞ்சிறையே. (2)


11 2707








நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம்...

1 comment:

  1. சிறப்பான தகவல்கள். படங்களும் நன்று.

    ReplyDelete