20 October 2026

பிள்ளைலோகாசாரியர் -- ஐப்பசி - திருவோணம்

 ஐப்பசி-திருவோணம்

**********************

13ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் உலுக்கான் படை ஸ்ரீரங்கம் திருக்கோவிலை சூரையாட வந்த பொழுது உற்சமூர்த்தியனான அழகிய மணவாளனை (பின்னாளில் நம்பெருமாள் ஆனார்) காத்து நமக்கு கொடுத்த பிள்ளைலோகாச்சார்யார் அவதார நன்னாள்




பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:


அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே

ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே

முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே

மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே

நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே

நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே

உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே

உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.


ஸ்ரீரங்கம் நம்பெருமாளை நமக்கு பாதுகாத்து கொடுத்த ஸ்ரீ #பிள்ளைலோகாசாரியர் திரு அவதார நன்னாள் 

***

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சார்ய குரு பரம்பரை மிகவும் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும் உரியது.

ஸ்ரீமந் நாராயணன் தொடக்கமாக பகவத் ராமாநுஜரையும் நடுநாயகமாய் கொண்ட ஆச்சார்ய ரத்ன ஹாரம் ஸ்ரீ மணவாள மாமுநிகளை கொண்ட குரு பரம்பரையை நாம் சேவிக்கின்றோம்.

இன்று ஐப்பசி-திருவோணம் 

ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவவதார தினம். இதோ நன்னாளில் நம் குரு பரம்பரையில் நம் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும் உரிய பிள்ளைலோகாசாரியரும் திரு அவதாரம் செய்த தினம்.

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக, ஸ்ரீரங்கத்தில் 1205ம் ஆண்டு அவதரித்தார். 

நம்பிள்ளையின் பட்டப் பெயரான

"லோகாச்சாரியன்” என்கிற பெயரோடு, "பிள்ளை" என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு "பிள்ளைலோகாச்சாரியன்” என்று பெயரிட்டு அழைத்தனர். 

இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாகவே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தனர்.






நம்பெருமாளை_திருமேனியை_காத்தல்

பிள்ளைலோகாச்சாரியார், ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது. 

டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். (இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). 

கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதன் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வழியில் இருந்த  சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.

 பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர் திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.

இதற்கிடையில் உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். 

திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி (இப்போது மதுரை அருகில் உள்ள யானைமலை) என்னும் ஊரில், ஒரு மலை அடிவாரத்திலே, பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார். 

வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி, 

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.




திருமாலை 


897


போதெல்லாம் போது கொண்டு உன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டு உன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலேன் அது தன்னாலே,*
ஏதிலே அரங்கர்க்கு! எல்லே!*  என் செய்வான் தோன்றி னேனே!


நான் ஏன் பிறந்தேன்?  எதற்காக வாழ்கிறேன்?
அர்த்தமற்ற வாழ்வு அவசியமான ஒன்றா என்ன?

உனது அழகிய பொன்னடிகளை..
பூக்கள் கொண்டு..
காலம் தவறாது பூசித்ததில்லை..
குற்றமில்லாத சொற்களால் உன் கல்யாண குணங்களை
பாட இயலவில்லை..

பக்தியின் உச்சத்தில் வரும் நேசத்தை.. மனம்
கொண்டாடத் தெரிவதில்லை..
திருவரங்கனே!

கைகள்.. கால்கள்.. வாய்.. செவி.. கண்கள் என
எல்லா உறுப்புகளும் பூரணமாய் இருந்தும்..

உனக்காக அவற்றை
பயன்படுத்தாத முடியாத
நான் ஏன் பிறந்தேன்?
எதற்காக வாழ்கிறேன்?


    
898

குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி,*
தரங்கநீர் அடைக்கல் உற்ற*  சலம் இலா அணிலும் போலேன்,*

மரங்கள் போல் வலிய நெஞ்ச*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க்கு  ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே!  27


   என்ன ஒரு  அர்த்தமற்ற வாழ்க்கை..
இப்படி ஏன் வாழ்கிறேன்?

அரங்கனுக்குத் தொண்டு செய்யாமல்
அர்த்தமற்று வாழ்கிறேனே..

மரங்களைக் காட்டிலும் கடிய நெஞ்சுடையவனாய்..
வஞ்சகமே மேலாக.. ஏன் இருக்கிறேன்?

அதோ!
இராவண யுத்தத்திற்கு இராமன் ஆயத்தமாகி விட்டான்..
கடல் கடக்க வேண்டும்.. பாலம் அமைக்க வேண்டும்..
வானர வீரர்கள்.. மலையைத் தள்ளிக் கொண்டு வர..
கபடமற்ற அணில்கள்..கடலில் நீராடி..
கடல் மண்ணில் புரண்டோடி..
அலைகள் பொங்கும் மாகடலை மணல் கொண்டு தூர்க்கின்றன..
அந்த அணில் செய்த கைங்கர்யம் கூட
அடியேனால் செய்ய முடிந்ததா?

அரங்கனே!!
என் வாழ்க்கை.. இங்கே
அர்த்தமற்றதாய் இருக்கிறதே..





 ஓம் நமோ நாராயணாய நம!!
பிள்ளைலோகாசாரியர் திருவடிகளே சரணம்!!


அன்புடன் 
அனுபிரேம் 💛💛

No comments:

Post a Comment