20 October 2026

பொய்கையாழ்வார் - ஐப்பசி திருவோணம்

 இன்று  பொய்கையாழ்வார்  திருநட்சித்திரம்  ஐப்பசியில்  திருவோணம்.







பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே .




பொய்கையாழ்வார்  


பிறந்த ஊர்         -  காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில் 

பிறந்த ஆண்டு -  7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -   ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை                - செவ்வாய்

எழுதிய நூல்     -  முதல் திருவந்தாதி

பாடல்கள்         - 100

சிறப்பு               - திருமாலின் சங்கின் அம்சம்

தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என புகழ்ந்து பாடிய தொண்டை நாட்டின் மிக முக்கியமான நகர் காஞ்சி மாநகர் ஆகும்.

 இந்நகரை வடமொழியில் " ஸத்ய வரத க்ஷேத்திரம் " என்று புகழ்ந்து கூறுவர்.

 காஞ்சிபுரத்தில் திருவெஃகா (யதோக்தகாரி ) சன்னதி பெருமாள் திருக்கோவிலின் வடபுறத்தில் அமைந்துள்ள பொற்றாமரைப் பொய்கையிலே பூத்த ஒரு தாமரைப் பூவில் எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயணன் திருவுள்ள விருப்பத்திற்கிணங்க ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் பொய்கையில் அவதரித்தார். 

இவருடைய எழிலைக் கண்ட அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்து திருமாலின் இடக்கையில் பொருந்தியுள்ள பாஞ்சசன்னியம் என்னும் திருச்சங்கின் அம்சமாக வழிபட்டனர்.

இவர் திருவெஃகா, திருவரங்கம், திருக்கோவிலூர், திருவேங்கடம் முதலிய திருத்தலங்களைப் பற்றி பாசுரங்களை பாடியுள்ளார்.

இவரின் பிரபந்தத்திற்கு முதல் திருவந்தாதி எனத் திருநாமம். 




 

முதல் திருவந்தாதி 


         
     

(2147)

காலை எழுந்து உலகம் கற்பனவும், கற்று உணர்ந்த

மேலைத் தலை மறையோர் வேட்பனவும், – வேலைக்கண்

ஓர் ஆழியான் அடியே; ஓதுவதும், ஓர்ப்பனவும்,

பேர் ஆழி கொண்டான் பெயர். 66


(2148)

பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு, ஒண் பூ

உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்

தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்,

ஒருவனையே நோக்கும் உணர்வு. 67



(2149)

உணர்வார் ஆர்  உன்பெருமை? ஊழிதோறு ஊழி,

உணர்வாரார் ஆர் உன் உருவம்   தன்னை?, உணர்வார் ஆர் 

விண்ணகத்தாய்!  மண்ணகத்தாய்!  வேங்கடத்தாய்!

 நால்வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்?  68




(2150)

பாலன் தனது உருவாய் ஏழு உலகு உண்டு, ஆல்  இலையின்

மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர், – ஆல் அன்று

வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?

சோலை சூழ் குன்று எடுத்தாய்! சொல்லு. 69




(2151)

சொல்லும்  தனையும் தொழுமின் விழும் உடம்பு,

சொல்லும்  தனையும் திருமாலை, – நல் இதழ்த்

தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால்,

நாமத்தால், ஏத்திதிரேல் நன்று. 70












உபதேசரத்தினமாலை

6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்


7
  
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து






பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


அன்புடன்
அனுபிரேம் 💛💛💛

No comments:

Post a Comment