30 October 2025

பொய்கையாழ்வார் - ஐப்பசி திருவோணம்

இன்று  பொய்கையாழ்வார்  திருநட்சித்திரம்  ஐப்பசியில்  திருவோணம்.






பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா ஓணத்தில்  செகது உதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம்  செழிக்க வந்தான் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே

வனச மலர்க் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவன்  திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன் முடியும்  திருமுகமும் பூதலத்தில் வாழியே .




பொய்கையாழ்வார்  


பிறந்த ஊர்         -  காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில் 

பிறந்த ஆண்டு -  7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்       -   ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை                - செவ்வாய்

எழுதிய நூல்     -  முதல் திருவந்தாதி

பாடல்கள்         - 100

சிறப்பு               - திருமாலின் சங்கின் அம்சம்

தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என புகழ்ந்து பாடிய தொண்டை நாட்டின் மிக முக்கியமான நகர் காஞ்சி மாநகர் ஆகும்.

 இந்நகரை வடமொழியில் " ஸத்ய வரத க்ஷேத்திரம் " என்று புகழ்ந்து கூறுவர்.

 காஞ்சிபுரத்தில் திருவெஃகா (யதோக்தகாரி ) சன்னதி பெருமாள் திருக்கோவிலின் வடபுறத்தில் அமைந்துள்ள பொற்றாமரைப் பொய்கையிலே பூத்த ஒரு தாமரைப் பூவில் எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயணன் திருவுள்ள விருப்பத்திற்கிணங்க ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் பொய்கையில் அவதரித்தார். 

இவருடைய எழிலைக் கண்ட அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்து திருமாலின் இடக்கையில் பொருந்தியுள்ள பாஞ்சசன்னியம் என்னும் திருச்சங்கின் அம்சமாக வழிபட்டனர்.

இவர் திருவெஃகா, திருவரங்கம், திருக்கோவிலூர், திருவேங்கடம் முதலிய திருத்தலங்களைப் பற்றி பாசுரங்களை பாடியுள்ளார்.

இவரின் பிரபந்தத்திற்கு முதல் திருவந்தாதி எனத் திருநாமம். 



 

முதல் திருவந்தாதி 


         
       2142  
       
 உலகும்*  உலகு இறந்த ஊழியும்,*  ஒண் கேழ்-
விலகு கருங் கடலும் வெற்பும்,* - உலகினில்-
செந்தீயும்*  மாருதமும் வானும்,* 
 திருமால் தன்புந்தியில்ஆய புணர்ப்பு.   61


2143

புணர் மருதின் ஊடு போய்*  பூங் குருந்தம் சாய்த்து,* 
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று,* - கணம் வெருவ-
ஏழ் உலகும் தாயினவும்*  எண்திசையும் போயினவும்,* 
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள்.    62


2144

தோள் அவனை அல்லால் தொழா,*  என் செவி இரண்டும்-
கேள் அவனது இன் மொழியே*  கேட்டிருக்கும்,* - நா நாளும்-
கோணா கணையான்*  குரை கழலே கூறுவதே,* 
நாணாமை நள்ளேன் நயம்   63


2145

நயவேன் பிறர் பொருளை*  நள்ளேன் கீழாரோடு,* 
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்* - வியவேன்-
திருமாலை அல்லது*  தெய்வம் என்று ஏத்தேன்,* 
வரும் ஆறு என் என்மேல் வினை?     64



2146

வினையால் அடர்ப்படார்*  வெம் நரகில் சேரார்,* 
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* - நினைதற்கு-
அரியானை*  சேயானை,*  ஆயிரம் பேர்ச் செங்கண்-
கரியானைக்*  கை தொழுதக் கால்   65









உபதேசரத்தினமாலை

6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்


7
  
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து






பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


அன்புடன்
அனுபிரேம் 💛💛💛

No comments:

Post a Comment