🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025- 5 ஆம் திருநாள் இரவு கருட சேவை 🌟🌺🌟
🌿🪷🌿🪷 ஸ்ரீ லட்சுமி ஹாரம், மகர கண்டி, சஹஸ்ர நாமாவளி ஹராம் மற்றும் மூலவருக்கு அணிவிக்கப்படும் மிகவும் புராதன நகைகள் உற்சவருக்கு அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி கருட சேவை சாதிப்பார் 🌿🪷🌿🪷
தொண்டமான் சக்கரவர்த்தியும் குரும்பறுத்த நம்பி..
திருமலைக்கு நடந்து போகும் போது, பக்த ஆஞ்சநேயர் சிலையை தாண்டியவுடன் உள்ள சிதைந்துள்ள மண்டபம் கும்மர மண்டபம்.அதற்கு, குயவன் மண்டபம் என்று பொருள்.
தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்களைத் தயார் செய்து அனுப்புவான்.
தினமும் மீதி இருக்கும் மண்ணில், மண் புஷ்பம் செய்து, தான் மண்ணால் செய்து தன் குடிசையில் உள்ள திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தான். திருமலையப்பனும் அவன் கொடுத்த புஷ்பத்தை உகந்து தன் தலையில் சூட்டிக் கொண்டான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் உள்ள திருமலையப்பரின் தலையில் மண் புஷ்பமாக காணப்பட்டன.
அந்த சமயம் தொண்டமான் சக்ரவர்த்தி தினமும் திருமலையப்பனை தரிசனம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருந்தான்.
சில நாட்களாக திருமலையப்பரிடம், அவரின் தலையில் உள்ள மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, அதை யார் சூட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்க தொடங்கினான்.
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
குயவன்,பெருமாளிடம், தான் தான் புஷ்பம் சூட்டுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் , தான் செய்வது சாதாரண தொண்டு என்றும் , இந்த புஷ்பம் கைங்கர்யத்தை யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி என்றும் வேண்டி இருந்தான்.
அப்படி தாங்கள் தெரியப் படுத்த வேண்டும் என்றால் தனக்கு முக்தி கொடுத்த பின் தெரிவித்தால் நலம், என்று தாழ்மையுடன் கேட்டு இருந்தான் இந்த குயவன்.
தொண்டமான் தன் சந்தேகத்தை திருமலைஅப்பனிடமே கேட்டு விட்டான். “ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறதே? அதுவும் அழகாகத் தெரிகிறதே? எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”.
அதற்கு பெருமாள், “அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான். அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது, நாளை வா சொல்கிறேன்” என்றார்.
திருமலையப்பனும் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார்.
பெருமாள் அந்த குயவனிடம் கொண்ட அதீத அன்பின் அடையாளமாக அவனின் எதையும் எதிர்பார்க்காத சேவையை பற்றியும், அழகான மண் மலர்களைப் பற்றியும் அரசனிடம் கூறினார்.
அந்த மண் மலர்கள் மற்ற எல்லா மலர்களையும் விட வாசனையாகவும் அன்புடன் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சொன்னார்.
எல்லா மலர்களையும் என்று சொன்னது அரசன் சமர்ப்பித்த தங்க மலர்களையும் சேர்த்துத்தான்.
தொண்டமான் சக்ரவர்த்தி உடனே குயவனை பார்க்க சென்றான். பெருமாளின் திருவுள்ளப்படி, குயவன் முக்தி அடைகிறான்.
தொண்டமான் சக்ரவர்த்தி, குயவன் நிலையைப் பார்த்ததும், அப்படியே உருகி, வசதிகள் இல்லாவிட்டாலும், ஏழை ஆனாலும், பெருமாளுக்கு தொண்டு செய்யலாம் என்றும், இப்படியெல்லாம் கூட பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் குயவனைப்பற்றி, ஊர் முழுதும் அறியும்படி செய்தான்.
பெருமாள் திருமொழி
4. ஊன் ஏறு செல்வத்து
திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல்
உம்பர் உலகு ஆண்டு ஒரு குடைக் கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனும் ஆவேனே. 10
நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.
தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment