திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது.
உற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களிலும் தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளில் மலையப்ப சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதே பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய அம்சம். இந்த முறையும் பெரியசேஷ வாகனம், சிம்ம வாகனம், கல்பவிருட்சம், கருட வாகனம், யானை வாகனம் , சந்திரபிரபை, குதிரை உள்ளிட்ட 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார் மலையப்ப சுவாமி.
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025
அங்குரார்ப்பணம் - சேனை முதல்வர் புறப்பாடு
🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 -
1 ஆம் திருநாள் மாலை கொடியேற்றம் 🍃🌷
திருப்பதியில் பெருமாளுக்கு பிரம்மனால் நடத்தப்படும் உற்சவம் தான் பிரமோற்சவம்.
ஸ்ரீவாரி பிரமோற்சவத்தை, ‘வெங்கடேஸ்வரா நவராத்திரி பிரமோற்சவம்’ என்றும் கூறுவார்கள்.
திருமாலின் புராணத்தின்படி பிரம்மாவே பூமிக்கு இறங்கி வந்து இந்த விழாவை நடத்துகிறார்.
ஒன்பது நாட்களுக்கு நடைப்பெறும் இந்த விழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் கருடக்கொடியை ஏற்றுவது துவஜாரோகணம் ஆகும்.
ஒருமுறை பிருகு முனிவர் திருமாலை சந்திப்பதற்காக வைகுண்டம் போகிறார். முனிவர் வந்தது அறியாமல் படுத்திருந்த பெருமாளின் மார்பில் தன் காலால் எட்டி உதைக்கிறார் பிருகு முனிவர்.
ஆனால் பெருமாள் சிறிதும் கோபம் கொள்ளாமல் ஐய்யோ உங்கள் பாதம் வலிக்குமே என்று பிருகு முனிவரிடம் கேட்கிறார். பிருகு முனிவர் தன்னுடைய செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறார்.
பெருமாளும் அதை மன்னித்துவிடுகிறார் ஆனால் பெருமாளின் மார்பில் குடியிருக்கும் மகாலக்ஷ்மி கடும் கோபம் கொள்கிறார்.
ஒரு முனிவர் உங்கள் மார்பில் குடியிருக்கும் என்னையே எட்டி உதைக்கிறார்.
அதை தண்டிக்காமல் நீங்கள் மன்னித்துவிடுகிறீர்களே? என்று கோவித்துக் கொண்டு வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு வருகிறார் மகாலக்ஷ்மி.
திருமகளை மீண்டும் வைகுண்டத்திற்கு அழைத்து செல்வதற்காக திருமலைக்கு வருகிறார் பெருமாள். கலியுகத்தில் பக்தர்களின் இன்னல்களை போக்குவதற்காக திருமலையில் கோவில் கொள்கிறார். இதைக் கொண்டாடுவதற்காக பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட உற்சவம்தான் பிரமோற்சவமாகும்.
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மதேவன் தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும் நலமாகவும், வளமாகவும் வாழ்வதற்காக பிரம்மனால் நடத்தப்படும் விழாவே இப்பிரமோற்சவமாகும். பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம் அதனால்தான் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமர்சியாக கொண்டாடப் படுகிறது.
பெருமாள் திருமொழி
4. ஊன் ஏறு செல்வத்து
திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல்
ஊன் ஏறு செல்வத்து* உடற்பிறவி யான் வேண்டேன்*
ஆனேறு ஏழ் வென்றான்* அடிமைத் திறம் அல்லால்*
கூன் ஏறு சங்கம் இடத்தான்* தன் வேங்கடத்துக்*
கோனேரி வாழும்* குருகாய்ப் பிறப்பேனே (2)
நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment