04 September 2025

வாமன ஜெயந்தி - ஆவணி - திருவோணம்

  ஆவணி - திருவோணம் - வாமன  ஜெயந்தி

 சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.



வாமன ஜெயந்தி 

மகாபலி, பிரகலாதனனின் பேரன். 

100 அசுவமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.

 மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரிடம் `மகாவிஷ்ணுவின் அருளைப் பெற என்ன வழி?’ என்று கேட்டாள்.

 அப்போது காஷ்யபர் பூஜைகளில் உயர்ந்ததான பயோ விரதத்தை உபதேசித்தார். அதிதியும் அந்த விரதத்தை சிரத்தையாக மேற்கொண்டாள்.

 அவளின் பூஜைக்கு மகிழ்ந்த விஷ்ணு சிறு பாலகனாகத் தோன்றி அவளுக்கும் காஷ்யபருக்கும் காட்சி கொடுத்தார்.

அவ்வாறு அவர் காட்சி கொடுத்த தினம் ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதி. அந்த பாலக ரூபமே 'வாமனர்' அவதாரம் என்று போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு முதன்முதலில் முழுமனித வடிவில் தோன்றிய அவதாரமும் வாமன அவதாரமே. ‘வாமனன்’ என்றால் ‘குள்ளமானவர்’ என்றும் ‘அழகானவர்’ என்றும் பொருள். குள்ளமானவராகத் தோன்றினாலும் உலகையே அளந்து விஸ்வரூபம் எடுத்துச் சிறப்பித்த அவதாரம், வாமன அவதாரம்.

ஒளிவீசும் முகத்தைக் கொண்டவராகத் திகழ்ந்த அந்தப் பாலகனுக்கு கதிரவனே காயத்ரி மந்திரம் உபதேசித்தார். பிரம்மனே முப்புரிநூல் அணிவித்தார். கலைமகள் தன் கை ருத்ராட்ச மாலையை வழங்க சந்திரன் தண்டமும் பூமிதேவி மான் தோலும் கொடுத்தார் என்கிறது புராணம். வாமனர் பிரம்மச்சாரியின் கோலம் கொண்டு மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார்.

மகாபலி வாரிவாரி வழங்கி தானம் செய்துகொண்டிருக்கும் அவைக்கு எழுந்தருளிய வாமனரைக் கண்டு அவையோர் எள்ளி நகையாடினர். 

ஆனால், மகாபலியோ மரியாதைகளோடு அவரை வரவேற்று `வேண்டுவது யாது’ என்று கேட்டான்.

அதற்கு வாமனரும், ‘மூன்று அடி நிலம் வேண்டும்’ என்று கேட்டார்.

மகாபலிக்கு இந்த வேண்டுதல் வித்தியாசமாக இருக்க, ‘இன்னும் என்ன வேண்டுமோ கேளுங்கள்’ என்றான். ஆனால் வாமனரோ, ‘உன்னால் இயன்றால் மூன்றடி நிலம் மட்டும் தருவதாக வாக்கு பண்ணு போதும்’ என்றார்.

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மகாபலியின் குருவான சுக்கிராச்சார்யாருக்கு சந்தேகம் ஏற்பட அவர் தன் தவவலிமையால் வந்திருப்பது மகாவிஷ்ணுவே என்பதை அறிந்துகொண்டார். 

மகாபலியிடம் சென்று, 'வந்திருப்பது நாராயணனே' என்று சொல்லி ‘அவர் கேட்கும் வரத்தைத் தர வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்தார்.

ஆனால், மகாபலியோ 'தன்னிடம் தானம் கேட்டவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது' என்று சொன்னான். இதனால் சுக்கிராச்சார்யாரின் மனம் வருத்தம் அடைந்தது. 

இந்தத் தருணத்துக்காக எதிர்பார்த்திருந்ததுபோல மகாவிஷ்ணுவும் மூன்றடி நிலத்தை தானம் பெற்று முதல் அடியால் உலகையும் இரண்டாம் அடியால் வானையும் அளந்தார். `வாக்குக் கொடுத்தபடி மூன்றாம் அடியை எங்கே வைப்பது?’ என்று மகாபலியிடம் கேட்டபோது, அவனும் தலை வணங்கி தன் தலை மீதுவைக்குமாறு கேட்டுக்கொண்டான்.

கலியுகத்தில் பக்தர்கள் பற்றிக்கொள்ள விரும்புவது அந்தப் பரந்தாமனின் திருவடியையே, அப்படிப்பட்ட அற்புதத் திருவடியின் ஸ்பரிசத்தைப் பெறும் பாக்கியம் வாய்ப்பதை எண்ணி மகிழ்ந்த மகாபலி, பாதாள லோகம் செல்லும் பேற்றை தன் பாக்கியமாகவே எண்ணி ஏற்றார். பிற அவதாரங்களில் சம்ஹாரம் செய்த மகாவிஷ்ணு இந்த அவதாரத்தில் சம்ஹாரம் இன்றி மகாபலிக்கு அனுக்கிரகமே செய்தார்.

தசாவதாரங்களுள் வாமன அவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். குருவே 'தான்' என்னும் அகந்தையை நீக்கி நல்லருள் பெற வழிகாட்டுபவர். தன் குருவான சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காததாலேயே மகாபலியும் வீழ்ந்தான். எனவேதான், வாமன அவதாரத்தை நவகிரகங்களுள் குருவின் மகிமை நிறைந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். எனவே, மகாவிஷ்ணுவை வாமன ரூபமாகவும் உலகளந்த பெருமாளாகவும் வணங்க, குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கின்றனர்.

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி...’ என்று ஆண்டாள் போற்றும் இந்த அவதாரத்தின் மகிமை விளக்கும் தலங்களுள் முக்கியமானது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோயில். ‘தலைகுனிந்து நின்ற காரணத்தால் மகாவிஷ்ணுவின் உலகளந்த விஸ்வரூப தரிசனத்தைக் காணமுடியவில்லையே’ என்று வருந்திய மகாபலிக்கு விஷ்ணு உலகளந்த பெருமாளாகக் காட்சிகொடுத்த தலம் இது.




 (7)

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசு வாங்கி

இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில்

எறிப்பு உடைய மணி வரை மேல்

 இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின்வாய் 

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

 விட்டு எறிக்கும் திருவரங்கமே


418

சிறிய ப்ரமசாரி வடிவம் கொண்டு மாவலியிடம் சென்று

மூன்றடி மண்ணை யாசித்து, அவனின் கர்வத்தை அடக்கி,

அவனுடைய ராஜ்யத்தைப் பெற்று, பின்பு நொடிப்பொழுதில்,

பாதாளத்தை அவனுக்கு ஏற்ற இருப்பிடமாகக் கொடுத்த

எம்பெருமானின் கோயில், ஜோதியுடன் விளங்கும் ஒரு நீல

ரத்ன மலையின் மேலே இளம் சூரியன் உதித்தாற்போல்,

சிவந்த ரத்தினங்கள் ஒளிரும் தலைகளை கொண்ட

பாம்பினைப் படுக்கையாக உடைய

எம்பெருமானின் திருவரங்கமே!



நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே! * 
நீ அன்று உலகு இடந்தாய்  என்பரால் * நீ அன்று 
கார்  ஓதம் முன் கடைந்து, பின் அடைத்தாய் மா கடலை * 
பேர்  ஓத மேனிப் பிரான்! 

30 2211



வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் * மூவடி மண் 
நீ அளந்து கொண்ட நெடுமாலே? * - தாவிய நின் 
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி * 
அஞ்சாது இருக்க அருள். 

18 2299



வாமனன்!  என் மரதக வண்ணன்! தாமரைக் கண்ணினன்! 

காமனைப் பயந்தாய்! * என்று என்று உன் கழல் பாடியே பணிந்து

தூ மனத்தனன் ஆய்ப் பிறவித் துழதி நீங்க * என்னைத் 

தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே!

8 2858


கண்களால் காண வருங்கொல்? என்று ஆசையால் * 

மண்கொண்ட வாமனன் ஏற, மகிழ்ந்து செல் * 

பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து * 

திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.

5 2978



கொள்வன் நான் மாவலி! மூவடி தா என்ற 

கள்வனே! * கஞ்சனை வஞ்சித்து, வாணனை 

உள் வன்மை தீர * ஓர் ஆயிரம் தோள் துணித்த 

புள் வல்லாய்! * உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?

9 2982








உடுப்பி ஸ்ரீகிருஷ்ணன் வாமனர் அலங்காரத்தில்  





ஓம் நமோ நாராயணாய நமக !!

பெருமான் திருவடிகளே சரணம் ....



அன்புடன்
அனுபிரேம்  💜💜💜...

No comments:

Post a Comment