04 September 2025

எட்டாம் நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை

  ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்றம்  

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...

 ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை

ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை

எட்டாம்  நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை 

பரியை நரியாக்கிய  படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபதாவது படலமாக அமைந்துள்ளது.





திருவிளையாடற் புராணம் -

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது மன்னன், படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்குவதற்காக பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தார்.

 அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என தான் கொண்டு வந்த அனைத்து முழுப்பொருளையும் செலவிட்டார்.

இந்த நிலையில் மன்னனிடமிருந்து அழைப்பு வந்தது. 

அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங் கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று  தெரிவித்தார். 

இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. 

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான். 

அரசனின் ஆணையை ஏற்று தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் வீட்டிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றனர். 

அவர் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

 தண்டல்காரர்கள் அரச ஆணையை அவரிடம் தெரிவித்தனர். 

அதற்கு அவர் ‘எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும்’ என்று எண்ணி அவர்களுடன் சென்றார். தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரிடம் அரசாங்கப் பணத்தை திரும்ப அளிக்கும்படி வலியுறுத்தி அவரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். 

அவருக்கு அது பஞ்சுப் பொதி போல் தோன்றியது. 

மறுநாள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கினர்.

 அதனையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் “தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள்” என மனமுருகி வழிபட்டார்.

 இந்நிலையில் ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. 

இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார்.

 இறைவனார் திருநந்தி தேவரிடம் “மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டிய‌னின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம்” என்று கூறினார். 

இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர். 

குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவிக்கச் செய்தான்.

 அவருக்கு பரிசுகள் பல வழங்கினான். 

குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான்.

 மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

 பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் புலப்படவில்லை.

 மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆதலால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான். 

சற்று நேரத்தில் குதிரைக் கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரைவீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைச் சொல்லினர்.

 அங்கு வந்த பாண்டிய‌ன் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான். 

பின்னர் அருகில் இருந்த குதிரை வீரனிடம் “உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்?” என்று கேட்டான். அப்போது வேதமாகிய குதிரையில் அமர்ந்திருந்த இறைவனாரை சுட்டிக் காட்டி “இவர்தாம் எம் தலைவர்” என்று கூறினான். 

இறைவனாரைக் கண்டதும் பாண்டியன் அவனையும் அறியாமல் வணங்கினான். 

அப்போது இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்து விட்டு “குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்” என்று கூறினார். 

இறைவனாரின் கூற்றினை ஆமோதித்த அரிமர்த்தன பாண்டியன் இறைவனாருக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான்.

 இறைவனாரும் தலையில் அதனைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார். 

பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான்.

 மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார். பின் இறைவனின் திருவருளை எண்ணி ஆர்ச்சயத்துடன் கூடிய மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார். 

அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடுஇரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன.

 குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின. குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண்விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர்.

அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். 

அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான்.

ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் “அக்கொடியவன் அரசபணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே, ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டுவந்து, அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்துவிட்டான். ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து, அரசப்பணத்தை மீட்டெடுங்கள்” என்று கட்டளையிட்டான். 

அரசனின் ஆணையைக் கேட்டதும் தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் மாளிகைக்குச் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார். அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர்.

 மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார். 

தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். 

மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார்.

 “இறைவா, இது என்ன சோதனை?. என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார். மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவன் அவரைக் காக்கும் பொருட்டு, வைகையாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார்.



ஆவணி மூல திருவிழா எட்டாம் நாள் திருவிழா நரியை பரியாக்கிய லீலையில்  சுவாமி சுந்தரேஸ்வரர், அன்னை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரை வாகனத்திலும் எம்பிரான் மாணிக்கவாசகர் வெள்ளி குதிரை வாகனத்திலும் எழுந்தருளிய காட்சி......  










நலம் தரும் திருப்பதிகம்

 01 திருஆலவாய்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 51 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்



பாடல் எண் : 09

தாவினான் அயன்தான் அறியா வகை

மேவினாய் திருஆலவாயாய் அருள்

தூவிலா அமணர் கொளுவும் சுடர்

பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே.


உலகத்தைத் தாவியளந்த திருமாலும், பிரமனும் அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே! அடியேனுக்கு அருள் புரிவீராக! நீராடாமையால் தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக!.

மீனாட்சி அம்மன்  சுந்தரேஸ்வரர்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

1 comment:

  1. இதே போன்ற வரலாறு பத்ராச்சல ராமதாஸர் கதையிலும் உண்டு.  இங்கே சிவன்.  அங்கே ராமன்!

    ReplyDelete