14 September 2025

கண்ணனின் பால லீலை..








 பால லீலை

 பலராமனும், கிருஷ்ணனும் நந்தனின் வீட்டில் தவழ்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். தாமரை போன்ற பாதங்களில் உள்ள சலங்கைகளின் சத்தத்தைக் கேட்க ஆசை கொண்டு வேகமாகவும், அழகாகவும் தவழ்ந்தார்கள்.

 இருவரும் சிரித்தபோது தெரிந்த பற்கள் மிக அழகாக இருந்தது. கைகளில் இருந்து நழுவி மணிக்கட்டில் விழுந்த கங்கணங்கள் அழுந்தியதால் உண்டான வடுக்களுடன் இருவரும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்கள்.

கிருஷ்ணன், தாமரை போன்ற பாதங்களுடனும், முன் நெற்றியில் கலைந்து விழுந்த கேசங்களுடனும் மிக அழகாக விளங்கினான். அனைவரும் ஆசை கொண்டு அவனைப் பின்தொடர்ந்தனர். அதைப் பார்த்து, இனிமையான சப்தத்துடன் சிரித்துக்கொண்டு ஓடினான். 

பிறகு நின்று, திரும்பிப் பார்த்து அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தான்.

 இருவரும் வேகமாக ஓடி சேற்றில் விழுந்து, சேற்றை உடம்பில் பூசிக் கொண்டார்கள். 

ஆகாயத்திலிருந்து முனிவர்கள் துதித்தனர். 

ஓடி வந்த தாய்மார்கள், கருணையோடு வாரி அணைத்து முத்தமிட்டார்கள்.

 யசோதை, பெருகிய அன்புடனும், பால் நிரம்பிய கொங்கைகளுடனும், கண்ணனை எடுத்துப் பாலூட்டினாள். பாலூட்டும்போது புன்சிரிப்புடன் கூடிய அவனது பற்களைப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இவ்வாறு தெய்வக் குழந்தைக்குப் பாலூட்டி, மிகவும் பேறு பெற்றவளானாள். 

இப்போது தளிர்நடைப் பருவம் வந்தது. 

கண்ணன் தன் பிஞ்சுக் கால்களால், தளிர்நடை நடந்து, மற்ற இடைச்சிறுவர்களுடன் அருகே உள்ள வீடுகளில் விளையாடினான். 

வீடுகளில் உள்ள கிளி, பூனை, கன்றுகளை அவிழ்த்துவிட்டு அவற்றின் பின்னே ஓடினான். இடைச்சிறுவர்கள் சிரித்துக் கொண்டு அவனைத் தொடர்ந்தனர்.

பலராமனுடன் கண்ணன் சென்ற இடங்களில் எல்லாம், கோபிகைகள் அவர்களைக் கண்டு களித்தனர். வீட்டு வேலைகளையும், குழந்தைகளையும் மறந்து கண்ணனையே நினைத்து, பரவசமாக ஆனார்கள். 

கண்ணன், கோபிகைகள் கொடுக்கும் புதிய வெண்ணைக்கு ஆசைப்பட்டு இனிமையாய்ப் பாடினான். அழகாய் ஆடினான். அவர்கள் கருணையோடு கொடுத்த வெண்ணையை உண்டான். சில இடங்களில் புதிதாய்க் காய்ச்சிய பாலைக் குடித்தான்.

ஒரு நாள், மரத்தின் கிளைகள் மேலே பிரகாசிக்கும் நிலவினைப் பார்த்து, பழம் என்று நினைத்து, பெற்றோரிடம் கேட்டான். 

அவர்கள் வேடிக்கையாக “நீயே கூப்பிடு, அது வரும்” என்றார்கள். கண்ணனும் கூப்பிட, நிலவு நேராக அவனது கைகளில் வந்தது. அப்போது அவன் மேனி முழுவதும் நட்சத்திரக் கூட்டங்களுடன் அண்டங்களின் வடிவாகத் தோன்றினான். 

திகைப்புடன் நந்தகோபர் நோக்கும்போது, அவரை பேரின்பக்கடலில் மூழ்கச் செய்து, மறுபடியும் மாயையால், தான் அவரின் மகன் என்ற நினைவை ஏற்படுத்தினான்.


வாமனாவதாரத்தில் மகாபலியிடம் யாசித்துவிட்டேன். 

மறுபடி யாசிக்கமாட்டேன் என்று முடிவு செய்தவனைப் போல, யாசிக்காமல் அழகாய்த் திருடத் தொடங்கினான்.

 ஒவ்வொரு நாளும் கோபிகைகள் யசோதையிடம் வந்து புகார் கூறத் தொடங்கினார்கள். 

ஒரு பெண், “இன்று காலை கண்ணன் என் வீட்டிற்கு வந்து, கன்றினை அவிழ்த்துவிட்டதால், அது மாட்டின் எல்லா பாலையும் குடித்துவிட்டது” என்று சொன்னாள். 

வேறொருத்தி, “அவன் வெண்ணை திருட ஆயிரம் வழி வைத்திருக்கிறான், உயரே உரியில் வைத்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு வெண்ணையைத் திருடுகிறான்” என்று சொன்னாள். 

மற்றொருத்தி, “பாதி வெண்ணையை அவன் உண்டுவிட்டு மீதியை குரங்குகளுக்குக் கொடுக்கிறான்” என்றாள்.

 ஒரு பெண், உயரே இருக்கும் பானையில் கல்லெறிந்து உடைத்துவிட்டு, அடியில் வாயைத் திறந்து தயிரைக் குடிக்கிறான்” என்று புகாரிட்டாள்.

 அவர்கள் கூறும் புகாரைக் கேட்ட யசோதை, கோபமாகக் கண்ணனைப் பார்க்கும்போது, அவன் கண்களில் நீருடன் நிற்பான். 

அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அவனை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொள்வாள். இவ்வாறு கோகுலத்தில், தயிர், நெய், வெண்ணையை அவன் திருடினாலும், இடைப்பெண்கள் அவனிடம் கோபம், வருத்தம் கொள்ளவில்லை. வெண்ணையுடன், அவர்கள் மனதையும் திருடி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தான்.





முந்தைய பதிவுகள் ---














பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்   பத்து

3-6  ஆறாம்  திருமொழி - நாவலம் 

கண்ணன் புல்லாங்குழல் ஊதல் சிறப்பு 


275

நாவலம் பெரிய தீவினில் வாழும்

  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 

தூ வலம்புரி உடைய திருமால்*  

தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 

கோவலர் சிறுமியர் இளங் கொங்கை-

 குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 

காவலும் கடந்து கயிறுமாலை*

  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  



276  

இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  

இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 

குட வயிறு பட வாய் கடை கூடக்*

  கோவிந்தன் குழல் கொடு ஊதின போது* 

மட மயில்களொடு மான்பிணை போலே*  

மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 

உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி* 

 ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.* 2



277

வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*

  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 

கோன் இளவரசு கோவலர் குட்டன்* 

 கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி* 

 மனம் உருகி மலர்க் கண்கள் பனிப்பத்* 

தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  

சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.* 3




கண்ணா  உன் திருவடிகளே சரணம் !!!!

கேசவா உன் திருவடிகளே சரணம் !!!!

மாதவா  திருவடிகளே சரணம் !!!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖


No comments:

Post a Comment