27 September 2025

திருமழிசை ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோயில் (மத்திய ஜகந்நாதம்)

ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோயில், திருமழிசை 

சென்னை திருவள்ளூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள தலம் திருமழிசை. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். 





மூலவர்: ஜெகந்நாதப்பெருமாள்

தாயார்: திருமங்கைவல்லித் தாயார்.

தல விருட்சம் : பாரிஜாதம்

தீர்த்தம்: பிருகு புஷ்கரிணி

இக்கோவிலில், மூலவர் ஜெகந்நாத பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராக சேவை சாதிக்கிறார். 



 மத்திய ஜகந்நாதம் என்னும் திருமழிசை -

பிரம்மாண்ட புராணத்தில் இத்தலம் மஹிசார ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர மத்திய ஜெகந்நாதம் என்றும் திருமழிசைக்கு பெயர் உண்டு. வடக்கே ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கு உத்தர ஜகந்நாதம் என்றும், தெற்கே ராமேசுவரம் அருகில் உள்ள திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப் பெருமாள் கோயிலுக்கு தட்சிண ஜகந்நாதம் என்றும் பெயர். அதுபோல், இவை இரண்டுக்கும் நடுவேயுள்ள திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில் மத்திய ஜகந்நாதம் எனப்படுகிறது. 






ஸ்தல வரலாறு 

இத்தலத்து புராண வரலாற்றின்படி, அத்ரி, பிருகு, மார்க்கண்டேயர் உள்ளிட்ட மகரிஷிகள் தாங்கள் தவம் செய்ய சிறந்த தலம் எது? என்று பிரம்மதேவனை வேண்டினர்.

பிரம்மதேவன், தேவலோக சிற்பியான மயனைக் கொண்டு, பூலோகத்தில் சிறந்த தலம் எது என்பதைக் கூறுமாறு ஆணையிட்டார். பூலோகத்தின் அனைத்து பாகங்களையும் ஒரு துலா தட்டிலும், திருமழிசையை மற்றொரு துலா தட்டிலுமாக மயன் வைத்தார். அப்போது திருமழிசை இருக்கும் தராசுத்தட்டு தாழ்ந்து, பூலோகத்தின் மற்ற இடங்களைக் காட்டிலும் சிறந்தது இதுவே என்று காட்டியது.

அதன்படியே ரிஷிகள் இங்கு பெருமாளை நோக்கி தவமிருந்தனர். அப்போது, ஸ்ரீ தேவி, பூதேவி தாயாரோடு அமர்ந்த திருக்கோலத்தில் ஜெகந்நாதப் பெருமாள் இத்தலத்தில் ரிஷிகளுக்கு சேவை சாதித்தார். அப்படியே இன்றைக்கும் நம் அனைவருக்கும் சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார்.





திருமழிசையாழ்வார்

 பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான,  திருமழிசைப்பிரான் இந்த ஊரில் அவதரித்தவர்.

திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம் கொண்டவர். இவர் பெருமாளின் அருளால் பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி அமையாருக்கும் மகனாகப் பிறந்து, பின்பு  உயிரற்ற நிலையில், பெற்றோரால் கைவிடப்பட்டு, பின்பு கடவுளின் அருளால் உயிர் பெற்று, பிரம்பறுக்க வந்த ஏழை திருவாளனின் வீட்டில் வளரப்பெற்றார். 

பிரிதொரு வேளாளர் குலத் தம்பதியர்கள் தினமும் திருமழிசைக்கு பால் கொண்டு தருவார்கள். பின்பு தாம் உண்டு சேஷித்த பாலின் மூலம் இளமையளிக்கவும், அவர்கள் ஒரு குழந்தை பெற, அக்குழந்தைக்கு கணிக்கண்ணன் என்ற பெயரோடு வளர்ந்தார். அவரை திருமழிசை தன் சீடராக ஆக்கிக் கொண்டார்.

 திருமழிசை ஆழ்வாருக்கென்று தனி சன்னதி இங்கு உள்ளது. இவரின் கட்டை விரல் நகத்தில் ஞானக் கண் பெற்றுள்ளார்.

திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் பேரருளோடு ஒரு நாள் திருவேங்கட கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள திருவல்லிக்கேணி என்னும் திருநகரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து தினமும் அல்லிக்குளத்தில் நீராடி மூலமூர்த்தியான பார்த்தசாரதியையும் சேவித்து சிந்தை மகிழ்ந்தார்.

ஒரு நாள் ருஷப வாகனத்தில் பார்வதியும் சிவனும் ஆகாய மார்கமாக வந்து கொண்டு இருந்தார்கள்.

பார்வதி இவருடைய தேஜசைப் கண்டு வியப்புற்று, "இவர் யார்" என வினவ, சிவபிரான்,

"இம்மஹானுபாவர் நம் அடிமையாய் இருந்து இப்போது நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருப்பவர்" என்று சொன்னவுடன் உமாதேவி, "அத்தகைய பெரியவருக்கு நாமும் காட்சி தந்து ஏதாவது வரம் அளித்து விட்டு செல்வோம்" என்று கூற,

அவள் விருப்பப்படி திருமழிசைப்பிரான் முன் தோன்றினார்.

ஆனால் திருமழிசை ஆழ்வார் அவரை பார்க்காதது போல் ஒரு கந்தைத் துணியைத் தைத்து கொண்டிருந்தார். இருப்பினும் தன் வரவு வீணாகக் கூடாது என்றெண்ணிய சிவபிரான், "நீ விரும்பிய வரத்தை பெற்று வாழ்வாய்" என்று நிர்ப்பந்தமாக கேட்க,

அது கேட்ட ஆழ்வார், "மோக்ஷலோகமான பரமபதத்தை அருளவல்லீராகில் அருள்வீர்" என்றார்.

அதற்கு மஹாதேவர், "அது நம்மால் இயலாது, அதை தரவல்லவன் முகுந்தன் ஒருவனே. அது தவிர வேறு வரம் கேள்" என்று கூற,

திருமழிசை ஆழ்வார் புன்முறுவல் செய்து,

"அந்த முக்தியை பெறுவதற்கு ஸாதனங்களை அனுஷ்டிப்பதற்கு உறுப்பாக நீண்ட ஆயுளையேனும் எனக்கு தரவேண்டும்"  என்று கேட்க அதற்கு கைலாசநாதர்,

 " அது கர்மானுக் குணமாக ஏற்கனவே வரம்புக் கட்டப்பட்டுவிட்டது. அதை வளரச் செய்ய என்னால் ஆகாது. வேறு வரம் வேண்டுவாய்" என்று வினவ திருமழிசைபிரான் இகழ்ச்சி தோன்ற நகைத்தார்.

அது கண்ட சிவபிரான் சினம்கொண்டு, "செருக்குடைய உன்னை இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்" என்று கூறி நெற்றிக்கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஊழிக்கால நெருப்புப் போலே அக்னி கிளர்ந்து எழுந்தது.

அது கண்ட திருமழிசை பிரான், "இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்" என்று சொல்லித் தமது வலத்திருவடியில் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்து விட,

அதிலிருந்து ஒரு பெரும் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பலமடங்கு பெரியதாகி,நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பாய் அடக்கி, முக்கண்ணனையும் சுடத் தொடங்கிற்று.

அது கண்ட சிவபிரான் அதிலிருந்து தப்பிக்க தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் காலத்திற்போலே மழை பொழியும் படி நியமித்தார்.

அவ்வண்ணமே அம்மேகங்களும் மழை பொழிந்ததனால் பெருவெள்ளம் ஏற்படவும், பரம பாகவதரான திருமழிசை ஆழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை த்யானித்துக் கொண்டு வீற்றிருந்தார். அதை கண்டு சிவபிரான் ஆழ்வாருக்கு, "பக்திஸாரர்" என்று நாமம் சூட்டி அவரை மிகக் கொண்டாடி கைலாயம் சேர்ந்தார்.

அதற்குப்பின் ஆழ்வார் முன்போலவே யோகத்தில் எழுந்திருக்கையில், அஷ்டமாசித்தி பெற்ற சுத்திஹாரன் என்னும் சித்தன் புலி மீது அமர்ந்து விண்வழியே வந்து கொண்டு இருந்தான்.

நிஷ்டையிலிருந்த திருமழிசை ஆழ்வாருக்கு மேற்கு புறமாக அந்த சித்தன் சென்ற போது புலியின் வேகம் தடைப்பட்டது. ஒன்றும் புரியாது திகைத்துப்போய் கீழே பார்த்தான் அந்த சித்தன்.

அல்லிக்குளத்தருகே பெரும் ஜோதி ஒன்று தெரிய பூமிக்கு இறங்கினான் சித்தன். ஞானத்தவமிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் நிஷ்டாகினியின் ஒளியே அந்த ஜோதி என்பதையும் அதுவே தனது புலியின் ஓட்டத்தை தடுத்தது என்பதையும் புரிந்துக் கொண்டான்.

 கந்தல் ஆடையுடன் தவத்திலிருந்த ஆழ்வாரிடம் ஒரு பட்டுத்துணியை வரவழைத்து, "இதோ இந்த பட்டாடையை உடுத்திக் கொண்டு உம் கந்தலாடையை தூக்கி எறியும்" என்றான் அவன்.

அவனுடைய சித்த வேலைகளை புரிந்து கொண்ட ஆழ்வார் தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே மாணிக்கமயமானதொரு கவசத்தை உண்டாக்கி அவனிடம் கட்டினார்.சூரியன் போல ஒளிவீசும் அதைக்கண்டு வெட்கம் அடைந்த புலிவாஹனன்,தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து "இதனை ஜபமாலையாக தரித்துக் கொள்ளும்" என்று கொடுக்க முற்பட,

திருமழிசைப்பிரான் தம் கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணிமாலைகளையும் எடுத்துக் கட்டினார்.

அவை மிகச் சிறந்த நவரத்தின மாலைகளாக விளங்கக் கண்ட புலிவாஹனன்  வெட்கப்பட்டு "எல்லா சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உம்மைக்காட்டிலும் சிறப்புடைய ஸித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை" என்று சொல்லி துதித்து நமஸ்காரம் செய்து வேறு வழியாக சென்றுவிட்டான்.

இவர் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் நான்முகன் திருவந்தாதியையும், திருச்சந்த விருதத்தையும் பாடியுள்ளார். இவர் சைவம் வைணவம் என்று இருந்தரப்பிலும் பாடல் எழுதினார். முக்கியமாக இவர் திருவரங்கம், திருவல்லிக்கேணி, அன்பில், ஊரகம், எவ்வுள், கண்ணன் கபித்தலம் முதலான திருப்பதிகளைத்  தரிசித்து அவற்றை மங்களாசாசனம் செய்துள்ளார்.  






திருமழிசையில் ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவில் மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.ஒன்பதாம்  நாளில் பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் ஏழூர் புறப்பாடு கண்டருள்கிறார். பெருமாள் திருவீதி உலாவின் போது திருமழிசை ஆழ்வாரும் உடன் எழுந்தருள்வது சிறப்பு வாய்ந்ததாகும்.





ராகு , கேது  தோஷ நிவர்த்தி  தரும்  துந்துபி விநாயகர்

பெருமாளின் கருவறை கோஷ்டத்தில் உள்ள துந்துபி விநாயகர் தனது வயிற்றில் ராகு , கேது பின்னியபடி காட்சி தருகிறார் , ஆதலால் இவரை வணங்கினால் ராகு , கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



இங்குள்ள விமானம் ஜெகந்நாத விமானம் இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

வெளி பிரகாரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.

இத்தலத்தில் தனி சன்னதியில்  திருமங்கைவல்லித்தாயார் அருள்புரிகிறார்.





திருச்சந்த விருத்தம் 


கடம் கலந்த வன்கரி*  மருப்பொசித்து ஒர் பொய்கை வாய்,* 
விடம் கலந்த பாம்பின் மேல்*  நடம் பயின்ற நாதனே*
குடம் கலந்த கூத்தன் ஆய*  கொண்டல்வண்ண! தண்துழாய்,* 
வடம் கலந்த மாலை மார்ப!*  காலநேமி காலனே!   38

789  

          


வெற்பு எடுத்து வேலை நீர்*  கலக்கினாய்! அது அன்றியும்,* 
வெற்பு எடுத்து வேலை நீர்*  வரம்பு கட்டி, வேலை சூழ்,*
வெற்பு எடுத்த இஞ்சி சூழ்*  இலங்கை கட்டழித்த நீ,* 
வெற்பு எடுத்து மாரி காத்த*  மேக வண்ணன் அல்லையே!       39

790  

          


ஆனைகாத்து ஒர் ஆனை கொன்று*  அது அன்றி ஆயர் பிள்ளையாய்,* 
ஆனை மேய்த்தி; ஆ நெய் உண்டி*  அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனை காத்து மை அரிக்கண்*  மாதரார் திறத்து, முன்* 
ஆனை அன்று சென்று அடர்த்த*  மாயம் என்ன மாயமே?     40

791










திருமங்கைவல்லித் தாயார் சமேத  ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள்  திருவடிகளே சரணம் ... !!!


அன்புடன் 

அனுபிரேம் 💖💖💖



No comments:

Post a Comment