15 September 2025

3. கண்ணனின் வேத கானம்

 






வேத கானம்

இது அன்றாடம் நடப்பது. ஆயர்பாடி சிறுவர்கள் சேர்ந்தே போவர், வருவர். எங்குமே, எப்போதும் உற்சாகமாக இருக்கும் அவர்களைப் பார்த்து ஆயர்பாடி மக்கள் அனைவரும் பெருமிதம் அடைவார்கள். இத்தனை மகிழ்ச்சி, ஆரவாரம் எல்லாம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்பதன் ரகசியம் அனைவரும் அறிந்ததே. 

கிருஷ்ணன் என்கிற சிறுவன்தான் அவர்களை இவ்வாறெல்லாம் ஆட்டிப் படைக்கிறவன். அந்தச் சிறுவனே அவர்களுக்குத் தலைவன். பசுக்களும், கன்றுகளும் கூட மறக்காமல் அன்றாடம் ஒரு முறை கூட்டத்தில் மற்ற சிறுவர்களிடையே கண்ணன் இருக்கிறானா என்று முதலில் பார்த்துக் கொண்டு தான் சந்தோஷமாக இரை தேடச் செல்லும்.

கன்றுகள் தாவித் தாவி, குதித்து ஓட, தாய் பசுக்கள் பெருமிதமாக மிதந்து செல்லும்.

 கண்ணன் ஏதாவதொரு பசுவின் அருகில்தான் நிற்பான். கூடவே அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நடப்பான். அவன் இடையில் இருக்கும் சிறு மூங்கில் குழல் பகல் முழுவதும் சில சமயம் அந்தக் காட்டுப் பிரதேசத்தில் அவனது வேணு கானத்தைப் பரப்பும். 

சில சமயங்களில் சிறுவர்கள் யமுனை நதியில் குதித்து நீச்சல் அடிப்பார்கள், விளையாடுவார்கள். சில சமயங்கள் கூடிப் பேசி, பாடி ஆடுவார்கள். கண்ணன் வேணுகான நேரங்களில் பசுக்கள் எல்லாம் வயிறு நிரம்ப உண்டு, ஒன்றாகக் கூடி அவனருகே மர நிழல்களில் கூட்டமாக அமர்ந்து அசை போட்டுக் கொண்டு கண்மூடி, தலையாட்டி கண்ணனின் குழலிசையைக் கேட்கும்.

ஒரு கன்றுக் குட்டி தாயைக் கேட்டது:

“அம்மா, உனக்கு என்னைப் பிடிக்குமா, கண்ணனின் குழல் இசை பிடிக்குமா?”

“ஏன், இரண்டுமே பிடிக்கும்!”

“ரெண்டுலே எது ரொம்பப் பிடிக்கும்?”

“உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ரொம்பப் பிடிக்கும்; கண்ணன் குழலிசையை கேட்டுக்கொண்டே இருக்க ரொம்ப பிடிக்கும்” என்று பசு சொன்னது.

ஒரு கன்றுக்குட்டி மற்றொரு ஆயர்பாடிச் சிறுவன் ஊதிய குழலைப் பார்த்துக் கேட்டது “ஏன் உன்னிடம் கண்ணன் ஊதும் குழலின் ஓசை வரவில்லை?”

அந்தக் குழல் சொன்னது “நானும் கண்ணன் கையில் இருக்கும் மூங்கில் குழலும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் தான், என்னை இந்தச் சிறுவன் கண்ணன் போல் உபயோகிக்கவில்லை”

இதைக் கேட்ட அந்தச் சிறுவன் தனது குழலை, கண்ணனிடம் கொடுத்து அவன் குழலை வாங்கி ஊதினான். 

ஓசையில் எந்த மாற்றமும் இல்லை. 

அப்போது கண்ணனின் குழல் சொல்லியது “ஏ, சிறுவா! நான் மாற்றமே இல்லாத மரத்துண்டு தான். நீ ஊதினால் நான் அதுவாகவே இருக்கிறேன். கண்ணன் என் மீது அவன் காற்றைச் செலுத்தும்போது எனக்கு ஜீவன் கிடைத்து, அவன் அருளால் அவனின் ஒரு பகுதியாகவே மாறி விடுகிறேன். ஆகவே தான் கண்ணன் ஊதும்போது நான் அவன் ஜீவ நாதமாகி, காற்றில் கலக்கிறேன்”

ஆயர் பாடி பூலோக சுவர்க்க பூமியாகத் திகழ்ந்ததில் என்ன ஆச்சரியம்? ஸர்வம் கிருஷ்ண மயம் ஜகத் என்றும், கிருஷ்ணார்ப்பணம் என்றும் சொல்வதே எதையும், எவரையும், கிருஷ்ணனாகவே காணவும், அவனால் பெற்ற எதுவும் அவனுக்கே, அவனுடையதே என்ற சுயநலமற்ற தன்மை நம்மில் வளரவே நாம் மேற்கொள்ளும் பயிற்சியாகும் அல்லவா?




முந்தைய பதிவுகள் ---
















பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்   பத்து

3-6  ஆறாம்  திருமொழி - நாவலம் 

கண்ணன் புல்லாங்குழல் ஊதல் சிறப்பு 


281

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*
பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத* 
 அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 

அவியுணா மறந்து வானவர் எல்லாம்* 
 ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  7



282

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*
  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக் * 
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்* 
 கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*

பறவையின் கணங்கள் கூடு துறந்து*
  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 8


283

திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்* 
 செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*
  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 

மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*
  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  
எழுது சித்திரங்கள் போல நின்றனவே.* 9


284

கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து* 
 கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
அருங்கல உருவின் ஆயர் பெருமான்*
  அவனொருவன் குழல் ஊதின போது* 

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்* 
 மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்* 
இரங்கும், கூம்பும்; திருமால் நின்ற நின்ற- 
பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.* 10


285

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  
கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  
கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னைக்* 

குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  
விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  
சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2) 11






கண்ணா  உன் திருவடிகளே சரணம் !!!!

கேசவா உன் திருவடிகளே சரணம் !!!!

மாதவா  திருவடிகளே சரணம் !!!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖

No comments:

Post a Comment