🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 3 ஆம் திருநாள் காலை சிம்ம வாகனத்தில் சுவாமி 🍃🌷
திருவேங்கடத்தில் ஏழு மலைகள்-
இங்கு ஏழு மலைகளை மையமாக்கி பெருமாள் குடிகொண்டதால் இவருக்கு 'மலையப்பர்', 'மலை குனிய நின்றான்' என்ற பெயர்களும் உண்டு.
நாராயணன் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு மலைகள் அடங்கியுள்ளன.
ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே ஏழு மலைகள்.
அவன் உடல் =அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால் = ஸ்ரீசைலம் - மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷாத்திரி, அஞ்சனாத்திரி, நாராயணாத்திரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என்பவை அந்த ஏழு மலைகள்.
திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளது.
1.வேங்கட மலை – வேங்கடாத்ரி : ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2.சேஷ மலை – சேஷாத்திரி : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3.நாராயணாத்திரி – வேதகிரி : எம்பெருமான், வேதங்களை மீன் வடிவத்தில் காத்ததால், வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. இங்கே எம்பெருமான் நாராயணனே, மலை வடிவிலேயே காட்சி அளிப்பதால், இது நாராயணத்ரி என்று அழைக்கப்படுகிறது.
4.கருட மலை – கருடாத்திரி : இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5.விருஷப மலை – விருஷபாத்ரி : விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவன் எம்பெருமானை வேண்டி, அவன் பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6.அஞ்சன மலை – அஞ்சனாத்ரி : ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
7.நீலாத்ரி : ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
திருமலையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற ஒரு பாறை படிமம் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து தான் ஸ்ரீனிவாச பெருமாள் வெளிப்பட்டதாக சொல்வார்கள். இங்கு ஐராவதம், அபாய ஹஸ்தம், கருடாழ்வார் வடிவில் அமைந்த பாறைகள் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள் ஆகும். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை என்று சொல்வார்கள்.
திருமகளை தேடி அலைந்த ஸ்ரீனிவாச பெருமாள் ஒரு சிகரத்தில் நின்றதாக சொல்வார்கள். அது நாராயணகிரி என்ற மலை ஆகும். இப்போதும் அங்கு எம்பெருமானின் திருவடிகள் உள்ளன, அவற்றை ஸ்ரீவாரி பாதம் என்று பக்தர்கள் வணங்குகிறார்கள். இந்த இடம் சிலாதோரணத்திற்கு அருகில் உள்ளது.
பெருமாள் திருமொழி
4. ஊன் ஏறு செல்வத்து
திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல்
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே 5
செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.
வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment