18 October 2025

13. அநந்தாழ்வான்

 🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 6 ஆம் திருநாள் இரவு கஜ (யானை) வாகனத்தில்  சுவாமி  புறப்பாடு 🌷🍃









 அநந்தாழ்வான்


திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை

அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)

ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்

எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி


அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி  ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். 

எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். 

அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். 

திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.


எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார். 

அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார். 

இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று அழகிய நந்தவனம் அமைத்து ஆழ்வார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழ்வார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார். அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.

 அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.

 இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.


வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார். 

அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர். 

ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார். பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார். திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார். 

ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.

 திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள். அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால் பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்). அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.


ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர். 

அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார். 

ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள். இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார். 

அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.

 திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும் திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.


ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. 

அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார். “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப் பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன். மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார். அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.

 அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார். 

ஏனென்றால் குலசேகர ஆழ்வார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே. அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். 

ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார். அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில் இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால் எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர  வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.

 அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.; அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார். 

அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

 அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர். அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும் பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார். அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர் அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.


இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.





பெரிய திருமொழி - முதற் பத்து 

1-8 கொங்கு அலர்ந்த மலர் 

திருவேங்கடம் - 1


 பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் * 

இரங்க வன் பேய் முலை *

பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை * பிரான்

 அவன் பெருகும் இடம் **

வெள்ளியான், கரியான், * மணி நிற வண்ணன்

 என்று எண்ணி * நாள்தொறும்

தெள்ளியார் வணங்கும் மலைத் * 

திருவேங்கடம் அடை நெஞ்சமே 2


ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💓💓💓


No comments:

Post a Comment