30 October 2025

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் - ஐப்பசி திருவோணம்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் - ஐப்பசி திருவோணம்








பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்


அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே

ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே

முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே

மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே

நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே

நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே

உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே

உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.

 


பிள்ளை லோகாசார்யர் வைபவம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்

அவதார ஸ்தலம்: திருவரங்கம் ( கிபி 1205 )

ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை

பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)


பிள்ளை லோகாசார்யர் பரம காருணிகர் என்று பூர்வாசார்யர்களால் கொண்டாடப்படுபவர்.  

  இவர் திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் மூத்த குமாரராக அவதரித்தவர்.  வடக்குத் திருவீதிப்பிள்ளை தமது ஆசார்யரான நம்பிள்ளையின் திருநாமமான லோகாசார்யர் என்ற திருநாமத்தையே தன் குமாரருக்குச் சூட்டினார்.

  வடக்குத் திருவீதிப்பிள்ளை எம்பெருமானாரின் எழுபத்து நான்கு சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவரான முடும்பை நம்பி என்ற வம்சத்தில் வந்தவர்.  அதனால் தான் மணவாள மாமுநிகளும் தமது உபதேச ரத்ந மாலையில் பிள்ளை லோகாசார்யரைக் குறிப்பிடும்போது “முடும்பை அண்ணல் உலகாரியன்” என்று கூறுகிறார்.

 இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி திருவோணம்.  இவர் நமது பெரியவர்களால் காட்டப்பட்ட ரஹஸ்ய அர்த்தங்களைப் பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்களில் அருளிச் செய்துள்ளார்.  முதன் முதலில் ரஹஸ்ய அர்த்தங்களை விரிவாக ஏடுபடுத்தியவர் பிள்ளை லோகாசார்யர்.  அதனால்தான் பிள்ளை லோகாசார்யர் பரம காருணிகர் என்று அழைக்கப்பட்டார்.

முற்காலத்தில் இந்த ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஒரு ஆசார்யர் தமது சிஷ்யர்களுக்கு மட்டுமே உபதேசிப்பர்.   இவ்வாறு ரஹஸ்ய அர்த்தங்கள் ஆசார்ய சிஷ்யர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன. 

 பிள்ளை லோகாசார்யர் ரஹஸ்ய த்ரயம் விஷயமான க்ரந்தங்கள், சம்பிரதாய அர்த்தங்களுக்கான ரஹஸ்ய க்ரந்தங்கள், தத்வத்ரயத்திற்கான ரஹஸ்ய க்ரந்தங்கள் என்று தனித்தனியாகப் பிரித்து ஏடுபடுத்தி அனைவரும் உஜ்ஜீவனம் அடைய வழி செய்த பரம கருணை படைத்தவர். 

 ப்ரஹ்மசர்ய வ்ரதம் கடைப்பிடித்து, உலக விஷயங்களில் பற்றற்று நூறாண்டுக்கு மேலே வாழ்ந்தவர்.    பல க்ரந்தங்களை அருளிச் செய்து ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் முகலாயர்கள் திருவரங்கத்தின் மீது படையெடுத்தனர்.  எம்பெருமான் அர்ச்சாவதாரத்தில் தன் அர்ச்சா சமாதியைக் குலைத்துக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள முயற்சிக்க மாட்டான்.  சில சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அர்ச்சா சமாதியைக்  (பேசாதிருக்கும் நிலையை) குலைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அடியவர்களிடம் மட்டும் மிகக் குறைவான வார்த்தைகளை எம்பெருமான் அருளியுள்ளான். அவன் பரமசக்தனாக இருந்த போதும் அர்ச்சாவதாரத்தில் அசக்தனாகக் காட்டிக் கொள்ளும் பெருமை படைத்தவன் எம்பெருமான். 


 அவ்வாறு இருக்கும் போது முகலாயர் படையெடுப்பில் பெரிய பெருமாளுக்கு முன் ஒரு கல் திரையை ஏற்படுத்தி அடியவர்கள் நம்பெருமாளை எழுந்தருளச் செய்து கொண்டு சென்றனர்.  பிள்ளை லோகாசார்யர் தலைமையில் நம்பெருமாள் புறப்பட்டுச் சென்று பல திவ்ய தேசங்களைக் கடந்து மீண்டும் திருவரங்கம் வந்து சேர ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆனது.  

பிள்ளை லோகாசார்யர் வயோதிகராக ஆனபோதும், மதுரையில் ஆனைமலைக்கு பின்பகுதியில் உள்ள ஜோதிஷ்குடியில் (இன்று கொடிக்குளம் என்று அழைக்கப்படுகிறது)  எம்பெருமானை அவ்விடம் வரை கொண்டு சென்று மிகுந்த பொறுப்புடன் பாதுகாத்து வந்தார்.  வயோதிகம் காரணமாக அவ்விடத்திலேயே பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.  அவ்வாறு எம்பெருமானுக்காக வாழ்ந்தவர்.

மேலும் இவர் அருளிய ஸ்ரீவசந பூஷணம் என்ற க்ரந்தத்தின் முன்னுரையில் மணவாள மாமுனிகள் பிள்ளை லோகாசார்யரை தேவப் பெருமாளின் (காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்) அவதாரம் என்றே காெண்டாடுகிறார்.  இவருடைய தனியனில் சம்ஸாரம் என்ற பாம்பின் வாயில் கடிபட்டவர்களுக்கு அருமருந்தாக இருக்கக் கூடியவர் என்று காட்டப்பட்டுள்ளது.



பிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம் விளக்கவுரை

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே –  அத்திகிரி என்பது காஞ்சீபுரம்.  

காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தின் அர்ச்சகருக்கு காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கனவில் வந்து சில உபதேசங்களைச் செய்தார். 

 பெருமாள் உபதேசங்களைப் பாதியில் நிறுத்திவிட கலக்கமுற்ற அர்ச்சகர் எம்பெருமானை வேண்ட அவர் “நீர் திருவரங்கம் வாரும். அங்கு உமக்கு மீதம் உள்ள உபதேசங்களை அருளுகிறேன்” என்று கூறி மறைந்தார்.  

மணப்பாக்கம் நம்பியும் திருவரங்கம் வந்து காட்டழகிய சிங்கர் சந்நிதியில் ஒரு ஆசார்யர் காலக்ஷேபம் செய்வதைக் கண்டார்.  உடனே அந்த உபதேசங்களை உற்றுக் கேட்கலானார்.  

தேவப் பெருமாள் இவருக்குச் செய்த உபதேசத்தின் தொடர்ச்சியை அந்த ஆசார்யர் தமது சிஷ்யர்களுக்கு உரைக்கக் கேட்ட மணப்பாக்கம் நம்பி மிகுந்த ஆச்சர்யமடைந்தார்.

 அந்தக் காலக்ஷேபத்தைச் செய்து கொண்டிருந்தவர் பிள்ளை லோகாசார்யர் என்பதை அறிந்தார்.  மணப்பாக்கம் நம்பி  காஞ்சீபுரத்தில் தேவப்பெருமாள் கூறிய உபதேசத்தின் தொடர்ச்சி திருவரங்கத்தில் உள்ள ஆசார்யருக்கு எவ்வாறு தெரிந்தது என்ற ப்ரமிப்புடன் கோஷ்டிக்குள் சென்று தெண்டனிட்டு “அவரோ நீர்?” என்று பிள்ளை லோகாசார்யரை நோக்கிக் கேட்டார். 

 பிள்ளை லோகாசார்யர் மேலே கூறுங்கள் என்னும் பொருள் படும்படி “ஆவது என்ன?” என்றுக் கேட்டார்.  இதன் மூலம் பிள்ளை லோகாசார்யர் தேவப்பெருமாளின் பரம க்ருபையினால் அவதாரித்தவராகக் கருதப்பட்டார்.   தேவப்பெருமாளின் அநுக்ரஹம் பெற்ற பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.




ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே – பொய்கை ஆழ்வார் அவரித்த ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர்,  அவர்  பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.


முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே – முக்திக்கு வழி காட்டும் வேதத்திற்கு ஈடாக இவர் தமிழில் அருளிச்செய்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்கள் கருதப்படுகிறது.    அவ்வாறு ஏற்றம் மிகுந்த ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்த பிள்ளை லோகாசார்யர் வாழ்க.


மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே – அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கு தமையனாராக அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர்.  அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் நைஷ்டிக ப்ரஹ்மாசாரியாக இருந்து தமது தமையனார் போல ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.  இவர் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான க்ரந்தத்தில், நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.    கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை, அமலனாதி பிரான் போன்ற ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் பிள்ளை லோகாசார்யருக்கு சிறிது காலம் முன்பாகவே திருநாட்டிற்கு எழுந்தருளிவிட்டார்.  அப்போது இவரது சரம திருமேனியை பிள்ளை லோகாசார்யர் மடியில் இட்டுக்கொண்டு “கீதையின் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை நன்றாக விளக்கக் கூடியவர் யார் இருக்கிறார்? இவ்வாறு பரமபதத்திற்குச் சென்று விட்டீரே” என்று வருந்தினாராம்.  

பெரிய ஞானியான பிள்ளை லோகாசார்யரே கலங்கும் அளவிற்கு மிகுந்த மேன்மை படைத்தவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.  பொதுவாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒருவர் பரமபதித்தால் வருத்தப்படக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.  ஆனாலும் பரமபதித்தவர் அடையும் தேசமான பரமபதத்தின் மேன்மையும் அங்கு அவருக்குக் கிடைக்கும் வரவேற்பையும் நினைத்து மகிழ்ந்தாலும், இழந்த தேசமானது கலங்கும் என்றும் கூறுவார்கள்.


இவ்விடத்தில் வேறொரு சம்பவம் காட்டப்படுகிறது.  கூரத்தாழ்வான் திருநாட்டிற்கு எழுந்தருளின சமயம் அனைத்தும் அறிந்த எம்பெருமானாரே கதறினார் என்று பார்க்கிறாேம்.  சிறந்த பக்தர்களை இழந்தால் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் கலக்கமடைவர்.  அவ்வாறு பெருமை மிகுந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்குத் தமையனாக அவதரித்த பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.


நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே – தினந்தோறும் தனது தந்தையின் ஆசார்யரான நம்பிள்ளையின் திருவடிகளை திருவுள்ளத்தில் வைத்து வணங்கக் கூடிய பிள்ளை லோகாசார்யர் வாழ்க.  நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை ஏடுபடுத்தியவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பது அறிந்தோம்.  

அவரது திருக்குமாரர்களான பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் தமது தந்தையார் மூலமாக நம்பிள்ளையின் காலக்ஷேப அர்த்தங்களை அறிந்து வளர்ந்தவர்கள். 

 நம்பிள்ளையின் காலக்ஷேபத்தில் எடுத்துரைத்த விஷயங்களை பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் தமது க்ரந்தங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.  அத்தகைய சிறப்புப் பெற்ற நம்பிள்ளையை மனதில் வணங்கும் பிள்ளை லோகாசார்யர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப் படுகிறது.


நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே –  நம்பிள்ளையின் காலக்ஷேப வாயிலாகக் கேட்ட கருத்துக்களை பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷணத்தில் விவரித்துள்ளார்.  “திவ்யஶாஸ்த்ரம்” என்றே ஸ்ரீவசன பூஷணம் ப்ரசித்தியாக அறியப்படுகிறது. இவர் அருளிய பதினெட்டு க்ரந்தங்களில் முமுக்ஷூப்படி, தத்வத்ரயம் மற்றும் ஸ்ரீவசன பூஷணம் சிறந்த க்ரந்தங்களாகும்.  இவைகளை காலக்ஷேபமாகக் கேட்கும் வகை செய்துள்ளனர் நம் பூர்வாசார்யர்கள்.

பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளைக் கோர்த்து இந்த ஸ்ரீவசன பூஷணம் என்ற க்ரந்தத்தை அருளிச் செய்துள்ளார் பிள்ளை லோகாசார்யர்.  ஆசார்யரின் அபிமானத்தினால்தான் ஒருவன் மோக்ஷம் கிட்டப் பெறுவான் என்பதை வலியுறுத்தும் வண்ணம் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்று இந்த ஸ்ரீவசனபூஷணத்தில் காட்டப்பட்டுள்ளது.  ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீவசன பூஷணம் மூலமாக நியமித்த பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ வேண்டும்.


உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே –   இவ்விடத்தில் நகர் என்பதைக் குலம் என்று கொள்ள வேண்டும்.  எம்பெருமானாரின் சிஷ்யரான முடும்பை நம்பி வம்சத்தில் அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர் என்பதை அறிவோம்.  அவ்வாறு சிறந்த குலத்தில் பிறந்து இப்பூவுலக சம்சாரிகள் உஜ்ஜீவனம் அடைய தமது க்ரந்தங்களின் மூலம் வழி காட்டிய பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.


உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே – உலகாரியன் என்றால் பிள்ளை லோகாசார்யர்.  அவருடைய திருவடிகள் காலம் உள்ள அளவும் வாழ வேண்டும் என்று பிள்ளை லோகாசார்யரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.




பிள்ளை லோகாசாரியரின் தனியன்: 


லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே

ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:


(ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்கிற வடக்குத் திருவீதிப்பிள்ளையின்  திருக்குமாரரும் ஆசார்யனுக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் நிரம்பியவரும், பிறவியென்னும் நச்சுப் பாம்பால் கடியுண்ட உயிர்களுக்கு மருந்தாக விளங்குபவருமான பிள்ளை லோகாசார்யருக்கு வணக்கம்).



பிள்ளை லோகாசாரியார் மற்றும் அவர் கோஷ்டிக்கு மங்களாசாசனம் 

                                          வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம்                                                               வாழி முடும்பை என்னும் மாநகரம்                                                                                       வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்                                             இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .                            


எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.


பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


அன்புடன் 
அனுபிரேம் 💗💗


No comments:

Post a Comment