03 October 2025

4. ஹம்ச (அன்ன) வாகனத்தில் மலையப்ப சுவாமி ...

 🌺🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 2 ஆம் திருநாள் இரவு ஹம்ச (அன்ன) வாகனத்தில் மலையப்ப சுவாமி ...









திருமலையின்  மலைகள் - சேஷாத்திரி மலை 

திருமலை கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி (980 மீ) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் தோராயமாக 10.33 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.

 திருப்பதி ஆதி வராஹ க்ஷேத்திரம். வராஹ சன்னதி வெங்கடேஸ்வரரின் பிரதான சன்னதியை விட பழமையானது.

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வாதம் ஏற்பட்டது. ஒருவரைவிட மற்றவர் பலசாலி என அவ்விருவரும் வாதிட்டுக்கொண்டனர். அச்சமயத்தில் கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டு நாரதர் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

  அவர்களின் சண்டையை அவர் கேட்டு, 'அன்பர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே பலசாலிகள். உங்களில் யார் மிகப் பலசாலி என்ற விஷயத்தை அறிய ஆவலானால், நான் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்: 'ஆதிசேஷனே! நீ மேரு பர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக! வாயு தேவனே! ஆதிசேஷன் வலம்கொண்ட ஆனந்தபர்வதத்தை உனது வலிமையால் அசைப்பாயாக! உன்னால் அசைக்க முடியுமானால் நீதான் பலசாலி, இல்லையேல், ஆதிசேஷன் பலசாலி” என்றார்.

நாரதர் சொன்ன இந்த யோசனை அவ்விருவர்களுக்கும் பிடித்தது.

 உடனே  ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தை வலமாகச் சுற்றிக் கொண்டார். வாயுதேவன் தனது வலிமையையும், முழுமையையும் காட்டி அந்தப் பர்வதத்தை அசைக்க முயன்றார்; 

ஆயினும் அசைக்க முடியவில்லை. 

இரவும் பகலுமாக புயல் காற்றாக வீசிக்கொண்டிருந்தான் வாயுதேவன்.

 ஆதிசேஷனும் விடாப்பிடியாக இருந்து பருவதத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.

வாயுதேவனின் வலிமை மிகவும் பயங்கரமானது. வீசிய காற்று புயலாக மாறியது. இதனால்,  எல்லா உலகங்களும் நடுங்கிவிட்டன. எல்லாப் பிராணிகளும் மிகவும் கஷ்டப்பட்டன. 

ஆதிசேஷனும், வாயுதேவனும் அவரவர் முயற்சியைக் கைவிடவில்லை. இவ்வாறு சில நாள்கள் இந்த பிடிவாதப் போட்டியில் கழிந்தன. 

ஏழு உலகங்களும் ஸ்தம்பித்துப்போயின பூமியின் இயக்கம் யாவும் நின்று போனது. மண்ணுலகின் உயிர்களெல்லாம் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாயின. 

இதைப் பார்த்து இந்திரன் முதலிய தேவர்கள் அங்கு வந்தனர். 

தேவேந்திரன் ஆதிசேஷனை நோக்கி 'சுவாமி! இது நியாயமா! பசுக்கள் சண்டையிடுவதால், இடையில் உள்ள கன்றுகள் கஷ்டப்படுவது நியாயமா? உங்கள் சண்டையால் எல்லா உலகங்களும் கஷ்டப்படுகின்றன. வாயு தேவனின் கோபத்துக்கு பிராணிகள் ஆளாக முடியுமா? ஆகையால் நீ எங்களைப் பார்த்தாவது உன் முயற்சியைக் கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  

தேவர்களின் விண்ணப்பத்துக்கு இணங்கி, ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தில் உள்ள தன் பிடிப்பை சிறிது தளர்த்தினான். இதுவே நல்ல தருணம் என்று எண்ணிய வாயுதேவன், ஆனந்த பர்வதத்தை மேலே தூக்கி எறிந்துவிட்டார்.

 அங்கேயிருந்த அந்தப் பர்வதம் பூலோகத்தில் வராகக்ஷேத்திரம் எனும் இடத்தில் விழுந்தது. இப்போதிருக்கும் திருப்பதி பகுதிதான் அது. 

ஆதிசேஷன் மூலமாக வந்த காரணத்தால், அந்த மலைக்கு சேஷாத்திரி (சேஷன் மலை) என்ற பெயர் வந்தது.

ஸ்ரீ மகாவிஷ்ணு வேங்கடவனாக அவதாரம் செய்து அவர் மக்களுக்கு காட்சி தந்தபடி இருக்க வேண்டும் எனும் போது  அவர் தேர்ந்தெடுத்த மலை சேஷாலம்.

ஆதிசேஷன் படுத்த போது அவரது தலைப்பகுதியின் மையப்பகுதி சேஷாத்திரி மலையாகும், இந்த இடத்தில்தான் ஸ்ரீ வெங்கடாஜலபதி தலம் அமைந்துள்ளது.

தலையின் ஆரம்பத்தில் அருகே காளஹஸ்தி தலம் அமைந்துள்ளது. 

ஆதிசேஷனின் இதயப்பகுதியில் அமைந்த தலம் அகோபிலம்.

ஆதிசேஷனின் வால்பகுதியில் அமைந்த தலம் ஸ்ரீ சைலம் ஆகும்.

திருமலை முதல் ஸ்ரீ சைலம் வரை படுத்து மலையானார் ஆதிசேஷன்.

 


பெருமாள் திருமொழி

 4. ஊன் ஏறு செல்வத்து

திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல் 


ஒண் பவள வேலை*  உலவு தன் பாற்கடலுள்*

கண் துயிலும் மாயோன்*  கழலிணைகள் காண்பதற்கு*

பண் பகரும் வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துச்*

செண்பகமாய் நிற்கும்*  திரு உடையேன் ஆவேனே 4


நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.


ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன், 
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment