10 October 2025

9. திருவேங்கடமும் தொண்டமான் சக்கரவர்த்தியும் ...

  🌷🍃ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🍃🌷🪷

5 ஆம் திருநாள்  தங்கக்கிளியுடன் நாச்சியார் திருக்கோலத்தில் திருவேங்கடமுடையான் 🌟










தொண்டமான் சக்கரவர்த்தி

தொண்டமான் சக்ரவர்த்தி,  திருப்பதி வேங்கடாசலபதிக்கு மிகவும் பக்தி உடையவராகவும்,  சில நூறு வருடங்களுக்கு முன் திருப்பதியும் சேர்த்து தொண்டை நாட்டை ஆண்டு வந்தார்.

திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியில் (5.8.9), தொண்டைமான் சக்ரவர்த்திக்கு எம்பெருமான் திருவருள் செய்ததும், அந்த மஹாபக்தனுக்கு மந்திரோபதேசம் செய்ததும், அவனுக்கு மெய்யுணர்வை உண்டாக்கி அருளியதும் சொல்கிறார்.


துளங்கு நீள் முடி அரசர் தம் குரிசில்

 தொண்டை மன்னவன் திண்டிறல் ஓருவற்கு *

 உளங் கொள் அன்பினோடு நின் அருள் சுரந்து அங்கு 

ஓடு  நாழிகை ஏழு உடன் இருப்ப, * 

வளங்கொள் மந்திரம் மற்று அவருக்கு அருளிச் 

செய்தவாறு அடியேன் அறிந்து, உலகம் *

 அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

 அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 

(பெரிய திருமொழி 5.8.9)


தொண்டைமான் சக்கரவத்தி திருவேங்கடமலையில் எம்பெருமானை மிக்க பக்தியுடனே சிந்தித்து, வாழ்த்தி, வழிபாடு செய்ய, திருவேங்கடமுடையானும் திரு உள்ளம் உகந்து, அந்த அரசனை நண்பனாகக் கொண்டு, அவன் வரும் பொழுதெல்லாம் தனது அர்ச்சாவதார வரம்பைக் கடந்து அவனுடன் பேசுவான் என்றும், அவனுக்கு அஷ்டாக்ஷர மஹாமந்தத்ரத்தையும் அதன் அருமையான பொருள்களையும் மற்றும் பல ஹிதங்களையும் உபதேசித்து அருளினான் என்றும் சொல்வதுண்டு.

அந்த அரசனும் இந்த எம்பெருமானுக்கு இரண்டு கோபுரங்கள், இரண்டு பிரகாரங்கள், மண்டபம், திருமதில், யாகசாலை, மடப்பள்ளி, கோசாலை மற்றும் கர்ப்பக்கிரகம் எல்லாம் படிப்படியாக செய்து கொடுத்தவர். மேலும் பல பொன்னும் மணியும் கொடுத்தவர். 

தினமும் நித்ய நைமித்திக உத்ஸவங்களை நடத்தி வைத்தது மட்டும் இன்றி, நாள்தோறும் ஸ்வர்ணமயமான ஆயிரத்தெட்டுத் தாமரைகளைக் கொண்டு ஸ்ரீநிவாஸனுக்கு ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்து வந்து இறுதியில் அந்த பெருமான் அருளால் மோக்ஷம் அடைந்தான்.

தொண்டைமான் சக்ரவர்த்தி தினந்தோறும் இனிது ஏழு நாழிகை அங்கு கழிப்பான் என்றும் சொல்கிறார். இந்த திருமந்திர அர்த்தமாக ஏழு மெய்பொருள்கள் நெஞ்சில் பட்டன என்றும் பொருள் கொள்ளலாம்.  ஏழு அர்த்தங்களாவன


தேஹமே ஆத்மா என்கிறது நீங்குதல்,

தான் ஸ்வாந்த்ரன் என்பது நீங்குதல்

மற்ற தேவதாந்தரங்கட்குத் தான் அடியவர் ஆகாது இருத்தல்

பேற்றின் பொருட்டுத் தன் முயற்சி தவிர்த்தல்

உறவினரல்லாதாரை உறவினாராகக் கொள்ளாமை

ஐம்புலன் ஆசையொழிதல்

பாகவத சேஷத்வம்

திருமந்திரத்தில் இந்த ஏழு தத்துவங்கள் அடங்கியவை என்றும், திருமந்த்ர அர்த்த உபதேசத்தால் அடியார்க்கு இந்த இயல்புகள் அமையும் என்பது ஸம்ப்ரதாயம்.

அவரின் பக்தி மேலீட்டால் வெங்கடாசலபதி தொண்டைமானுடன் நேரிடையாக பேசுவார்.  

சங்கு சக்கரங்களை கொடுத்தது

வெங்கடேச பெருமாளின் மேல் இருந்த பக்தியால்,  நாட்டை, மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். 

அப்போது பெருமாள்,  எதிரி நாட்டு மன்னன் போர் தொடுத்து வருவதால்,  தொண்டைமான் சக்ரவர்த்தியின் நாட்டுக்கு ஆபத்து வருவதாகவும், அவனை திரும்பிச்  செல்லுமாறும்  மன்னனுக்கு கூறுகிறார். 

அதற்கு  மன்னன், சீனிவாச பெருமாளின் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கேட்க பெருமாளும் சங்கு சக்கரங்களைக் கொடுத்து,  தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.

அதேபோல், இது நடந்து முடிந்தபின், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, சங்கு சக்கரங்கள் இடைப்பட்ட காலத்தில் இல்லாததால், சைவர்கள், பெருமாளை சிவன் என்று வாதிட, இராமானுஜர், திருமலை அப்பனுக்கு, சங்கு, ஆழி கொடுத்து பரம்பொருள் என்றும், பெருமாள் என்றும் நிலை நாட்டினார்  என்பதும் இன்னொரு வரலாறு.



பெருமாள் திருமொழி

 4. ஊன் ஏறு செல்வத்து

திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல் 


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே 9


உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.


பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.


ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன், 
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment