🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025🌷🍃
🪻4 ஆம் திருநாள் காலை கற்பக விருக்ஷம் வாகனத்தில் சுவாமி புறப்பாடு 🪻
திருமலையின் ஆனந்த நிலைய விமானம் -
திருமலை வேங்கடேச பெருமாள் உறையும் கருவறைக்கு மேலே உள்ளதுதான் ஆனந்த விமானம் என்னும், பொன்னாலான அழகிய விமானம். பார்த்த நிலையிலேயே ஆனந்தத்தை அளிக்கும் தெய்விக விமானம் என்பதாலேயே இது ஆனந்த விமானம் என்று அழைக்கப்பட்டது போலும். கலசத்துடன் சுமார் 88 அடி உயரமான இந்த விமானம் எப்போது உருவானது என்று அறிய முடியவில்லை. பொன்மயமான மேருமலையே ஆனந்த விமானமாக மாறி திருமலையில் அமைந்ததாக திருமலைப் புராணம் கூறுகின்றது.
கருவறையில் சற்று நேரம் கண்குளிரக் காண முடியாத வேங்கடேச பெருமாளை பக்தர்கள் வெளியே வந்து ஓர் இடத்தில் கண்குளிர தரிசித்து அருள் பெறுகிறார்கள். அவர்தான் விமான வேங்கடேச பெருமாள். ஆகமப்படி வீற்றிருக்கும் இந்த அழகிய பெருமாள் விமான சீனிவாசர் என்றும் விமான வேங்கடேஸ்வரர் என்றும் வணங்கப்படுகிறார்.
திருமலை திருப்பதியில் வேங்கடேச பெருமாள் கருவறையில் இருப்பதைப்போலவே நின்றிருக்கும் கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு, பின்புறக் கரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, முன் வலக்கை அபயஹஸ்தமாகவும், முன் இடக்கை இடுப்பில் வைத்தவாறும் விமான வேங்கடேஸ்வரர் காட்சி தருகிறார். இவரின் இடப்புறம் ஆஞ்சநேயரும், வலப்புறம் கருடபகவானும் வீற்றிருக்கிறார்கள்.
ஜடாவர்மன் சுந்தர பாண்டிய அரசரால் இந்த விமானம் கிபி 12-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
வீரநரசிங்கராயர் என்ற அரசர், அவருடைய உடல் எடைக்கு நிகராக தங்கத்தை துலாபாரம் அளித்தார் என்றும், அந்தத் தங்கத்தால்தான் இந்த ஆனந்த விமானம் பொன்னால் வேயப்பட்டது என்றும் கல்வெட்டு கூறுகிறது.
இந்த விமானத்தின் பெருமையே அதில் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் விமான வேங்கடேசர் திருவுருவம்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆனந்த விமானத்தில் சுயம்புவாக வீற்றிருக்கும் விமான வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மூலவரான வேங்கடேச பெருமாளை தரிசித்ததற்கு இணையானது என்ற நம்பிக்கை உள்ளது.
கருவறை பெருமாளை வணங்கிவிட்டு வெளிச்சுற்றில் வரும்போது விமானத்தின் வடகிழக்கு மூலையில் வீற்றிருக்கும் இந்த விமான வேங்கடேச பெருமாளை வணங்க வேண்டும். இவரை மனமார வணங்கி வேண்டினால் எல்லா பாவங்களும் நீங்கி குடும்ப ஒற்றுமை வளரும் என்பது நம்பிக்கை.
வெள்ளி திருவாசியோடு வேயப்பட்ட இந்த பொன்னாலான வேங்கடேசர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஶ்ரீவியாசராய தீர்த்தரால் வணங்கப்பட்டவர். இவரே திருப்பதி வேங்கடவன் கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தவர். ஏழுமலையானின் மீது பக்தி கொண்ட இந்த பெரியவர் விமான வேங்கடேசரை வணங்கி முக்தியடைந்தார். இவர் விமான வேங்கடேசரை தரிசித்த மண்டபம் இன்றும் ஸ்ரீ வியாசராயர் மண்டபம் எனப்படுகிறது. 1958-ம் ஆண்டு ஆனந்த விமானம் புனரமைக்கப்பட்டபோது, விமான வேங்கடேசரும் இன்னும் கூடுதல் ஒளியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.
இந்த விமான வேங்கடவனை எளிதாக பக்தர்கள் தரிசிக்கும் வகையில் விக்ரகத்தைச் சுற்றி வெள்ளிப் பிரபாவளி அமைக்கப்பட்டுள்ளது. அழகான சிறிய திருவுருவத்தில் காட்சி தரும் இவருக்கு கருவறையில் உள்ளது போன்றே சாளக்ராம மாலையும் காட்டப்பட்டுள்ளது.
தீர்த்தங்கள்
இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயக்ஷமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து கூடுகின்றன. அவற்றில் சில முக்கியமான தீர்த்தங்கள்.
குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம் : மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. அன்று இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்கள் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.
தும்புரு தீர்த்தம் :எம்பெருமானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் தவமியற்றிய இடத்திற்கு அருகில் இருப்பதால் இது தும்புரு தீர்த்தம் எனப்படுகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
இராம கிருஷ்ண தீர்த்தம் : தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இந்த உலக சுகம், மற்றும் வைகுண்ட பிராப்தி இரண்டும் கிடைக்கும்.
ஆகாச கங்கை : தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இந்த தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு நித்ய கைங்கர்ய தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருவாராம். கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்து அந்த தீர்த்தத்தை கோவிலினுள்ளேயே காண்பித்ததாகவும் சொல்வார்கள். சகல சித்திகளையும் அளிக்கும் இந்த தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நீராடுவது மிக சிறப்பு.
பாண்டு தீர்த்தம் : வைகாசி மாதம் சுக்ல பட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
பாபவிநாசன தீர்த்தம்: மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக் கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்குஅறிய ஞானம் பெறுகின்றனர். சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
ஸ்வாமி புஷ்கரிணி :
திருமலையில் உள்ள "ஸ்வாமி புஷ்கரணி " தீர்த்தம் என்பது இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும், பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை தீர்த்தங்கள் சங்கமிக்கும் புனித தீர்த்தமாக இந்த ஸ்வாமி புஷ்கரணி கருதப்படுகிறது.
கங்கை போன்ற புண்ணிய நதிகளுக்கு இணையாக பாவங்கள் போக்க வல்ல புண்ணிய தீர்த்தம் இது. திருமலை கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்வுகள் மற்றும் விஷேஷ திருவிழா சமயங்களில் இந்த புண்ணிய தீர்த்தத்தில் உற்சவ மூர்த்தியான சுவாமி மலையப்பன் ஸ்ரீ தேவி , பூதேவி சமேதராக எழுந்தருளி சக்ர ஸ்னாநம் கண்டு பக்தர்களுக்கு அருள்வது சிறப்பம்சமாகும்.
திருமலை க்ஷேத்திரம் என்றாலே பாவங்களை பொசுக்க கூடிய வல்லமை பெற்ற தலம் என்பது பொருள், அவ்வாறு பக்தர்கள் திருவேங்கடவனின் தரிசிக்க இத்தலத்தில் முன்பு இந்த ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி , குளக்கரை அருகே அருளும் வராக மூர்த்தியை தரிசித்த பிறகே திருவேங்கடவனின் தரிசனம் நமக்கு , நம் பிராத்தனைகள் எளிதில் நிறைவேறும் என்கிற சம்பிரதாயம் இன்றளவும் திருமலை தரிசிக்க வரும் பக்தர்களால் கடைபிடிக்கக்பட்டு வரும் வழக்கம்.
திருவிழா சமயங்களில் இந்த புஷ்கரணியில் நடைபெறும் சக்கரஸ்நானத்தின்போது ,சுவாமி புஷ்கரணியில் நீராடும் பக்தர்களுக்கு,எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், வேங்கடவனின் அருள் கிட்டும் என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை.
சுவாமி புஷ்கரணி என்பது, மிகவும் பவித்ரமானது. பார்க்கும் பொழுதே, அல்லது அந்த தீர்த்தத்தை புரோட்சனை செய்து கொள்ளும் போதே பாவங்களை அழிக்கக்கூடிய புண்ணிய தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
கபில தீர்த்தம்: இது கீழ் திருப்பதியில் மலை அடிவாரத்தில் அலிப்பிரிக்கு அருகில் உள்ளது. கபில முனிவர் பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதுவே ஆழ்வார் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் திருமொழி
4. ஊன் ஏறு செல்வத்து
திருவேங்கடத்தில் பிறந்திட விரும்புதல்
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment