🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 6 ஆம் பிற்பகல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு 🌷🍃
திருமலை நம்பியும் திருவேங்கடவனும்
பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.
ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமாயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். இதுவே சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.
திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார். இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார். தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.
கோவிந்தப் பெருமாளை (எம்பார்) சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்றபொது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி, காளஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார். கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.
உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்) அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காளஹஸ்திக்குச் சென்றார்.
கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள்.
கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார்.
நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார். சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை (இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது) பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார்.
கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார்.
திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார்.
அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார். கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது.
அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார்.
அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீண்டும் அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏரி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார்.
நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார். கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச்செயலைக் கற்றுக்கொடுத்தார்.
எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார்.
நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால், எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க, அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார். எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.
ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார். ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார். காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டார்.
அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக்கொண்டார்.
எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள். ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார். ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர் எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். இப்படி அவருடைய அர்ப்பணிப்பு இருந்தது. பின்னர் கோவிந்தப் பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.
திருமலை நம்பி, திருவேங்கடவனுக்கு பாபவிநாச தீர்த்தத்தில் இருந்து தினசரி திருமஞ்சன மற்றும் திருவாராதன தீர்த்த கைங்கர்யம் செய்து வரும் சமயம், திருவேங்கடவன் அவரின் கைங்கர்யத்தில் திருப்தி கொண்டவராய், ஒரு நாள் அவர் வரும் வழியில் வேடன் உருவில் வந்து, திருமலை நம்பிகளை பார்த்து தனக்கு தாகமாக உள்ளது என்றும் தீர்த்தம் தரவும் கேட்டான்.
திருமலை நம்பிகள் இது திருவேங்கடவனுக்கு, மனிதர்களுக்கு அல்ல என்று கூறி தரமறுத்து திருமலைக்கு செல்ல ஆரம்பித்தார்.
வேடன் அந்த தீர்த்த பாத்திரத்தை சேதம் செய்து தண்ணீர் கீழே விழச்செய்து, அதை பருகியபடி இருந்தான். தீர்த்த பாத்திரத்தில் பளு குறைந்ததை உணர்ந்த திருமலைநம்பி திரும்பி பார்த்து நடந்ததை அறிந்து மீண்டும் தீர்த்தம் எடுத்து வர திரும்பியபோது, வேடன் ஆகாய கங்கை இடத்தை காண்பித்து அங்கு ஒரு அம்பு விட்டு, ஒரு ஊற்று பெருக செய்து அந்த தீர்த்தத்தை எடுத்து கொள்ள சொல்லி தன்னையும் யார் என்று காட்சி அளித்து மறைந்தார்.
திருமலை நம்பிகள் தனக்கு காட்சி கொடுத்த எம்பெருமானின் கருணையை மகிழ்ந்து அதே ஆகாய கங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்ய அன்று முதல் தொடங்கினார்.
சில நாட்களில் திருமலைநம்பிகள் பரமபதம் அடைந்தார். இதனை கேள்வியுற்ற இராமானுஜர் திருமலை நம்பிக்கு திருவேங்கடவன் காட்சி அளித்து ஆகாய கங்கை தீர்த்தத்தை கொண்டு முதலில் திருமஞ்சன நாளை கொண்டாடும் வண்ணம், அது அத்யயன உற்சவநாட்களுக்கு இடையில் வருவதால், அந்த உத்சவம் முடிந்த அடுத்த நாளில் அந்த திருமஞ்சனத்தை நடத்த உத்தரவு இட்டார். இந்த நிகழ்விற்கு தண்ணீர் அமுது வழி திருத்துதல் என்று பெயர்.
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
ஒசித்த * கோவலன் எம் பிரான் *
சங்கு தங்கு தடங் கடல் * துயில் கொண்ட
தாமரைக் கண்ணினன் **
பொங்கு புள்ளினை வாய் பிளந்த *
புராணர் தம் இடம் * பொங்கு நீர்ச்
செங் கயல் திளைக்கும் சுனைத் *
திருவேங்கடம் அடை நெஞ்சமே 1
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓
No comments:
Post a Comment