30 September 2017

நாமக்கல் .. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் ..


அன்பின் வணக்கங்கள்...


போன வாரம்  நாமக்கல் ..ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலை தரிசித்தோம்.... ....



இன்று


நாமக்கல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.. திருக்கோவில்


இத்திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது...








ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம்.


பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார்.


 அவனுடன் உக்கிரமாகப் போரிட்டு, ஒரு கொடூரனை கொடூரமாக வதம் செய்ததால், அந்த உக்கிரம் தணியாமல் கர்ஜித்தார்.


சாந்த ஸ்வரூபியான ஸ்ரீமந் நாராயண அவதாரம் என்றாலும், பகவானின் உக்கிர ஸ்வரூபத்தை எப்படித் தாங்குவது?    எனவே, அவருடைய சாந்தமான குணத்தை மீண்டும் அவருக்கு நினைவூட்ட, கருணையே வடிவான மகாலட்சுமியை வேண்டினர் தேவர்கள்.


ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்ட அன்னையோ உக்ர ரூபத்தில் இருந்த அவருக்கு அருகில் செல்லவே பயந்தாள்.


எனவே இறுதியில் பக்த பிரகலாதன் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்தான்.




இணையத்திலிருந்து





கோவிலின் முகப்பு







இதன் பின்னர் பெருமாளைப் பிரிந்து தவித்த அன்னை மகாலட்சுமி, ஸ்ரீநரசிம்மப் பெருமானின் அருளைப் பெற ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து தவம் செய்து வந்தாள்.


ராமாவதாரத்தின் போது, போரில் மயக்கமுற்று வீழ்ந்த ராம லட்சுமணர்களை மீட்க, ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை கொண்ட மூலிகை மலையைப் பெயர்த்து வந்தார். அந்தப் பணி செவ்வனே நிறைவேறிய பிறகு, மீண்டும் அந்த மலையை அதன் இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார். அப்படித் திரும்பும் வழியில் இமயமலையில் கண்டகி நதியில் ஒரு பெரிய சாளக்கிராமக் கல்லைப் பார்த்தார். சாளக்கிராமக் கல், பகவான் விஷ்ணுவின் வடிவம் என்பர்.


அப்படி ஒரு கல்லில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதைக் கண்ட அனுமன், அந்தப் பெருங்கல்லை வழிபாட்டுக்காகப் பெயர்த்தெடுத்து வான் வழியே பறந்து வந்தார். சற்று தொலைவு வந்த பின்னர், அவர் நித்ய அனுஷ்டானம் செய்வதற்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தார்.


அந்த நேரம், இந்தத் தலத்தின் அருகே உள்ள கமல தீர்த்தம் அவருக்கு தென்பட்டது.

 சாளக்கிராமத்தினை கீழே வைக்க முடியாது என்பதால், மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.


அப்போது, அந்த தீர்த்தக் கரையில் மகாலட்சுமித் தாயார், தவமியற்றி வருவதைக் கண்டார்.


அருகே சென்று தாயாரை வணங்கிய ஆஞ்சநேயர், தாயாரின் தவத்துக்கான காரணத்தைக் கேட்டார். ஸ்ரீ விஷ்ணுவின் நரசிம்ம வடிவை தரிசிக்க விரும்புவதாகவும், அதனால் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை நோக்கி தவம் இருப்பதாகவும் கூறினார்.


ஆஞ்சநேயர், அவரது கையில் ஸ்ரீநரசிம்மர் ஆவிர்பவித்திருந்த அந்த சாளக்கிராமத்தைக் கொடுத்தார்.


தான் நீராடிவிட்டு, திரும்ப வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.


ஆனால், அனுமன் திரும்ப வர காலதாமதம் ஆகிவிட்டது.


எனவே, மகாலட்சுமித் தாயாரும் தன் கையில் வைத்திருந்த அந்த சாளக்கிராமப் பெருங்கல்லைத் தரையில் வைத்துவிட்டார்.

சற்றே தாமதமாக வந்த ஆஞ்சநேயர், அந்த சாளக்கிராமத்தை எடுக்க முயன்றார்.


ஆனால் முடியவில்லை. அது பெரிய மலையாக வளர்ந்தது.

அம்மலையில் நரசிம்மர் தோன்றினார். தன்னை நோக்கி தவமியற்றிய தாயாருக்கு தரிசனமும் அளித்து அருள் புரிந்தார்.


 இதன் பின்னர், அவர் அருள் பெற்ற அனுமனும் இங்கேயே தங்கினார்.





ஸ்ரீநாமகிரி தாயார்


ஸ்ரீநரசிம்மர் கோயிலில் ஸ்ரீநாமகிரி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீநாமகிரி தாயார் ஸ்ரீநரசிம்மமூர்த்தியை எண்ணி தவமியற்றி அருள்பெற்றதால் இக்குளம் கமலாலயம் எனும் சிறப்பு பெற்றது.


இந்தத் தலத்தில், நாமகிரி தாயாருக்கே முதலிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் தாமரையில் ஸ்ரீநாமகிரி தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள்.


ஸ்ரீநாமகிரி என்ற தாயாரின் பெயராலேயே இந்தத் தலம் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது.






ஸ்ரீநரசிம்மர் கோயில் கொண்டுள்ள இந்தத் தலம், மலையின் மேற்புற குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது.

இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீது வைத்தும் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார்.

அருகில் சனகாதி முனிவர்கள்.,

சூர்ய சந்திரர்கள் கவரி வீச,

 வலப்புறம் ஈசனும்,

இடப்புறம் பிரம்மாவும்

பகவானின் உக்கிரம் தீரவேண்டி வழிபடுகிறார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இது மும்மூர்த்தி தலம் என அழைக்கப்படுகிறது.


 இரணியனை வதைத்த பின், ரத்தக் கறையுடனும் கூரிய நகங்களுடனும் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.


வழக்கமாக லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் சுவாமியின் மடியில் லக்ஷ்மியை அமர்ந்த கோலத்தில் காணலாம் .ஆனால் இங்கு லக்ஷ்மி சுவாமியின் மார்பில் உள்ளார்.


குடவரை கோவில் என்பதால் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது கிடையாது. உற்சவருக்கு  தான் இங்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது ..






இந்த மலையைச் சுற்றிலும் கோட்டை ஒன்று உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயிலும் கோட்டையும் பாதுகாக்கப்படுகிறது.



மலையைச் சுற்றி நரசிம்ம புஷ்கரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், க்ஷீராப்தி தீர்த்தம், கமலாலயம் சக்ரதீர்த்தம், தேவ தீர்த்தம், சத்ய புஷ்கரணீ முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.










மிக த்தருப்பமான  நரசிம்மரின் அமைப்பு....

கோவிலும் மிக அமைதியாக உள்ளது....வெளியே சாலையில் பெரும் சத்தங்கள் கேட்டாலும்...கோவிலின் உள்ளே மன நிம்மதி தரும் அமைதியும்...காற்றும் ...என ஒரு அற்புதமான இடம்....




அன்புடன்

அனுபிரேம்



4 comments:

  1. நாமக்கல் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் இரண்டு முறை தரிசித்திருக்கின்றேன்.. அபிமான திருக்கோயில்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள் சகோதரி...

    கீதா: பல முறை தரிசித்திருக்கிறேன். நரசிம்ம கோயிலில் இருந்து சற்று தூரத்தில் நடந்து செல்லும் தூரம் தான் மலை மேல் ரங்கநாதர் கோயில் இருக்கிறது அதுவும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் அனு.

    ReplyDelete
  3. அழகிய படங்களின் தரிசனம் கண்டேன்.

    ReplyDelete
  4. சுற்றி வந்து பார்த்த திருப்தி.

    ReplyDelete