29 August 2025

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

  ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்றம்  

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.




முதல்நாளில்  கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவப்பரம்பொருள், இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தார். சைவ நாரை சிவனை வணங்கி சிவகணமாக மாறியது. நாரையின் வேண்டுகோளின் படி இன்றைக்கும் பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ, தவளைகளோ வசிப்பதில்லை.

நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.


திருவிளையாடற் சுருக்கம் :

மதுரையம்பதியிலே ஒரு வனம், அந்த வனத்தில் குளிர் தருவும், தரு தரும் நிழலும், நிழலருகில் இருக்கும் செண்பக மலர் வீசும் அச்சோ என வழங்கப்பெறும் குளிரோடையும், காணும் இனத்தையெல்லாம் ஈர்த்தது. 

ரிஷி முனிகள் அக்குளக்கரையில் குடிலமைத்து தவம் செய்தனர், புழு பூச்சிகள் அருகில் இருந்த மரங்களை நாடியும், மரங்கள் குளத்திலிருக்கும் நீர்நிலைகளை நாடியும், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவையினங்கள் என பல இனங்கள் தம்மோடு கூடி அவ்வனத்தில் வாழ்ந்து வந்தன.

முனிவர்கள் தவத்தாலும் கொல்லாமை – புலால் உண்ணாமை என்பது ஏனோ ஓர் இளநாரைக்கும் தொற்றியது. 

தவசீலர்கள் நீராடும் சமயம் அவர் உடல் தீண்டும் சுகம் பெற்ற கயலினங்கள் எத்தவம் செய்தனவோ அவை உண்டு தாம் எப்பிறவி எடுக்க வேண்டுமோ என நாரை அஞ்சத் தொடங்கிற்று.

தன் எண்ணத்தின் பால் வீறும், பற்றும், திடமும் கொண்ட நாரையும் வாய்பெய்து கவ்வும் தன்மையை விடுத்து நீரும், புல்லும் உட்கொண்டு வாழ்ந்தது. 

இதுகாரும் தான் செய்த நோன்பினால் கருங்குருவிக்கு உபதேசித்த இறைவன் சொக்கநாதர் பெருமை அங்கிருந்த முனிவர் வாயிலாய் கேட்கக் கிட்டியது, இறைவன் செய்து வந்த லீலைகளை அவ்வேதியர் சொல்லக் கேட்டது, நாரை.

தாமும் தம் குலமும் தழைத்தோங்க, அந்நாதனைப் பணிய முற்பட்டு, கடம்பவன க்ஷேத்திரத்தை அடைந்தது சிவந்த கால்களையும், பால் நிறம் கொண்ட அந்நாரை. 

அறியாமையை போக்கும் புண்ணிய பூமியாம், திருவாலவாயென்னும் இத்தலம் அகன்று நின்ற மாடங்கள் நிறைந்த ஒப்பற்ற பதி. அஞ்ஞானம் நீங்கி வந்திறங்கிய நாரையானது வேழம் தாங்கிய விமானத்தைக் கண்டும், பொற்றாமரைக் கொண்ட குளத்தையும் கண்டு சிலிர்த்தது.

மூவைந்து தினங்கள் பொன் தாமரை தடாகத்தில் நிராடி, சொக்கரையும், உமையாளையும் வலம் வந்து கொண்டிருந்த சமயம், தன் பிறவிப்பிணியினால் அக்குளத்து கயல்களின் பால் மனம் ஈர்த்து தன் பசியார நினைத்தது.

அச்சமயமே, ஈசன் கொண்ட திருவுள்ளத்தினால், தாம் எண்ணிய எண்ணத்தை வருந்தி ஈசனிடம் சிரம் தாழ்த்தி அவரடி தொழுதது. அவரடியில் இரு துணைமலரென்னும் தாமரையை வைத்து வணங்கியது. அதில் மகிழ்ந்த ஈசனாரும் அதன் முன் அது கேட்ட உருவில் தோண்றி “வேண்டும் வரம் இயம்புக” என்றார்.

இறைவனைத் தனெதிரில் கண்ட நாரையும், “ஈசனைத் தொழுது, சிவலோகத்தில் மேவி நான் உய்ய வேண்டும், மேலும், வள்ளலே இத்தாமரைக் குளம், மிகவும் புண்ணியக் குளம், இக்குளத்து கயல்களை யாதொரு எம்மரபினரும், பிற உயிரிகளும் உண்ண நேரிடின் சொல்லொன்னா பாவம் வந்து சேரும் ஆதலினால் இக்குளத்தில் நீர்வாழ்வாதார உயிரிகளற்று இருக்க கடவது,” என்று வேண்டியது.

ஞாலத்து வெள்ளியை (நிலவை) தாங்கியவரும், ஆலவாய் வெள்ளியம்பல நாயகனுமான ஐயனும் “எஞ்ஞான்றும், இத்தடாகத்தில் மீன்கள் இல்லையாகுமாறு” எனவும், அந்நாரைக்கு தன்கதி தரவும் அருளினார்.

ஐந்து துந்துபி வாத்தியங்கள் முழங்க, தேவ விமானத்தின் மீதேறி தாம் ஈசனிடத்தில் வேண்டிய சிவகதி அடைந்தது நாரை.

தனக்கு நற்கதி கேட்ட குருவிக்கு மந்திர உபதேசம் செய்து முக்திக்கு வழிகாட்டிய நாதன், தன் இனத்திற்கும், பிற இனத்திற்கும் நற்பேறு அடையும்படி செயலாற்றிய நாரைக்குச் சிவலோக பதவியளித்தார்.

இன்றும் பொற்றாமைரை குளத்தில் மலர் இருக்கும், நீர்வாழ் தாவரங்கள் இருக்கும், ஆனால் மீனோ, புழுவோ இருக்கா. ஆகவே மீனிற்குப் பொரியிடும் வழக்கமும் இக்குளத்தில் இல்லை. இதுவும் ஆலவாயப்பனின் திருவிளையாடல்.










 நலம் தரும் திருப்பதிகம்

 01 திருஆலவாய்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான், ஸ்ரீ சோம சுந்தரேஸ்வரர் 

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி, ஸ்ரீ மீனாட்சிதேவி 

திருமுறை : மூன்றாம் திருமுறை 51 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்


பாடல் எண் : 03

தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்

சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை

எக்கராம் அமணர் கொளுவும் சுடர்

பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே.


சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக. இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.


மீனாட்சி அம்மன்  சுந்தரேஸ்வரர்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓


2 comments:

  1. இரண்டாம் நாள் நிகழ்வு குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete