*முதலாழ்வார்கள் திருநக்ஷத்திரம்!*
30.10.25|ஸ்ரவணம்
31.10.25|அவிட்டம்
01.11.25|சதயம்
பெருமாளின் திவ்யாயுதங்களின் அம்சங்களாக, அயோனிஜர்களாக (*உலகிற்கு நேரிடையாக அவதரித்தவர்கள்*), அடுத்தடுத்த நக்ஷத்திரத்தில் தோன்றிய ஆழ்வார்கள்.
ஐப்பசி, ஸ்ரவண நக்ஷத்திரத்தில், பெருமாளின் பாஞ்சசன்யம் (சங்கு) அம்சமாக காஞ்சிபுரம், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலுக்கு அருகிலுள்ள பொய்கையில், தாமரை மலர் ஒன்றில் தோன்றினார் *பொய்கையாழ்வார்!*
ஐப்பசி, அவிட்டம் நக்ஷத்திரத்தில், கடல்மல்லையில் (மாமல்லபுரம்) மாதவி மலரொன்றில், பெருமாளின் கௌமேதகீ என்ற (கதையின்) அம்சமாக தோன்றியவர் *பூதத்தாழ்வார்!*
ஐப்பசி, சதயம் நக்ஷத்திரத்தில், மயிலை கேசவப்பெருமாள் சந்நிதி கிணற்றில், செவ்வல்லி மலர் ஒன்றில் பெருமாளின் நந்தகம் என்னும் (வாளின்) அம்சமாக தோன்றினார் *பேயாழ்வார்!*
மற்ற ஆழ்வார்களுக்கு முன் தோன்றி வாழ்ந்து, அவர்களின் நல்நெறிக்கே வித்திட்டதால், இம்மூவரும் *முதலாழ்வார்கள்* என்று போற்றுவர்!
இவர்கள் மூவரும் சமகாலத்தவர்களாக இருந்த போதிலும், தமக்குள் அறிமுகம் இல்லாமல் இருந்தனர். திருமால் நெறிபரப்பிய இம்மூவரையும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்க திருவுள்ளம் கொண்டார். திருக்கோவலூருக்கு செல்லவேண்டும் என்ற அவாவினை மூவருக்கும் தோற்றுவித்தார் எம்பெருமான்!
முதலில் சென்ற பொய்கையாழ்வார், திருக்கோவலூர் எம்பெருமானை ஸேவித்துவிட்டு, அங்கு மிருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்தில் சிறிய இடைக்கழியில் படுத்துக் கொண்டிருந்தார்!
சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வாரை வரவேற்று, இங்கு ஒருவர் உறங்கலாம்; இருவர் இருக்கலாம் என்றவாறே இருவரும் அமர்ந்திருந்தனர்!
இன்னும் சற்று நேரத்தில் பேயாழ்வாரும் அங்கே வர, இருவரும் அவரை வரவேற்று, இங்கு இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் என்று மூவரும் நின்றவாறே பகவத் விஷயங்களை அளவளாவிக் கொண்டிருந்தனர்!
அப்போது திருக்கோவலூர் திருவிக்ரப் பெருமான் பெருமழையையும், காற்றையும் ஏற்படுத்தி ஆழ்வார்கள் அறியாவண்ணம் தாமும் இடைக்கழியில் புகுந்து மூவருக்கும் நெருக்கத்தை உண்டாகச் செய்தார்!
எதிர்பாராத நெருக்கம் ஏன் என்பதை உணர்ந்த ஆழ்வார்கள் மூவரும், எம்பெருமானின் பெருமையைப் பாடத் தொடங்கினர். அப்போது தோன்றிய ஒளியில் எம்பெருமான் திருக்கோலம் தென்பட்டது!
இவர்கள் மூவரும் தங்கள் ஞானத்தால் விளக்கேற்றினார்கள்!..
பொய்கையார்
*பூமியை தகளியாகவும், கடல்நீரை நெய்யாகவும், சூரியனை விளக்காகவும் கொண்டு ஒளியை ஏற்றினார்!*
பூதத்தாழ்வார்
*அன்பை தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், சிந்தையென்ற சூரியனை விளக்காகவும் கொண்டு ஒளியை ஏற்றினார்!*
பேயாழ்வார்
*"திருக்கண்டேன்" என்று பிராட்டியுனுடைய பரத்வத்தை நிலைநாட்டினார்!*
இவர்கள் அந்தாதி முறையில் தலா நூறு பாசுரங்களை அருளினர்! இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
*முதல் திருவந்தாதி*
*இரண்டாம் திருவந்தாதி*
*மூன்றாம் திருவந்தாதி*
என்று போற்றப்படுகிறது!!
பொய்கையார்
வையம் தகளியா* வார்கடலே நெய்யாக,*
வெய்ய கதிரோன் விளக்காக,* - செய்ய-
சுடர் ஆழியான் அடிக்கே* சூட்டினென் சொல் மாலை,*
இடர் ஆழி நீங்குகவே என்று (2)
என பாடினார், அது முதல் திருவந்தாதியின் முதலடியானது.
இப்பாசுரத்தில் ஆழ்வார், “இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு, அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன். இந்த இருள் நீங்கட்டும்!” என்கிறார்.
அவரைத் தொடர்ந்து பூதத்தாழ்வார்,
அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*
இன்பு உருகு சிந்தை இடு திரியா,* நன்பு உருகி*
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ் புரிந்த நான். (2)
என பாடினார், அது இரண்டாம் திருவந்தாதியின் முதலடியானது.
இப்பாசுரத்தில் ஆழ்வார், “தன் அன்பை அகழியாகக் கொண்டு, இறைவனையும் அவன் குணங்களையும் அறியும் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்” என்கிறார்.
இவர்கள் ஏற்றிய விளக்கின் ஒளியில், இருள் அகல, பரமாத்மாவை கண்ட பேயாழ்வார்:
திருக் கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்,* - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன்* புரி சங்கம் கைக் கண்டேன்,*
என் ஆழி வண்ணன்பால் இன்று (2)
என்ற பாசுரத்தின் வழியாக, “பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமாலின் திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்” என்கிறார்.
பின்னர் "திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும், அருக்கன் அணி நிறமும் கண்டேன்" என ஆழ்வார் பாடியது, மூன்றாம் திருவந்தாதியின் முதலடியானது.
முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின் ஊடே திருமாலை கண்டதில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும் வண்ணம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரங்களை பாடினார்கள்.
![]() |
| திருவஹீந்திரபுரம் தேவநாதஸ்வாமி சன்னதியில் |
முதல் திருவந்தாதி கடைசி பாசுரம் (பொய்கையாழ்வார்)
ஓர் அடியும், சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம், என் நெஞ்சே! ஓர் அடியில்
தாயவனை கேசவனை, தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை 100
ஓ நெஞ்சே ! ஒரு திருவடியால் இந்த உலகம் அளந்தவனைக், கேசி என்ற அரக்கனை அழித்தவனும், குளிர்ந்த திருத்துளசி மாலையைச் சூடியவனை வியக்கத்தக்கச் செயல்களைச் செய்பவனான பெருமாளை உள்ளத்தில் நிறுத்திக்கொள் அவனைப் பற்றினால் நீ உலகளந்ததும் சகடத்தை முறித்ததும் ஆன அவனுடைய மலர் போன்ற இரு திருவடிகளையும் நேரே காணலாம்.
இரண்டாம் திருவந்தாதி கடைசி பாசுரம் (பூதத்தாழ்வார்)
மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு
மேலா! வியன் துழாய் கண்ணியனே! மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என்தன்
அளவு அன்றால், யானுடைய அன்பு 100
அடியார்களிடம் மோகம் கொண்டவனே ! அளவிட முடியாத பெருமாளே ! நித்திய சூரிகளின் தலைவனே துளசிமாலை அணிந்தவனே கண்ணபெருமானே முன்பு விளாங்காயைக் கன்றால் வீழ்த்தியவனே உன்னிடம் அடியேன் வைத்துள்ள பக்தி பெருக்கான அன்பு என்னளவில் அடங்காது.
மூன்றாம் திருவந்தாதி கடைசி பாசுரம் (பேயாழ்வார்)
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும், வண் தாமரை நெடும் கண்
தேன் அமரும் பூ மேல் திரு 100
கையில் சக்கரம் ஏந்தியவனும், துளசி மாலையை மார்பில் அணிந்தவனும் ஆன எம்பெருமானைப் பிரியாமல் திருமகள் சேர்ந்தே இருக்கிறாள். மேகங்கள் நிறைந்த வானில் மின்னல் போல விளங்கும் அவள், அழகிய தாமரைப் பூப் போன்ற கண்களுடன், தேன் நிறைந்த தாமரையில் உறைபவள். இந்தப் பெரிய பிராட்டியாரே நமக்கு எப்பொழுதும் தஞ்சம் ஆவாள்.
![]() |
| திருக்கோவலூர் ஸ்ரீ த்ரிவிக்ரமஸ்வாமி சன்னதியில் |
![]() |
| திருவரங்கத்தில் |
அன்புடன்
அனுபிரேம் 💚💚💚💚













No comments:
Post a Comment