12 November 2025

15. திருமலை நிகழ்ச்சிகள்


  🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 7 ஆம் திருநாள்  இரவு சந்திர பிரபை வாகனத்தில்  சுவாமி  புறப்பாடு 🌷🍃










திருமலை நிகழ்ச்சிகள்

சுப்ரபாத சேவை : 

தினசரி காலையில் 3 மணி முதல் 3.30 வரை சுப்ரபாத சேவை நடக்கும். இதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், ஒரு வீணை வாசிப்பவர், ஒரு தீபம் ஏந்துபவர் என்று ஆறு பேர் உள்ளே செல்வார்கள். 

துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்து ஊழியரிடம் இருந்து சாவி வாங்கி, கதவை திறப்பார்கள். ஸ்வாமியை வணங்கி விட்டு, கதவை சாத்திவிட்டு, உள்ளே செல்வார்கள்; கெஸல்யா சுப்ரஜா ராமா என்று ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் இன்னொரு குழு வாசிக்க ஆரம்பிபார்கள். இது சுப்ரபாத சேவா என்று பெயர்.

 விளக்குகள் ஏற்றப்பட, வீணை வாசிக்க, சயன திருக்கோலத்தில் இருக்கும் போக ஸ்ரீனிவாச மூர்த்தியை, மூல மூர்த்திக்கு அருகில் நின்ற திருக்கோலத்தில் ஏளச் செய்வார்கள். இந்த போக ஸ்ரீனிவாசமூர்த்தியை இரவில் சயன திருக்கோலத்தில் ஒரு தொட்டிலில் ஏளச் செய்து இருப்பார்கள். சுப்ரபாதம் முடிந்தவுடன் கதவு திறக்கப்பட்டு, எம்பெருமானுக்கு பாலும் வெண்ணையும் அமுது செய்து தீபாராதனை நடக்கும்.

தினமும் ஆகாய கங்கையில் இருந்து மூன்று வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள்.

 அவைகள், ஒவ்வொன்றும், காலை, மாலை, இரவு பூஜைகளுக்கு எடுத்து வைக்கப்படும். மூல மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வதற்கு ஒப்பாக, போக மூர்த்திக்கு நடத்தப்படும். முழு மூர்த்திக்கும் நடக்காமல், திருவடிகளுக்கு மட்டுமே தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. எம்பெருமானுக்கு வாசனை தைலம் சாத்திய பின் மஞ்சள் நீர், பால், தேன், சந்தனம் , மீண்டும் மஞ்சள் நீர் என்று திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து, திருமண் இட்டு, கண்ணாடி காட்டி, குடை பிடித்து, சாமரசம் வீசி சுப்ரபாத சேவையை முடிப்பார்கள்.

3.30 முதல் 3.45 வரை சன்னதி சுத்தம் செய்யப்படும்.

 திரைபோட்டு, பழைய மாலைகளை களைந்து திருக்கோவிலுக்கு முன்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்க்கப்பட்டு, புது மாலைகள் அணிவிக்கப்படும். கோவிலுக்குகள் இருக்கும் யமுனாத்துறை என்ற இடத்தில கட்டப்பட்ட, புது மாலைகளை ஜீயர் ஸ்வாமிகள் பொறுப்பில், ஏகாங்கி என்பவரால் கொண்டு வரப்படும். ஜீயருடன், ஏகாங்கி, ஒரு வாத்தியக்காரர், திருப்பள்ளியெழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷஸுக்தம் பாட இருவர் என்பவர்கள் செல்வர்.

தோமாலை சேவை : 

3.45 மணிக்கு இந்த சேவை ஆரம்பம் ஆகும். இது தோள் மாலை சேவை என்று முதலில் அழைக்கப்பது, பின்னாளில் மருவி தோமால சேவை என்று ஆனது. சுமார் 25 நிமிடம் ஆகும் இந்த சேவையின் போது, முதலில், எம்பெருமானின் திருமார்பில் எழுந்தருளி இருக்கும், மஹாலக்ஷ்மிக்கு, மாலை சார்த்தி, பிறகு எம்பெருமானுக்கு சாத்துவார்கள். திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஆகியவை சேவிக்கப்படும். இது சுமார் 4.30க்கு முடிவடையும்.

கொலுவு நிகழ்ச்சி : 

இதற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது. மூலவர் சன்னதியில் இருந்து கொலுவு ஸ்ரீனிவாச மூர்த்தியை வெள்ளிப் பல்லக்கில் ஏளப் பண்ணி, ஒரு தனி இடத்தில, எள்ளுப் பொடி வெல்லம் வெண்ணெய் அமுது செய்து, ஆராதனை செய்வார்கள். அன்றைய பஞ்சாங்கம் படித்து (நாள், கிழமை, திதி போன்றவை) அதற்கு முந்தய நாள் உண்டியல் வரவு இவற்றை சொல்லி, இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். மூலவரே வந்து கணக்கு வழக்குகளை கேட்டு இந்த நிகழ்வை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

இது முடிந்தவுடன் இரண்டு மணி அடித்து மூலவருக்கு தயிர் சாதம், முதல் நைவைத்தியம் செய்யப்படும்.

 இதில் மூலவருடன், விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யஸூரிகளுக்கும் நைவேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு பணியாரங்கள் இரண்டாவது நைவைத்யம் செய்யப்படும். இதன் போது வராக ஸ்வாமியின் 108 திருநாமங்கள் வாசிக்கப்படும். இதன் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஸஹஸ்ரநாம அர்ச்சனை : 

அடுத்து 4:45 முதல், 5:30 வரை திருவேங்கடத்தானின் 1008 திருநாமங்களை சொல்லி இந்த சேவை நடக்கும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை முடிந்தவுடன், அர்ச்சனாந்திர தரிசனம் நடக்கும்.

மற்றவை : மதியம் 12.00 மணி அளவில் தினமும் மலையப்ப ஸ்வாமிக்கும் ஸ்ரீதேவி தாயார், பூ தேவி தாயார் ஆகியவர்களுக்கு திவ்ய திருமண நிகழ்ச்சி நடைபெறும். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வைபவம் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மாலை நான்கு மணிக்கு டோலஸ்தவம் எனப்படும் வைபவம் நடைபெறும், இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூ தேவி ஆகியோர் ஊஞ்சல் மண்டபத்தில், ஊஞ்சலில் ஆடும் போது, வேத பாராயணம், மற்றும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்கும். 5.30 மணி அளவில் இது முடிவடையும்.

மாலை 5:30 மணிக்கு ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில், சஹஸ்ர தீப அலங்காரம் நடைபெறும். 

வியாழக் கிழமைகளில், முக்கிய ஆபரணங்கள் இன்றி, வேட்டி அங்கவஸ்திரத்துடன் எம்பெருமான் காட்சி அளிப்பார். வழக்கமாக அணியும் திருமண் இல்லாமல், மெல்லிய திருமண் இடப்படும்.

இரவு 1.30 அளவில் திருக்கோவில் நடை சாத்தப்படும். 

அதற்காக எம்பெருமானுக்கு சயன தரிசனம் அல்லது ஏகாந்த தரிசனம் நடத்தப்படும். மூல மூர்த்தி பக்கத்தில் எழுந்தருளி இருக்கும் போக ஸ்ரீனிவாசமூர்த்தியை மாலைகளை களைந்துவிட்டு, வெல்வெட் மெத்தை உள்ள வெள்ளி கட்டிலில் ஏளச் செய்வார்கள்.

 அதற்கு முன், காய்ச்சிய பால், திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து விளக்கு திரியை சிறியதாக வைப்பார்கள்; அன்னமாச்சார்யா பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் அவர் கீர்த்தனைகளை எம்பெருமானுக்கு பாடுவார்கள். எம்பெருமானுக்கு திரை சேர்த்து அன்றைய நிகழ்ச்சிகளை முடித்து, மறுநாள் காலையில் சுப்ரபாத சேவையுடன் தான் துவங்கும்.

வாராந்திர சிறப்பு பூஜைகள் : 

திங்கள் அன்று 14 கலச விஷேச பூஜையும் (அர்ச்சித சேவா) 

செவ்வாய் கிழமைகளில் பாத பத்ம பூஜையும் (108 தங்க தாமரைகளை 108 நாமங்களை உச்சரித்து எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கும் பூஜை),

 புதன் கிழமைகளில் மூலவருடன் பட்டு நூலால் இணைத்த போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலச அபிஷேகமும்

வியாழ கிழமைகளில் திருப்பாவாடை சேவை என்ற எம்பெருமானுக்கு முன் பெரிய அளவில் சமைத்த உணவு பரிமாறப்பட்டு நைவேத்தியம் செய்யப்படும் பூஜையும், (இந்த சமயத்தில் எம்பெருமானுக்கு மெல்லிய திருமண் சாத்தி இருப்பதால் எம்பெருமானின் திருக்கண்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்), இதன் பிறகு எம்பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்படும், இது பூலாங்கி சேவை எனப்படும் , வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.






பெரிய திருமொழி - முதற் பத்து 

1-8 கொங்கு அலர்ந்த மலர் 

திருவேங்கடம் - 1

1021

பார்த்தற்கு ஆய், அன்று, பாரதம் 

கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர்

கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில்

 குரவை பிணைந்த எம் கோவலன்

ஏத்துவார்-தம் மனத்து உள்ளான்,

 இடவெந்தை மேவிய எம் பிரான்

தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் 

திரு வேங்கடம் அடை நெஞ்சமே (4)


ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment