திருமலை நடைவழிகள்
திருப்பதி ஏழுமலையான், அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி ஆகிய 7 மலைகள் மீது குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என ஏற்கனவே கண்டோம். திருவேங்கடமுடையானை திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய ஏழு மலைப் பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
முதலாவது அலிபிரி பாதை- ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் மைத்துனர் மட்டி குமார அனந்தராயுலு என்பவர்தான் அலிபிரி மலைவழிப் பாதையை ஏற்படுத்தியாக தெரிகிறது. 3,650 படிகளும், 8 கி.மீ. தொலைவும் கொண்டது இந்த மலைப்பாதை. திருமலைக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும், இந்த வழியே மலையை நடந்து சென்று தரிசிக்கும் பக்தர்களும் நிறைய உண்டு. மலைஅடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்.
இங்கிருந்து தான் முனிவர்களும், யோகிகளும், ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எம்பெருமானை சேவிக்க சென்று உள்ளார்கள் என்று நினைத்தபடி மலைப்படிகளை ஏறினால் சிரமம் தெரியாது.
இதற்கு அடுத்த பகுதி, பாத மண்டபம், அங்கே எம்பெருமானின் திருவடிகள் உள்ளன. அடுத்த பகுதி தலையேறு குண்டு பாறை, அங்கு ஆஞ்சநேயரை சேவிக்கலாம். மலை பாதையில் ஏறும் வழியில் தசாவதார மண்டபங்கள் உள்ளன. மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணா அவதாரங்களுக்கு பிறகு ஹயக்ரீவர் மண்டபம் உள்ளது. அதையடுத்து 12 ஆழ்வார்களின் மண்டபங்கள் உள்ளன. எல்லா மண்டபங்களையும் கடந்தவுடன் நாம் திருமலையை அடைந்து விடுவோம்.
திருமலைக்கு நாம் நடந்து செல்லும் போது, மூன்று கோபுரங்கள் உள்ளன;
ஒன்று அலிபிரியில் உள்ள முதல் கோபுரம்.இதற்கு ராயர் கோபுரம் என்று பெயர். இது சாளுவ நரசிம்மன் கி பி 1482ல் கட்டியது.
இரண்டாவது குருவ நம்பிக்கான ஒரு கோபுரம், இது சுமார் 2000 படிகள் கடந்தவுடன் உள்ளது, சிறிது சிதலடைந்து உள்ளது.
மூன்றாவது கோபுரம் காளி கோபுரம்.
காளி கோபுரத்தை தொடர்ந்து நரசிம்மர் சன்னதி உள்ளது. இதற்கு தபோவனம் என்று பெயர். இங்கு தவம் புரிந்த முனிவர்களுக்கு நரசிம்மன் காட்சி அளித்ததாக வரலாறு. யோகநரஸிம்ஹர் சுயம்புவாக நெடிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.
சேஷாத்திரி மலையை கடக்கும் போது, முழங்கால் முறிச்சான் என்ற பகுதி வருகிறது. இந்த புனித மலையில் பாதம் பதித்து நடந்தால், பாவம் வந்து சேரும் என்று ஸ்ரீ ராமானுஜர் முழங்காலாலேயே ஊர்ந்து சென்றதாக வரலாறு. இங்கு ராமானுஜருக்கு ஒரு சன்னதி உள்ளது.
செல்வன் என்ற ஒரு இடையன் முதலில் திருமலைக்கு திருப்படிகள் அமைத்தான் என்று திருமலை ஒழுகு கூறும்.
கந்தாடை இராமானுஜ அய்யங்கார் என்பவர் 15ம் நூற்றாண்டில் இந்த படிகளை சீர் செய்தார். அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதி வண் சடகோபதீந்தர மகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை மேலும் சீர் அமைத்தார்.
2. ஸ்ரீவாரி மெட்டு மலைப் பாதை. இவ்வழியாகத்தான் மகா விஷ்ணுவே திருமலைக்கு மலையேறிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி – திருமலை இடையே இருந்த முதல் வழித்தடம். அரசர் சாளுவ நரசிம்ம ராயுலு இந்த வழியில் பயணம் செய்து திருமலையை அடைந்தார். 2,100 படிகள் மட்டுமே உள்ள இப்பாதையில், ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் திருமலையை சென்றடையலாம்.
இது திருப்பதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உள்ள ஸ்ரீனிவாச மங்காபுரம் என்ற இடத்தில இருந்து தொடங்குகிறது. ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட பிறகு சுமார் ஆறுமாதங்கள் அவரை ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் தங்குமாறும், மேலும் திருமலை ஏற வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதை வழியாக ஸ்ரீனிவாச பெருமாள் திருமலைக்கு திருப்பதிக்கும் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.
3. அன்னமாச்சாரியார் பாதை. இது, கடப்பா மாவட்டம், தாள்ள பாக்கம் பகுதியில் இருந்து குக்கல தொட்டி வழியாக திருமலையில் உள்ள பார்வேட்டி மண்டபம் வரை அமைந்துள்ளது. இவ்வழியாகத்தான் அன்னமாச்சாரியார் திருமலையை அடைந்ததாக கூறப்படுகிறது.
4. தும்புரு தீர்த்தம் பாதை. திருமலையில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் இருந்து, குக்கல தொட்டி வழியாக கடப்பா மாவட்டம் சோமேஸ்வரர் கோயில் வரை உள்ளது. ஆனால் இந்த வழித்தடம் இருப்பது பலருக்கு தெரியாது.
5.தரிகொண்ட வெங்கமாம்பாள் பாதை. ஏழுமலையானின் தீவிர பக்தையான தரிகொண்ட வெங்கமாம்பாள் இந்தப் பாதை வழியாகதான் திருமலையை அடைந்துள்ளார். இப்பாதை திருப்பதியை அடுத்துள்ள பாகரா பேட்டை வனப் பகுதியிலிருந்து தலக்கோனா வழியாக மொகலிபெண்டா, யுத்தகள்ளா, தீர்த்தம் குண்டா வழியாக திருமலையில் உள்ள வேதபாட சாலையை வந்தடையும். மிகவும் அடர்ந்த வனப் பகுதி வழியே இப்பாதை செல்வதால் இந்த வழியில் இடர்கள் அதிகம்.
6. பாலகொண்டா பாதை. இது யுத்தகள்ளா தீர்த்தத்தில் இருந்து பால கொண்டாவரை நீண்டுள்ளது. கண்டி கோட்டை அரசர் ஏற்பாடு செய்த வழித்தடமாக இது கூறப்படுகிறது. ஆனால் இந்த பாதையை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.
7. தொண்டமான் பாதை என்பது ஏழாவது வழி. இது தொண்டமான் சக்கரவர்த்தி காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழித்தடமாக கூறப்படுகிறது. திருப்பதி அருகே உள்ள கரகம்பாடியில் இருந்து அவ்வாச்சாரி கோனா வழியாக திருமலையை சென்றடையலாம். பக்தர்கள் ஏறிச்செல்ல மிகவும் சிரமமான பாதை என்பதால் காலப்போக்கில் இந்தப் பாதையும் காணாமல் போனது.
1022
வண் கையான், அவுணர்க்கு நாயகன் *
வேள்வியில் சென்று, மாணியாய் *
மண் கையால் இரந்தான் * மராமரம்
ஏழும் எய்த வலத்தினான் **
எண் கையான், இமயத்து உள்ளான் *
இருஞ்சோலை மேவிய எம் பிரான் *
திண் கை மா துயர் தீர்த்தவன் *
திருவேங்கடம் அடை நெஞ்சமே 5
ஓம் நமோ வெங்கடேசாய !!
கோவிந்தா!! கோவிந்தா!!
தொடரும் ....
அனுபிரேம் 💓💓💓




No comments:
Post a Comment