ஸ்ரீ கள்ளழகரின் தைலக்காப்பு திருவிழா மற்றும் தொட்டி திருமஞ்சனம் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி அன்று நடைபெறும்.
நண்பகல் கள்ளழகர் உற்சவர், அழகர் மலை மீது உள்ள நூபுர கங்கை என்றும் சிலம்பாறு என்றும் அழைக்கப்படும் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு தைலக்காப்பு நடைபெறும்.
இந்த வருடம் 2025 ஐப்பசி மாதம் சுக்ல பஷ துவாதசி திதி அன்று நவம்பர்
2-11-25 அன்று காலை 6.00 மணியளவில் சுவாமி புறப்பாடு கண்டருளி நூபுர கங்கையில் 10.30 மணி வரை அழகர் கோயில் ஸ்ரீ கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம் விழா நடைபெற்றது.
சிறு அருவி போல் கொட்டும் நூபுர கங்கை நீரின் கீழ் அப்படியே நின்று நேற்று
ஆனந்தமாய் திருமஞ்சனம் கண்டார். நூபுர கங்கையில் ஸ்வாமி ஶ்ரீஅழகர் எழுந்தருளி அந்த நூபுர கங்கை தீர்த்தத்தில் தொட்டிபோல் உள்ள இடத்தில் நேரடியாக நீராடும் அழகே அழகு!
இது கள்ளழகருக்கு மட்டுமே உரிய சிறப்பு எனலாம்.
தைலக்காப்பு திருவிழாவையொட்டி கள்ளழகர் பெருமாள் கீழே கோவிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார்.
தொடர்ந்து அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலை அடிவாரத்திலிருந்து புறப்படுவார். கோவில் யானை முன்னே செல்ல மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மலை ஏறுவார்.
அதனை அடுத்து மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை மாதவி மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு மதியம் கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி, சந்தனாரி, திருத்தைலங்கள் சாத்தப்பெறும். தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடுவார். பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மாலையில் பல்லக்கில் வந்த வழியாக சென்று அழகர் கோவிலில் இருப்பிடம் சேருவார்.
![]() |
| திருமஞ்சனத்தில் சுவாமி |
திருமஞ்சனத்திற்கு பிறகு கள்ளழகர் அலங்காரத்தில்
திருவாய்மொழி - இரண்டாம் பத்து
2-10. கிளர் ஒளி இளமை
திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக
ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார்.
முதல் பாசுரம். மிகவும் ஒளிவிடும் ஸர்வேச்வரன் விரும்பிய திருமலையே நமக்குக் குறிக்கோள் என்கிறார்.
3110
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகில் சார்வது சதிரே 1
கிளர்ந்து வருகிற ஞான ஒளிக்கு யோக்யதை உண்டான இளமையானது கெடுவதற்கு முன்னே வளர்ந்து வருகிற குண ஒளியையுடைய ஆச்சர்ய ரூபனான ஸர்வேச்வரன் பொருந்தி வாழ்கிற திவ்யஸ்தானமாய் வளர்ந்திருந்தாலும் இளமையாக இருக்கும் பொழில்களாலே சூழப்பட்டு அதனாலே மாலிருஞ்சோலை என்று திருநாமம் கொண்ட திருமலையை வேறு ப்ரயோஜனங்களை எதிர்பார்க்கும் தளர்த்தி இல்லாமல் அடைவதுவே சிறந்தது.
இரண்டாம் பாசுரம். அழகருடைய திருமலையோடு சேர்ந்து இருக்கும் திவ்யதேசத்தைக் கொண்டாடுவதே குறிக்கோள் என்கிறார்.
3111
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதி அது ஏத்தி எழுவது பயனே 2
ஸாமர்த்யம் மற்றும் இளமை ஆகியவற்றை உடைய ஸ்த்ரீகளுடைய தாழ்ந்ததான காமச்சொற்கள் மற்றும் செயல்களை ஆசைப்படாமல் முழங்குகிற ஸ்ரீபாஞ்சஜன்யத்தை உடையவராகையாலே மிகவும் அழகாக இருக்கும் அழகருக்கு தனித்துவம் வாய்ந்த ஸ்தானமாய் சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரங்களைக் கொண்ட திருமலையில் இருக்கும் ப்ரஸித்தமான திவ்யதேசத்தை ஸ்தோத்ரம் பண்ணி வாழ்ச்சிபெறுவதே குறிக்கோள்.
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத கள்ளழகர் திருவடிகளே சரணம் !!!
அன்புடன்
அனுபிரேம் 💙💙
















No comments:
Post a Comment