06 November 2025

14. திருமலை திருக்கோவிலின் பிரகாரங்கள்

  🍃🌷ஸ்ரீவாரி வருடாந்திர பிரமோற்சவம் 2025 - 7 ஆம் திருநாள் காலை சூரிய பிரபை வாகனத்தில்  சுவாமி  புறப்பாடு 🌷🍃












திருமலை

திருமலை திருக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. 

ஒன்று சம்பங்கி சுற்று - இந்த பிரஹாரத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 

பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராயன் மண்டபம், சாளுவ நரசிம்ம மண்டபம், ஜனா மஹால், துஜஸ்தம்பம் ஆகியவை உள்ளன. 

கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் பிரதிமை மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயர், அவரது மனைவிகளான திருமலாதேவி, சின்னா தேவி இவர்களின் சிலைகள் உள்ளன.

அடுத்து ரங்க மண்டபம், இதில் 14ம் நூற்றாண்டில், முகலாய படையெடுப்பின் போது, தாக்கபட்ட ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவரங்கன் உற்சவர் விக்ரகம், இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டதாக வரலாறு. 

கி பி 1328ல் முஹம்மது பின் துக்ளக் என்பவன் மதுரையும் அதனை சுற்றியுள்ள ஊர்களை கொள்ளை அடித்து கோவில்களை சூறையாடிய போது, திருவரங்கனை கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிக்க, சில பக்தர்கள் அவரை சுமந்து வந்து பல ஊர்களை கடந்து திருமலையில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். நடைபயணமாக வர சுமார் 2 ஆண்டு எடுத்து இருக்கும். 1330ல் திருமலை திருக்கோவிலில் ரங்கமண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவரை விருந்தாளியாக உபசரித்து அவருக்கு முதல் திருவாராதனம் நடந்தது என்றும் கங்குலும் பகலும் என்ற பதிகம் (திருவாய்மொழி 7.2) திருவேங்கடவன் முன் ஓதப்பட்டது என்றும் சொல்வார்கள். இங்கிருந்த திருவரங்கனை 1363ல் செஞ்சிக்கு கொண்டு சென்று அங்கு ஒரு எட்டு ஆண்டுகள் வைத்திருந்து மதுரையில் கலகம் தணிந்த பின், திருவரங்கத்துக்கு 1371ல் எழுந்தருளினார்.


அடுத்த பகுதி, திருமலை ராயர் மண்டபம்  இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மலையப்ப சுவாமி எழுந்தருளி திருக்கோவில் கணக்குகளை பார்ப்பார்.

 ஜனா மஹாலில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் உற்சவம் காணுவார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவில் துவஸ்தம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவேங்கடத்தானுக்கு அமைக்கப்பட்டு இருக்கும் விமானத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்ட பரவாசுதேவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் உண்டியலுக்கு போவதற்கு முன்பு, இவரை முழுவதுமாக தரிசிக்கலாம்.

அடுத்த மண்டபம், நடிமி படி காவலி என்ற மண்டபம், இங்கு நைவேத்தியம் சமயத்தில் அடிக்கப்படும் இரண்டு கோவில் மணிகள் உள்ளன. அதனால் இந்த மண்டபத்தை திருமாமணி மண்டபம் என்றும் அழைப்பர். இந்த மண்டபத்திற்கு வடக்கே பரகாமணி மண்டபம் என்ற எம்பெருமானின் முக்கிய உண்டியல் உள்ள மண்டபம் உள்ளது. இங்கே காவாளம் என்ற பெரிய பித்தளை அண்டாவில் துணி சுற்றி உண்டியலாக வைத்து உள்ளார்கள். கிழக்கே கருடர் சன்னதி உள்ளது.


அடுத்து பங்காரு வகிலி என்னும் தங்க வாசல் வழியாக திருவேங்கடவனை தரிசிக்க செல்கிறோம். 

இதன் வாசலில் ஜெயன் விஜயன் என்ற துவார பாலகர்கள் இருக்கிறார்கள். எம்பெருமான் கருவறைக்கு செல்வதற்கு முன், உள்ள மண்டபம் ஸ்நாபன மண்டபம்

அடுத்த கட்டம், ராமர் மேடை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர், சுக்ரீவன், அனுமன் அங்கதன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். சுதர்சன சக்ரத்தாழ்வார், விஷ்வக்சேனர், கருடர் போன்றவர்களும் எழுந்தருளி உள்ளனர். அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர் என்று நடன நிலையில் ஸ்ரீ ருக்மணி தேவியுடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு மார்கழி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும்.


அடுத்தது அர்த்தமண்டபம் எனப்படும் கர்ப்பகிரகம் இங்கு ஸ்ரீனிவாச பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமாக நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். 

மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார். 

கீழ் வலது திருக்கரத்தால் வரதஹஸ்தம் (உள்ளங்கை பக்தர்களை நோக்கி, திருவிரல்கள் தன் திருவடியை நோக்கி இருப்பது) காண்பித்து, எல்லோரும் அவன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார். இதற்கு வைகுண்ட ஹஸ்தம் என்றும் பெயர். 

கீழ் இடது திருக்கரங்களினால் கட்டியவலம்பிதா (திருவிரல்கள், இடது திருத் தொடையினை காட்டி தொடையின் மேல் இருப்பது) என்ற நிலையில் நிற்கிறார். 

முகத்தில், பெரிய திருமண்ணுடன் கீழ் தாடையில் பச்சைக்கற்பூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

எம்பெருமான் வைர கீரிடம் அணிந்து இருப்பார். 

வலது திருமார்பில் மஹாலக்ஷ்மி தாயாரும், இடது திருமார்பில் பத்மாவதி தாயாரும் எழுந்தருளி உள்ளனர். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.

 ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி,  காதணிகள்,  புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பூசு போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகர ஆழ்வார் படி உள்ளது.

திருவேங்கடவனை சேவித்து விட்டு வந்தவுடன் நாம் அடைவது முக்கோடி என்னும் அடுத்த பிரகாரம் ஆகும். இங்கே விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. அவர் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவிலுக்கு வருபவர்கள் அவரை வணங்கி செல்ல வேண்டும். இவர் எம்பெருமானுக்காக எல்லா நிர்வாக பொறுப்புகளையும் எடுத்து நிர்வகிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.

எம்பெருமானின் சந்நிதிக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காட்சி அளிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது கருட கொடி ஏற்றப்படும்.

திருமலை திருக்கோவில் கோபுரத்தின் இடது பக்கத்தில் ஸ்ரீ வரதராஜர் சுவாமி சன்னதி உள்ளது. அபயஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்ற இவரை சேவித்தால் எல்லா செல்வங்களும் பெறலாம் என்று நம்புகிறார்கள். 

முதல் பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் கிரிஜாநரசிம்மர் என்ற யோகநரசிம்மஹ சுவாமி சன்னதி உள்ளது. வைகாசி ஸ்வாதி நட்சத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாப்படும்.

ராமானுஜர் சன்னதி, மற்றும் சங்கீர்த்தனா பாதுகாப்பு அறை போன்றவையும் உள்ளன. சங்கீர்த்தனா பாதுகாப்பு அறையில், அன்னமார்ச்சார்யா, அவர் மகன் மற்றும் பேரன், திருவேங்கடவன் மேல் எழுதிய பாடல்கள் பாதுகாக்க பட்டு வருகின்றன.

எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் மடப்பள்ளியை பொட்டு அறை என்கிறார்கள். இங்கே மஹாலக்ஷ்மி அருள் பாலிக்கிறார். அவரை மடப்பள்ளி நாச்சியார் என்றும், அவளே வகுளமாலிகா என்றும் வணங்குகிறார்கள். 

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். 

திருவேங்கடவனுக்கு வாரம் ஒருமுறை வெள்ளியன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு நைவேத்தியம், வடகலை மற்றும் தென்கலை ஸம்ப்ரதாயங்கள்படி என்று சிறப்பு சாத்துமுறை நடைபெறுகிறது. அதன்போது நடைபெறும் தீபாராதனை ஒளியில் ஏழுமலையான் எந்தவித அலங்காரங்களும் இல்லாமல், கண்ணை பறிக்கும் அழகோடு காட்சி அளிப்பார்.

திருவேங்கடமுடையானின் முன் கோபுர வாயிற் படிக்கு “அவாவர சூழ்ந்தான் வாயில்” எனவும், துவார பாலகர் மண்டபத்திற்கு “வென்று கொண்டான் மண்டபம் ” என்றும் வழங்கி வந்தன.

கோவிலின் வலது பக்கத்தில் ஸ்வாமி புஷ்கரணி கரையில் ஆதி வராகபெருமான் சன்னதி உள்ளது.

திருமலை சன்னதி வீதியில் திருக்கோவிலுக்கு எதிரே தனிக்கோவிலாக ஒரு ஆஞ்சனேயர் சந்நதி உள்ளது. அதற்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர். ஆஞ்சநேயரின் தாயார் அஞ்சனாதேவி இந்த மலையில் இருந்து ஸ்வாமியை தவம் இருந்து வேண்டி பெற்றதினால், இங்குள்ள ஒரு மலைக்கு அஞ்சனாத்ரி என்ற பெயர் உண்டு என்று பார்த்தோம்.

ஒருமுறை ஆஞ்சநேயர் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து சென்று வந்தபோது, கவலையுற்ற தாய் அஞ்சனாதேவி, அனுமனை வானம் என்ற சங்கிலியால் இங்கே கட்டி வைத்து எம்பெருமானை விட்டு எப்போதும் அகலக்கூடாது என்று சொன்னதாக வரலாறு. விலங்கிடப்பட்ட ஆஞ்சேநேயர் என்பதால், இவருக்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர்.

எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாத அர்சனைகளுக்கும் வில்வ இலை உபயோகப் படுத்தப் படுகிறது.





பெரிய திருமொழி - முதற் பத்து 

1-8 கொங்கு அலர்ந்த மலர் 

திருவேங்கடம் - 1

1020 

நின்ற மா மருது இற்று வீழ * 

நடந்த நின்மலன் நேமியான் *

என்றும் வானவர் கைதொழும் * இணைத்

தாமரை அடி எம் பிரான் **

கன்றி மாரி பொழிந்திடக் * கடிது

 ஆ நிரைக்கு இடர் நீக்குவான் *

சென்று குன்றம் எடுத்தவன் *

 திருவேங்கடம் அடை நெஞ்சமே 3


ஓம் நமோ வெங்கடேசாய !!

கோவிந்தா!!  கோவிந்தா!!


தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment