17 May 2018

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி


நாகர்கோவில்-கன்னியாகுமரி பாதையில்..

 நாகர்கோவிலிலிருந்து 8 km தொலைவில் உள்ளது சுசீந்திரம்.


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும்  ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.

நாங்கள் முதலில் சென்று தரிசித்தது இப்பெருமானை..இத்தலத்தில் தான் கௌதமரின் சாபம் பெற்ற இந்திரன் இறைவனை வணங்கி தன் தோஷம் நீங்கினான்.

இந்திரன் சுசியான (தூய்மையான) தலம் என்ற பொருளிலேயே இத்தலம் சுசீந்திரம் என்று வழங்கப்படுகிறது.

அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும் கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர்.

இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலைக்குச் சென்றார்.

அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர்.

அனுசுயாவும் உணவு படைக்கத் தொடங்கினார். அப்போது மூவரும், ”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று கூறினர்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி, தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளித்தார்.

அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர்.

பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள்.

தங்கள் கணவர்கள் பச்சிளங்குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றித் தர வேண்டினர். தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள்.

அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசூயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார்.அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.

 இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர்.


 சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.மூவரும் தங்கள் மழலையராக இருந்ததை எண்ணி மகிழ்ந்த அத்ரியும் அனுசூயையும் அவர்கள் மீண்டும் தங்கள் மகவாகப் பிறக்க வேண்டும் என்று வேண்ட, பின்னாளில் அவர்களுக்கு மும்மூர்த்தி ஸ்வரூபமாய்ப் பிறந்தார் தத்தாத்திரேய பகவான்.

இங்கிருக்கும் நந்தி 12 அடி உயரம். நந்திக்கு அருகில் தலவிருக்ஷமான கொன்றை மரத்தடியில் ஆதி தாணுமாலய லிங்கம் இருக்கிறது. அதனருகில் கருடாழ்வார் சன்னிதி. துவஜஸ்தம்ப மண்டபத்தைக் கடந்து கருவறையை அடையவேண்டும். 

கருவறைக்குத் தென்புறம் விஷ்ணு சன்னிதியும் இங்குள்ள மண்டபங்களிலெல்லாம் பெரிய செண்பகராமன் மண்டபமும் உள்ளன. 

இங்குள்ள முப்பத்தியிரண்டு தூண்களிலும் கண்கவர் சிற்பங்கள் அழகு செய்கின்றன. 

விஷ்ணு சன்னிதியில் எம்பெருமான் 8 அடி உயரத்தில் நின்ற கோலமாய்க் காட்சி தருகிறான். 

கருவறைக்கும் விஷ்ணு சன்னிதிக்கும் பின்னுள்ள சுவரில் அமரபுஜங்கப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார்.
இங்குள்ள அம்பிகை அறம் வளர்த்த அம்மன்.

இங்குள்ள ஆஞ்சநேயர் பிரசித்தமானவர், வரப்பிரசாதி. 

இவர் 18 அடி உயரமுள்ளவராய் கம்பீரமாய் காட்சி தருகிறார்.

நாங்கள் சென்ற போது வெண்ணெய் அலங்காரத்தில் மின்னினார்...


சுத்தமான அழகிய திருக்குளம்..
வெளிப்புறம் இருந்த ஒரு அம்மன் கோவில் முகப்பு..அயனென்று அழைத்தேன் அகிலம் படைத்தாய்

அரியெனச் சொன்னேன் அருளொடு காத்தாய்

அரனெனும் அன்பால் அகந்தை அழித்தாய்

அறம்பொருள் இன்பமும் முக்தியும் அளித்தாய்

தரமென்ன கண்டாய்? தாணுமாலயனே!மிக அழகிய திருக்கோவில்...சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்தொடரும்...

அன்புடன்
அனுபிரேம்10 comments:

 1. சிலமுறை சென்றிருக்கிறேன். கடைசியா போனபோது சுண்டல் வாங்கி தரலைன்னு கோவில் குளத்தங்கரையில் என் பையன் செஞ்ச அழிச்சாட்டியம் இருக்கே! அப்ப்பா!

  ReplyDelete
 2. இருமுறை சென்றிருக்கின்றேன்...
  அழகான படங்கள்... அருமையான விவரங்கள்...

  வாழ்க நலம்...

  ReplyDelete
 3. மிக அழகான புகைப்பட‌ங்கள்!

  ReplyDelete
 4. அழகிய படங்கள். கேள்விப்பட்ட கதையாயினும் சுவாரஸ்யம்.

  ReplyDelete
 5. துளசி: நன்றாக இருக்கிறது. பல முறை சென்ற கோயில்....

  கீதா: ஆஹா எங்க ஊர்!!! ம்ம் பல நினைவுகளை மீட்டது அனு நன்றி


  ReplyDelete
 6. பல முறை சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று.

  ReplyDelete
 7. அழகான படங்கள்.கதை,தகவல்கள் அருமை.

  ReplyDelete
 8. தல வரலாற்றுடன் படங்கள் அருமை. இந்தக் கோவிலுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் சென்றிருக்கிறேன். வீடியோ கேமராவில் ஆர்வமாக இருந்த சமயம் அது. இந்தக் கோபுரத்தின் சிற்பங்களை ஜூம் செய்து வீடியோவாக எடுத்தது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 9. இது எங்க ஊரு.... நன்றி மீண்டும் வருக....

  ReplyDelete