28 September 2019

திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோவில்

சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.







 



   மூலவர் : காளமேகப்பெருமாள்

  உற்சவர் : திருமோகூர் ஆப்தன்

  தாயார் : மோகனவல்லி

  தல விருட்சம் : வில்வம்

  தீர்த்தம் : தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம்

  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்



 



புராண வரலாறு :

கிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம்பெற்ற இந்திரன், விமோசனம் பெற்ற தலம், திருமோகூர் திருத்தலம் ஆகும்.

திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

அதைத் தடுக்க விரும்பிய திருமால், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, தேவர்கள் அமிர்தம் பருக வழிவகுத்தார்.

 இறைவன் மோகினி வடிவம் எடுத்த தலம் இது என்பதால், ‘மோகினியூர், மோகியூர், மோகன சேத்திரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது மோகூர் என்று வழங்கப்படுகிறது.

துவாபர யுகத்தின் போது, இந்தத் தலத்தில் புலஸ்தியருக்கு மோகினி வடிவில் இறைவன் காட்சி தந்து அருளியதாக புராண வரலாறு சொல்கிறது.

இங்கு பிரம்மதேவன் தவம் இயற்றியதை பிரமாண்ட புராணத்தில் அறியமுடிகிறது. சங்க காலத்திலேயே இத்தலம் பழையன் என்ற சிற்றரசனின் ஊராகத் திகழ்ந்திருக்கிறது.

மோரியர் படை மோகூரைத் தாக்கிய போது, பழையனுக்குத் துணையாக கோசர்கள் நின்று வெற்றி தேடித் தந்தனர்.

 கி.பி. 8, 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம் இது.





 தல சிறப்பு:
   
  இத்தலத்தில் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர், அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார்.


சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மர் காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது.







இந்த ஆலயம் ஸ்ரீதேவி - பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது.

மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன.

பாண்டியர்கள், விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது.





தலபெருமை:
   
 
 காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார்.

எனவே இவர், "காளமேகப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

 பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கிறார்.

இங்குள்ள உற்சவர், "ஆப்தன்' என்று அழைக்கப்படுகிறார்.

"நண்பன்' என்பது இதன் பொருள்.  தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதவால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

இணையத்திலிருந்து 

இணையத்திலிருந்து


மாசி மகத்தன்று சுவாமி, ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி தைலக்காப்பு செய்கின்றனர். 

அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும்.


கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே மன்மதன், ரதி சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. திருமண தடை நீங்க  இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்கள் மன்மதனுக்கும், பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி, கல்கண்டு படைத்து வழிபடுகிறார்கள்.



மன்மதன் 
இத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும்  அழைக்கிறார்கள்.






பத்தாம் பத்து
திருவாய்மொழி


ஒன்றாம் திருவாய்மொழி – தாள தாமரை
எம்பெருமான் ஆழ்வார்க்கு உயிர்தன்னைக்கிட்டும் வகையைக் (அர்ச்சிராதிக்தியைக்) காட்டி இவரது விருப்பங்களைத் தலைக்கட்டுதல்.

அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமானைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச்செய்தல்



தாளதாமரைத் தடமணிவயல்திருமோகூர் *
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும் *
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய் *
காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்கதியே. (2)

1 3667


இலங்கதிமற்றொன்றுஎம்மைக்கும் ஈன்தண்துழாயின் *
அலங்கலங்கண்ணி ஆயிரம்பேருடையம்மான் *
நலங்கொள்நான்மறைவாணர்கள்வாழ் திருமோகூர் *
நலங்கழலவனடிநிழல் தடமன்றியாமே.

2 3668


அன்றியாம்ஒருபுகலிடம்இலம் என்றென்றலற்றி *
நின்றுநான்முகன் அரனொடு தேவர்கள்நாட *
வென்றுஇம்மூவுலகளித்து உழல்வான்திருமோகூர் *
நன்றுநாமினிநணுகுதும் நமதிடர்கெடவே.

3 3669

இடர்கெடஎம்மைப்போந்தளியாய் என்றென்றேத்தி *
சுடர்கொள்சோதியைத் தேவரும்முனிவரும்தொடர *
படர்கொள்பாம்பணைப் பள்ளிகொள்வான்திருமோகூர் *
இடர்கெடஅடிபரவுதும் தொண்டீர்! வம்மினே.

4 3670


தொண்டீர்! வம்மின் நம்சுடரொளிஒருதனிமுதல்வன் *
அண்டமூவுலகளந்தவன் அணிதிருமோகூர் *
எண்டிசையும்ஈன்கரும்பொடு பெருஞ்செந்நெல்விளைய *
கொண்டகோயிலைவலஞ்செய்து இங்கு ஆடுதும்கூத்தே.

5 3671








            மதுரை   பயணத்தின் ஒரு மாலை நேரத்தில் இங்கு  தரிசனம் கிடைத்தது .நேரம் குறைவாக இருந்த காரணத்தால் சில  படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .

  ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகான கோவில். இந்தக் கோவிலை பற்றி இப்போதுதான் முழுமையாக அறிகிறேன். கோவில் ஸ்தல புராணம் விரிவாக நன்றாக சொல்லியுள்ளீர்கள். அழகான கோபுர தரிசனம், பெருமாள் தாயாரின் தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன்.

    கோவிலின் அமைப்பு, மற்றும் எல்லாப் படங்களும் மிக அருமையாக உள்ளது. நன்கு பெரிய கோவிலாகத்தான் தெரிகிறது. மதுரை செல்லும் சமயம் வாய்த்தால் இந்த கோவிலுக்கும் சென்று வர வேண்டுமென ஆசை வருகிறது. தங்களால் அருமையான பெருமாள் கோவிலை கண்டு களிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அண்மையில் குடும்பத்துடன் சென்றுவந்தோம். பார்க்கவேண்டிய அருமையான கோயில்.

    ReplyDelete
  3. மீண்டும் உங்கள் பதிவில் காளமேக பெருமாளை தரிசனம் செய்து கொண்டேன், படங்கள் எல்லாம் அருமை.
    வரலாறு அருமை.
    நானும் போய் வந்து பதிவு போட்டேன். திருவாய் மொழி பாடி வழிபட்டுக் கொண்டேன்.
    புரட்டாசி மாதம் பதிவு மிக அருமை.

    ReplyDelete
  4. காளமேக பெருமாளை உங்க பதிவினால் தரிசித்தாயிற்று. மோகனவ்ல்லிதாயாரை பற்றியது கூடுதல் தகவல். படங்கள் அழகா இருக்கு.

    ReplyDelete
  5. திருமோகூர் தரிசனமும் அவன் அருளால் டிசம்பர் மாதம் கிடைக்கும்னு நினைக்கறேன். படங்களைப் பார்த்த உடனேயே தோன்றியது, அந்தக் கோவிலுக்கு இரவிலில்லாமல் பகலில் செல்லணுமே, படங்கள் எடுக்கணுமே என்று.

    பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் பின்புறம் நரசிம்ஹர்தானே இருப்பார்?

    படங்கள் அருமை.

    ReplyDelete
  6. அழகான திருக்கோவில். உங்கள் மூலம் தல வரலாறும், தகவல்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete