24 September 2019

நூபுர கங்கை தீர்த்தம் ,ராக்காயி கோவில், மதுரை

வாழ்க வளமுடன் 

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மதுரை  முந்தைய பதிவு ...

எம்பெருமான் ஸ்ரீமந்த் நாராயணன் திரிவிக்ரமாவதாரம் செய்து சகல உலகங்களையும் அளந்த போது எம்பெருமானின் திருவடி பிரம்ம லோகத்திற்கு செல்ல

அப்போது (36 ஆயிரம் வருடங்களாக ) பெருமானின் பாதத்தை கண்டு வணங்கிட வேண்டி தவம் செய்த , பிரம்ம தேவனும் தன் அருகில் ஸ்வரணா கலசத்தில் இருந்த கங்கை நீரால் எம்பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார்.
அப்போது எம்பெருமானின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பு எனும் நூபுரத்திலும் கங்கை தீர்த்தம் பட்டு பிரம்ம லோகத்தில் இருந்து பூவுலகிற்கு வந்து சேர்த்து.

 அன்று முதல் இன்றும் என்றும் ஸ்ரீமத் நாராயணின் திருவடியில் இருந்து பெருகி வருகிற புண்ணிய நதியாக திகழ்கிறது.

பிரம்ம தேவனால் பெருமானின் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட கங்கையே , எம்பெருமானின் திருவடியில் அணிந்துள்ள நூபுரம் எனும் சிலம்பில் பட்டு இங்கே வற்றாத அருவியாக ஓடிவருவதால் , நூபுர கங்கை என்றும்

 தமிழில் சிலம்பாறு என்றும் பாடல் பெற்று உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் விடச் சிறந்ததாய் விளங்குகிறது.

இந்த நூபுர கங்கை புண்ணிய தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி தினத்தன்று ஸ்ரீ சுந்தரராஜ பெருமான் எழுந்தருளி தைலக்காப்பு திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்கு எல்லா மங்களங்களையும் அருளுகிறார்.

நுாபுர கங்கை தீர்த்தக்கரையில் உள்ள பெண் காவல் தெய்வம் ராக்காயி. ஆங்கிரச முனிவரின் மகளாகக் கருதப்படும் இவளை அமாவாசையன்று வழிபடுவது நன்மையளிக்கும்.

இத்தீர்த்தத்தில் அமாவாசையில் நீராடி, ராக்காயி அம்மனை வழிபட்டால் முன்னோர் சாபம் நீங்கும் என்பர்.

மல்லிகை கொடிகள் சூழ்ந்திருந்ததால் ராக்காயி அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு'மாதவி மண்டபம்' என்ற பெயர் வழங்கியதாகச் சொல்வர்.

அழகர் கோயில் தலபுராணத்தில் இதன் பெருமை கூறப்பட்டுள்ளது.

தீர்த்தத்தை சுற்றி வரும் வழியிலே ராக்காயி கோவில் அமைந்துள்ளது.

கீழே அழகர் கோவிலில் 


'கோவிந்தா' என்றால் 'திரும்ப வராதது' என்று பொருள்படும். ஆம்...அழகர் தரிசனம் பாவத்தைப் போக்கும்.

அந்த பாவத்தின் பலன் திரும்ப நம்மை அண்டாது.

 'கோ' என்றால் 'தலைவன்'. 'விந்தம்' என்றால் 'திருவடி'.

அவன் பாதார விந்தங்களைத் தரிசித்தால் பாவம் முற்றிலும் நீங்கி விடும். எனவே தான் பக்தர்கள் 'கோவிந்தா' கோஷமிட்டு அழகரைப் பக்திப்பூர்வமாகத் தரிசிக்கிறார்கள்.வால்மீகியின் ராமாயணம், வியாசரின் மகாபாரதம், சுகரின் பாகவதம் ஆகிய நுால்களிலும் அழகர் மலையின் பெருமை கூறப்பட்டுள்ளது.

சித்ரகூட மலையில் ராமர், லட்சுமணர், சீதை தங்கியிருந்த பகுதி அழகர்மலையை ஒத்திருந்ததாக வால்மீகியின் குறிப்பு உள்ளது.

பாண்டவர்களில் தர்மர் அழகர்மலைக்கு தீர்த்தயாத்திரை வந்ததாக வியாசர் கூறியுள்ளார்.

பலராமர் பாண்டிய தேசத்தில் உள்ள விருஷபாத்ரி(அழகர்மலை) மலையை தரிசித்து விட்டு சேதுக்கரைக்குப் புறப்பட்டதாக பாகவதம் கூறுகிறது.

இந்த மலையைத் தரிசித்தவர்கள் வாஜபேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவதாக நாரதர் பீஷ்மருக்கு உபதேசித்ததாக மகாபாரதம் கூறுகிறது.

இத்தலம் மிகவும் பழமை மிக்கதாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்பு மிக்கது.

வராக புராணம், பிரம்மாண்ட புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் ஆகியவற்றில் இதன் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இவற்றை தொகுத்து 'விருஷபாத்ரி மகாத்மியம்' என்றும் ஸ்தல புராணம் வடமொழியில் இயற்றப்பட்டுள்ளது.


ஆனாயர்கூடி அமைத்தவிழவை * அமரர்தம் 
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை *
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி *
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே.

341


ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் * கஞ்சன்தன் 
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை *
கருவாரணம் தன்பிடிதுறந்தோட * கடல்வண்ணன் 
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 

5 342


ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை *
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை *
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும் *
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.

343

நூபுர கங்கை தீர்த்தத்தில் குளிக்க வென்று வரிசைகள் இருந்தன ..பலர் வரிசையில் நின்று குளித்தனர் ...பசங்க மட்டும் நீராடி விட்டு வந்து , மிகவும் புத்துணர்வுடன் இருந்ததாக கூறினர்.

சிலர் பெரிய குடுவைகளில் இந்த தீர்த்தத்தை சேகரித்துக் கொண்டு சென்றனர் .

மேலே தீர்த்தற்க்கு செல்லும் வழியெல்லாம் அருமையாக இருந்தது .நல்ல அனுபவங்கள் இங்கு .


                                                     ஓம் நமோ நாராயணா..


அன்புடன்
அனுபிரேம்

8 comments:

 1. தகவல்களும் படங்களும் சிறப்பு.

  ReplyDelete
 2. அருமையான போஸ்ட்.. ராக்காயி அம்மனை நானும் தரிசித்தேன்.

  என் கிரேட் குரு எவ்ளோ கெட்டிக்காரராக இருக்கிறார்:), ஒரு வாழைப்பழத்தைக் காலால பிடிச்சுக் கொண்டு மற்றதைச் சாப்பிடுறார் ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. அந்த படம் போடும் போது இதான் நினைத்தேன் அதிரா ...நம் பதிவர்கள் பலருக்கு பிடிக்கும் என

   Delete
 3. சிலம்பாறு பற்றிய தகவல்களோடு ராக்காயி அம்மன்,மற்றும் கோவில் பற்றிய தகவல்களும் அருமை. என்ன மாதிரி அழகாக வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுகிறார்.

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி

  அழகர் கோவில், மேலே பழமுதிர் சோலை, அதற்கும் மேலே இந்த நூபுர கங்கை என மிக அழகிய இயற்கை நிறைந்த இடங்களால் சூழப்பட்டது இந்த அழகர் மலை. இதை பற்றிய வரலாறு மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.படித்து ரசித்தேன். நான் பல வருடங்களுக்கு முன் திருமங்கலத்தில் இருக்கும் போது ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று முருகப் பெருமானையும், சுந்த ராஜ பெருமாளையும் சேவித்திருக்கிறேன். வருடங்கள் நிறைய ஆகிவிட்டதில் அவ்வளவாக நினைவிலில்லை. தங்கள் பதிவை பார்த்ததும் சென்று வந்த நினைவுகள் ஒவ்வொன்றாக வருகின்றது. படங்கள் மிக அழகாக உள்ளன. முன்னோர்கள் படங்களும் மிக அழகு. நம் முன்னோர்கள் இந்த மாதிரி வனத்தில்தான் மிகவும் ஹாயாக உள்ளனர். பதிவை படித்து மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி கா

   Delete
 5. படங்களோடு கூடிய தகவல்கள் அருமை.

  ReplyDelete