08 October 2020

ருக்மணி துவாரகை , சுதாமா துவாரகை

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

1. பஞ்சதுவாரகா தரிசனம் ...

2.ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

3.பேட் துவாரகை

 ருக்மணி துவாரகை 

துவாரகாதீசர் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில், பேட்துவாரகை செல்லும் வழியில் ருக்மிணி துவாரகை அமைந்துள்ளது.

ஓகா துறைமுகத்துக்கு வரும் வழியிலேயே ருக்மிணி தாயாரின் தனிக் கோயிலை தரிசிக்கலாம். இங்கே ருக்மிணியும், ஸ்ரீகிருஷ்ணனும் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கிறார்கள். 







கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்த பின்,  தவத்தில் சிறந்த துர்வாச முனிவரை அழைத்து விருந்து தர விரும்பினார். எனவே அவரை அணுகிப் பணிவுடன் இருவரும் அழைத்தனர். 

ஒரு நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார் துர்வாசர். 

 அவர்  செல்லும் தேரை கிருஷ்ணரும்,  ருக்மிணியும் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்நிபந்தனை.


இருவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வழியில் கடும் வெயில். 

ருக்மிணிக்கு தாகம் எடுத்து நா வறள ஆரம்பித்தது. 

விருந்தோம்பலின் முக்கியமான விதிமுறை, விருந்தினர் திருப்தியாக உபசரிக்கப்பட்ட பிறகே விருந்தளிப்பவர் உண்ண வேண்டும். 

அதனால் துர்வாசரிடம் தன் தாகத்தைப் பற்றி ருக்மிணி சொல்லவில்லை. 

ஆனால், ருக்மிணியின் துயர் பொறுக்காத கிருஷ்ணர், துர்வாசர் அறியாதவாறு நிலத்தை  கால் நகத்தால் கீறி கங்கையை வரவழைத்து ருக்மிணியை அருந்தச் செய்தார்.


விதிவசம், அச்சமயம் பார்த்து இவர்கள் பக்கம் திரும்பினார் துர்வாசர். 

ருக்மிணி நீர் அருந்தியதைக் கண்டு அவருக்குக் கோபம் தலைக்கேறியது. 

அதிதியின், அதாவது தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீர் அருந்தலாம் என்பதுதான் துர்வாசரின் கோபத்துக்குக் காரணம். 

கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவரது முயற்சி தோல்வி அடைந்தது.


“அதிதிக்கு உணவளிக்காமல் நீர் அருந்திய நீ, கிருஷ்ணனைப் பிரிந்திருக்கக் கடவாய்”. 

மேலும் இந்த பூமி தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சை விளையாமல் போகட்டும் என்று துர்வாசர் சாபமிட்டார்  பிறகு, தண்டனை பன்னிரண்டு வருட காலம்  என்று குறைக்கப்பட்டது. 

அந்தக் காலகட்டத்தில் ருக்மிணி துவாரகைக்கு வெளியே தனியே வசித்து வந்தார். 

கிருஷ்ணர் தான் உறையும் ஒரு மூர்த்தியை அளிக்க அதை  தினமும் பூசை செய்து வந்தாள்.  அந்தக் கெடு முடிந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார்.

ருக்மிணி தவம் செய்த இவ்விடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. 





பின்னர் துவாரகை வந்த  துர்வாச முனிவருக்கு கிருஷ்ணர் விருந்து படைத்தார். இதில் மனம் குளிர்ந்த துர்வாச முனிவர் சாபத்தை நீக்கி ஊர் செழிப்புறவும் கிருஷ்ணர் 100 ஆண்டுகள் ஆட்சி புரியவும் ஆசி வழங்கினார். 

    



மிக அழகிய வேலைப்பாடு அமைந்த திருக்கோவில் இது.

 சுதாமா துவாரகை   

துவாரகையிலிருந்து சோமநாத் செல்லும் வழியில், துவாரகையிலிருந்து சுமார் 105  கி.மீ தூரத்தில் போர்பந்தர் அமைந்துள்ளது. அங்கு தான்  சுதாமா துவாரகை  உள்ளது.





கிருஷ்ணரின் பால்ய நண்பராக இருந்தவர் சுதாமா. இவரை குசேலன் என்றும் அழைப்பார்கள். 

மன்னர் பரம்பரையில் வந்த கிருஷ்ணரும், ஏழ்மையான அந்தண குடும்பத்தில் பிறந்த சுதாமாவும் எந்த வேற்றுமையும் இல்லாமல் பழகி வந்தனர். அவர்கள் கல்வியை முடித்ததும் பிரிந்து விட்டனர்.





மனைவி, குழந்தைகள் என்று ஆன பிறகு, சுதாமாவின் வாழ்க்கை மிகவும் வறுமையில் கடந்தது. 

அந்த ஏழ்மையை அகற்ற, சிறு வயது நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்டு வரும்படி, சுதாமாவிடம் அவரது மனைவி கூறினார். 

கிருஷ்ணரை பார்க்க செல்லும் போது வெறும் கையுடன் செல்லக்கூடாது என்பதால், ஒரு துணியில் கொஞ்சம் அவல் எடுத்துச் சென்றார்.

 சுதாமாவைப் பார்த்ததும், ஆனந்தம் அடைந்த கிருஷ்ணர், அவரை அன்புடன் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.

அவர் பாதங்களை தானே கழுவினார். அவர் கொண்டு வந்த அவலை வாங்கி உண்டார். ஆனால் கிருஷ்ணரிடம் உதவி எதையும் கேட்கவில்லை சுதாமா. கிருஷ்ணரை சந்தித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார் சுதாமா.




அங்கு தன்னுடைய வீடு அரண்மனை போல் மாறியிருப்பதையும், பொன், பொருள் குவிந்து கிடப்பதையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார். தான் கேட்காமலேயே தன்னுடைய வறுமை வாழ்வை அகற்றிய அந்த இறைவனுக்கு சுதாமா மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்  நன்றி கூறினார்.





போர்பந்தர் ஒரு காலத்தில் சுதமாபுரி அல்லது சுதாமா நகரம் என்று அழைக்கப்பட்டது. 

போர்பந்தரின் நடுவில் அமைந்துள்ள இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

இருப்பினும், தற்போதைய கோயிலின் கட்டுமானம் 1902 ஆம் ஆண்டு போர்பந்தரைச் சேர்ந்த பவ்சிங்ஜி மகாராஜ் என்பவரால் அழகிய செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் வளைவுகளுடன் மிகப் பெரிய அளவில் செல்கிறது.
 இந்த கோவிலில் கிருஷ்ணர், சுதாமா மற்றும் சுதாமாவின் மனைவி சுஷிலா சிலைகள் உள்ளன. 


பெரியாழ்வார் திருமொழி - நான்காம்பத்து
ஒன்பதாம் திருமொழி - மரவடிய - 4

415

பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய * துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில் *
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான் *
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.



தொடரும் ......

கண்ணன் திருவடிகளே சரணம் ....

அன்புடன் 

அனுபிரேம்      


3 comments:

  1. அழகான, பார்க்கவேண்டிய கோயில். இறையருள் இருப்பின் அவசியம் செல்வேன்.

    ReplyDelete
  2. ருக்மணி த்வாரகையில் அழகிய வேலைப்பாடமைந்த சிறிய சிற்பங்கள் உண்டு. ஆனால் காலவெள்ளத்தில் கோவில் கொஞ்சம் கரைந்திருக்கிறது. கோவிலின் அருகில் பிச்சைக்காரர்கள் கூட்டங்கள் உண்டு. அங்கு விநோதம் என்னவெனில், அந்தக் கூட்டத்தில் ஒருவரிடம் பிச்சை கொடுத்தால் போதும், அவங்களுக்குள் பங்கு போட்டுக்குவாங்க.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. படங்கள் அழகு.
    துவாரகை தரிசனம் செய்த மனநிறைவு.

    ReplyDelete