02 October 2020

மஹாத்மா காந்தியின் உணவுக்கொள்கை....

 வாழ்க வளமுடன் 
இன்று நமது தேச பிதா காந்திஜி யின்  151-வது பிறந்த நாள்...

மஹாத்மா காந்தியின் உணவுக்கொள்கை ,வாழ்க்கை முறை ,அவர் சந்தித்த நோய்கள் 

உணவு சார்ந்த சுய பரிசோதனைகள்.....


தேசத்தின் விடுதலைக்கு உழைத்த தியாகிகளில் முக்கியமானவரான திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தான் அஹிம்சை மற்றும் சத்தியத்தை கொண்டு செய்த சோதனைகளை "சத்திய சோதனை" என்ற வாழ்க்கை சரித்திரமாக வெளியிட்டது அனைவரும் அறிவோம். 

ஆனால் அவரது உணவு சார்ந்த கொள்கைகள் குறித்து பெரும்பான்மை அறிந்திருக்கும் வாய்ப்பு அரிதே.

காந்தியின் உணவு சார்ந்த கொள்கைகளை பற்றியதே இந்த கட்டுரை. 

காந்தி அவர்கள் பிறப்பிலேயே சைவம் உண்ணும் மரபைச்சார்ந்தவர். 

அவர் சைவம் என்றாலும் பால் பொருட்களை அவர் சைவம் என்ற கணக்கில் கொள்ளவில்லை. 

மாறாக முட்டையை சைவப்பொருளாக கருதினார். 

பால் சாப்பிடும் சைவ மக்கள் தாராளமாக ( மலட்டு)  முட்டையையும்  சைவமாக கருதி உண்ணலாம் என்றார். 

அதாவது அவரைப்பொறுத்த வரை "பால்" என்பது ஒரு உயிரினத்திடம் இருந்து பெறப்படும் பொருள். அதை குடிப்பது சைவமாகாது என்று கருதினார். 

இதனால் சில வருடங்கள் பால் மற்றும் பால் பொருட்களை கூட தவிர்த்து வந்தார். 

இதை Veganism என்கிறோம். 

அதாவது காய்கறி , பழங்கள் , தானியங்கள் போன்ற மண்ணில் விளைந்தவற்றை மட்டுமே உண்டு வாழ்வது Veganism ஆகும். 

ஆனால் 1917 ஆம் ஆண்டு அவருக்கு கட்டுப்படாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எலும்பும் தோலுமாக ஆனார். 

வைட்டமின் பியை பெற பால் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்களின் அறிவுரையை கூட பல நாள் தட்டிக்கழித்தே வந்தார். 

இருப்பினும் இனியும் தாக்குபிடிக்க முடியாது என்ற நிலையில் தனது சபதத்தை நினைவு கூர்ந்தார். 

"இனி பசு மற்றும் எருமை தரும் பால் மற்றும் பால் பொருட்களை உண்ண மாட்டேன்" என்று தான் சபதம் ஏற்றிருந்தார் .

எனவே, ஆட்டுப்பால் எடுப்பது சபதத்தை மீறியதாகவும் இராது. மருத்துவர்கள் பேச்சைக் கேட்ட மாதிரியும் ஆயிற்று. எனவே அன்றிலிருந்து ஆட்டுப்பால், நெய் , தயிர் போன்றவற்றை எடுக்க ஆரம்பித்தார். 

பிரிட்டிஷ் வைசராயையே அவரது அரண்மனையில் சந்திக்க சென்றாலும் வைசராய் ஐஸ்கிரீம் சாப்பிட , இவர் கையில் கொண்டு சென்ற ஆட்டு தயிரை உண்பாராம்.

காந்தி சைவ உணவாளராக இருந்தாலும் யார் மீதும் தன் உணவு சார் கருத்தை திணிக்கவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. 

காந்தியின் உணவில் பெரும்பங்காக இருந்தது 

1. சமைக்கப்படாத காய்கறிகள் 

2. தயிர் 

3. பழங்கள் 

4. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் 

5. பாலிஷ் செய்யப்படாத அரிசி 

6. சிறுதானியங்கள்

7. கீரைகள்

8. சோயா பீன்ஸ்

9. வேப்பங்கொட்டைகள்

10. வெல்லம்

11. கொய்யா விதைகள்

12. புளி 

13. பேரீச்சம் பழம்

14. கடலை மிட்டாய்

15. உப்பு 

இதில் உப்பு உண்பதை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த அவர்.. மருத்துவர்களின் அறிவுரைப்படி கொஞ்சம் உப்பு சேர்க்க ஆரம்பித்தார். 

20 ஆம் நூற்றாண்டிலேயே எடை குறைப்பு உணவு முறைகளை தானே முயற்சி செய்து பரிசோதித்து பார்த்தவர் காந்தி அவர்கள். 

மேலும் இப்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் எனும் விரதத்தை ஆன்மீக ரீதியாகவும்  அரசியல் காரணங்களுக்காகவும் இருந்தவர். 

1913 இல் தொடங்கி 1948 வரை 17 முறை பல்வேறு காரணங்களுக்காக விரதம் இருந்துள்ளார். 

1924இல் இருந்த ஒரு விரதம் 21நாட்கள் வரை சென்றது. 

தண்ணீரும் அவரது மனத்திடமும் மட்டுமே அவரைக் காப்பாற்றியது. 

விரதங்களை தொடங்குவதற்கு பெரும்பாலும் எலுமிச்சை பழச்சாறு அல்லது வெந்நீரில் தேன் கலந்து பருகுவாராம்.

1930 களில் சைவ மக்கள் நெய்க்கு பதிலாக பயன்படுத்த ஏதுவாக வனஸ்பதி அறிமுகப்படுத்தப்பட்டது. 

காந்தி பால் கூட பருகுவதை விரும்பாதவர் ஆதலால் இந்த வனஸ்பதியை ஆதரிப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் வனஸ்பதியின் தீமையை கணித்த அவர் உடனே எதிர்த்தார். 

நெய் தான் ஆரோக்கியமானது. வனஸ்பதி கெட்டது என்று சூளுரைத்தார். 

எந்த உணவும் இயற்கையாக உருவாகி வரவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் கேடு தருபவை என்று பிரச்சாரம் செய்தார்.

அவரிடம் நாம் முரண்படும் இடம் . அவரது சைவ உணவு முறை குறித்த நிலைப்பாடு தான் 

"மனிதன் எதை உண்கிறானோ அதுவாகவே மாறுகிறான் என்பதில் உண்மை இருக்கிறது" என்கிறார் காந்தியடிகள். 

(ஹரிஜன் ,5-8-1933) 

அவருடன் ஒன்றுபடும் இடம் பின்வருமாறு

காந்தி அவர்கள் கடைபிடித்து வந்த மற்றும்  அறிவுருத்திய  டெய்லி டயட் சார்ட் இது தான். இந்த உணவு முறையை கடைபிடித்தால் எந்த பெரிய  பிரச்சனையும்  உடலுக்கு ஏற்படாது என்று கூறுகிறார். இதை மருத்துவர்களும் ஏற்றுக்கொள்வர் என்றும் சான்று பகிர்கிறார். 

அந்த உணவு பரிந்துரை பின்வருமாறு... 

பால் - 2 அவுண்ஸ்

தானியம் - 6 அவுண்ஸ்

இலைதலை காய்கறிகள் - 3  அவுண்ஸ் 

மற்ற காய்கறிகள் - 5  அவுண்ஸ்

நெய் - ஒன்றரை அவுண்ஸ்

வெண்ணெய் - 2 அவுண்ஸ்

வெள்ளை சர்க்கரை - ஒன்றரை அவுண்ஸ்

இதன் மேக்ரோ அளவுகளை பிரித்து பார்க்கையில் 

தினமும் சுமார் 1300 கிலோ கலோரிகள் உணவு எடுக்குமாறு இந்த உணவு முறை இருக்கிறது. 

புரதச்சத்து எனும் ப்ரோடீன் 20 கிராமிற்கு கீழ் எனும்  மிகவும் குறைவான அளவாக   இருந்தாலும்

மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் 80 கிராம் என்ற அளவில் இருக்கிறது. 

கொழுப்பு சத்து எனும் ஃபேட்ஸ் 90 கிராமிற்கு மேல் வருகிறது.  

இங்கு நாம் பார்க்க வேண்டிய முக்கிய விசயம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மாவுச்சத்தின் அளவை விட கொழுப்பின் அளவு அதிகமாக இருக்குமாறு உணவை பரிந்துரை ய்திருக்கிறார். 

இன்றும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையில் நாம் மெய்ண்டணெண்ஸ் டயட்டில் பரிந்துரை செய்யும் மாவுச்சத்து அளவு - 100 கிராம் வரை. 

கொழுப்பின் அளவுகள் கிட்டத்தட்ட 100 கிராம் அளவு வரும். 

அவர் சாப்பிட்ட உணவு முறையில் புரதம் 20 கிராமிற்கு கீழ் இருப்பது மட்டும் தான் நமக்கு பிரச்சனை.  ஆரோக்கியமான மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு அவர் எடையை ஒத்த அளவு புரதம் கிராமில் எடுக்க வேண்டும். 80 கிலோ இருந்தால் 80 கிராம் புரதம் கட்டாயம் எடுக்க வேண்டும்.

காந்தி அவர்கள் தன் வாழ்நாளில் சந்தித்த உடல் சார்ந்த நோய்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

அன்னார் தென் ஆப்பிரிக்காவில் இருந்த காலத்தில் ரியூமாடிக் மூட்டு வலியால் அவதிப்பட்டிருக்கிறார். அதற்கு Dr.மேத்தா என்பவர் மூலம் சிகிச்சை பெற்றிருக்கிறார். 

பிறகு அவர் பிரிட்டனில் இருந்த  தொடர் தலைவலியால்  பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

 (அனேகமாக அது migraine எனும் ஒற்றைத்தலைவலி அல்லது cluster head ache எனும் தொடர் தலைவலியாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு)

அதற்கு உணவு மூலம் நிவாரணம் கிடைக்குமா என்று அவர் தேடிக்கொண்டிருக்கையில்  அந்த காலத்தில் மான்செஸ்டர் நகரில் இயங்கி வந்த

 "No Break Fast Association" என்ற இயக்கத்தில் சேர்ந்து காலை உணவை புறக்கணித்தார்.

முதல் சில நாட்கள் கடினமாக உணர்ந்த அவருக்கு.. அதற்கு பின்பு தலைவலியில் இருந்து நிவாரணம்  கிடைத்திருக்கிறது.

காலை உணவு ( Break fast) என்பது தேவையற்றது  . அது தானியங்களை விற்பனை செய்யும் லாபியால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற நமது கருத்தாக்கத்துக்கு ஒத்துப்போகிறது காந்தியின் செயல்பாடு.

காந்தி அவர்கள் அக்காலத்தில் இருந்த அனைத்து மருத்துவ முறைகளையும் ஆதரித்தார் ஆயினும் அவருக்கு வந்த எந்த நோய்க்கும் மருந்துகள் எடுப்பதை தவிர்ப்பவராகவே இருந்தார். 

உணவு மூலமும் வாழ்க்கை முறை மாற்றம் மூலமும் தீர்வு காண முடியுமா என்று பரிசோதனை செய்பவராகவே இருந்தார்.

அவருக்கு 1914 ஆம் வருடம் Pleurisy என்ற நுரையீரல் அழற்சி நோய் ஏற்பட்டது. அப்போது அவர் இங்கிலாந்தில் இருந்தார். இந்த நோய்க்கு இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டில் இருப்பது நல்லது என்று மருத்துவர் அறிவுரையின் பேரில் அவர் இந்தியா பயணம் செய்தார். 

பயணத்தின் போது வெறுமனே உலர்ந்த பழங்கள் , மற்றும் கொட்டைகளை மட்டும் உண்டு தனது கப்பல்  பயணத்தை மேற்கொண்டார். 

சூயஸ் கால்வாயை கடக்கும் வேளையில் தனது நெஞ்சு வலியில் இருந்து நிவாரணம் பெற்றதாக காந்தி எழுதுகிறார். இதற்கு உணவும் புதுக்காற்றும் காரணம் என்று குறிப்பிடுகிறார். 

அதே ஆண்டு தான் வெகு நாட்களாக துன்பப்பட்டு வந்த மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்  

1924 இல் சவுரி சவுரா நிகழ்வுக்கு பிறகு காந்தி கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்ட அவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ஆனால் கடும் வயிற்று வலி மற்றும் காய்ச்சல் வரவே, உடனே பூனாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அங்கு அவருக்கு குடல் வால் புண் ஏற்பட்டிருப்பது தெரியப்படுத்தப்படுகிறது. 

உடனே அறுவை சிகிச்சை செய்யாவிடில் குடல் முழுவதும் பரவி பிரச்சனை ஆகிவிடும் என்று மருத்துவர் கூற, appendicitis க்கான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 

அவர் வாழ்க்கையில் 1925, 1936 , 1944 ஆகிய வருடங்களில் மூன்று முறை மலேரியா எனும் கொசுவால் பரவும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 

அப்போது நவீன மருத்துவ சிகிச்சை மூலம் மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட்டுள்ளார். 

1939 ஆம் ஆண்டு கடுமையான வயிற்றுப்போக்கு நோய்க்கு உள்ளான அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில் அவரது இதயம் இயல்புத்தன்மையில் இருந்து வீங்கி இருந்தது. இதை Myocardosis என்று குறிப்பட்டுள்ளனர். இப்போது இதை Cardiomyopathy என்கிறோம். 

இதனால் இதயம் லேசான பலவீனத்துடன் கால்களில் நீர் கோர்த்து(pedal edema) காணப்பட்டது. 

அக்காலகட்டதில் செய்யப்பட்ட ரத்த அழுத்த அளவுகள் மிக அதிகமாக இருந்தன.

26.10.1937   அன்று பதிவு செய்யப்பட்ட ரத்த அழுத்த அளவு  194/130 mm Hg ) .

19.2.1940 அன்று பதிவு செய்யப்பட்ட அழுத்த அளவு  220/110mm Hg

இந்த அளவு அதிகமான ரத்த அழுத்தமும் அவரது இதய நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்பதால் மருத்துவர்கள் அவரை மாத்திரைகள் உட்கொள்ள அறிவுறுத்தினர். 

ஆனாலும் காந்தியடிகள் மருந்துகள் எடுக்க மறுத்துவிட்டார். 

அவரது சகாக்கள் கூற்றுப்படி "வெள்ளைப்பூண்டை" ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த பயன்படுத்தினார்.

சர்பகந்தா எனும் ஆயுர்வேத மருந்தில் சில சொட்டுகளை தினமும் எடுத்து வந்தார்.

இருப்பினும் அவரது ரத்த கொதிப்புக்கு தீர்வு கண்டறிய முடியவில்லை. 

அவருக்கு கண்பார்வை திறனில் , +4 அளவு இருகண்களிலும் கிட்டப்பார்வை குறைபாடு இருந்தது. அதற்காக அவர் கண்ணாடி பயன்படுத்தி வந்தார். அவர் பயன்படுத்திய கண்ணாடி இன்னும் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ளது. 

மற்றபடி அவரது கண் லென்சுகளில் வயதுக்கு உரிய மாற்றங்கள் புரை நோய் இருந்தது. 

தனது வாழ்நாள் முழுவதும் யாரேனும் அவர் அசைவ உணவு என கூறி வந்த பசும்பாலிற்கு மாற்றாக சைவ மக்கள் பருகுமாறு ஒரு பானத்தை கண்டறியமாட்டார்களா என்று ஏங்கினார்.

பாதாம் பால் 

பாசிப்பயறு நீர்

இலுப்பை எண்ணெய் போன்றவை மாற்றுகளாக அக்காலத்தில் அறியப்பட்டாலும் மேற்சொன்ன எதுவும் பால் தரும் தேவையான சத்துகளை தர இயலவில்லை.

மகாத்மா காந்தி அவர்கள் தன் வாழ்நாளில் சராசரியாக  தினமும் 18 கிலோமீட்டர் நடந்திருக்கிறார். 

அவரது அரசியல் வாழ்வில் மட்டும் 79,000 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார். 

இது உலகை இரண்டு முறை சுற்றி வருவதற்கு ஒப்பானதாகும்

முடிவுரை

மகாத்மா காந்தியின் உணவு சார்ந்த பரிசோதனைகளை விரிவாக ஆராய்ந்ததில் அவர் அக்காலத்திலேயே மாவுச்சத்து குறைந்த உணவுகளை உண்டு அதிகம் நடந்து உடல் சார்ந்த பிரச்சனைகளை முடிந்த வரை உணவு மற்றும்  வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்ய முயன்றிருப்பது புலனாகிறது. 

தேவையான தருணங்களில் நவீன மருத்துவத்தை நாடியும் இருக்கிறார். 

சில முக்கிய நோய்களுக்கு விடாப்பிடியான பிடிவாத குணமா அல்லது கொள்கை உறுதியா என்று எடுக்க முடியவில்லை. மருத்துவ சிகிச்சைகளை புறக்கணித்துள்ளார். 

ஆனால் ஒருபோதும் தனது பரிசோதனைகளை பொதுவாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை.

தான் பசும்பால், எருமைப்பால் பருகாமல் இருந்தாலும், தனது பிடிவாத குணத்தை தனது ஆஷ்ரம சீடர்களிடம் அவர் திணித்ததில்லை. 

அவருக்கு தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்தை

ஆட்டுப்பால், நிலக்கடலை வெண்ணெய் , ஆட்டுப்பால் மோர், பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளை கொண்டு பூர்த்தி செய்துள்ளார். 

அவரது உணவில் பாலிஷ் செய்யப்படாத அரிசி , கோதுமை இருந்துள்ளது. 
சமைக்கப்படாத காய்கறிகளை உண்டு வாழ்ந்துள்ளார் .

பதப்படுத்தப்படாத உணவுகளை தானே விளைவித்து உண்டு வந்திருக்கிறார். 
தீவிர சைவராக இருந்தாலும் நெய்க்கு மாற்றாக வந்த சைவ வனஸ்பதியை அதன் தீமை கருதி எதிர்த்துள்ளார். 

காலை உணவை  துறந்து தனது தொடர் தலைவலி பிரச்சனையிலிருந்து மீண்டுள்ளார். 

இப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே காந்தி அவர்கள் பல அழுத்தம் திருத்தமான செய்திகளை அடுத்த நூற்றாண்டில் வாழப்போகும் உலகுக்கு விட்டுச்சென்றுள்ளார்.

அவற்றுள் அறிவியலுக்கு உகந்த கருத்துகளை ஏற்பதிலும் காந்தியின் தொலைநோக்கு பார்வையை வியப்பதிலும் உள்ளபடி மெய் சிலிர்க்கிறேன். 


இந்த கட்டுரையை சுய பரிசோதனையாளர் மகாத்மா காந்தி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 
வாழ்க காந்தி மகான்.. 
Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர்
சிவகங்கை.

(முக நூலில் இன்று வாசித்த  கட்டுரை , மிக சிறப்பாக இருந்ததால் இங்கும் பகிர்கிறேன் . இத்தகைய அருமையான கட்டுரையை வாசிக்க தந்த Dr.ஃபரூக் அப்துல்லா அவர்களுக்கு 
நன்றி.)

வாழ்க நீ எம்மான் ...


அன்புடன்
அனுபிரேம்


1 comment:

  1. விரிவான கட்டுரை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அவரது சில பழக்கங்கள் எல்லோருக்கும் ஒத்து வராது!

    ReplyDelete