03 October 2020

அருள்மிகு காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சி


காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் உள்ளது.  ஸ்ரீரங்கம்  கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து,  கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.  தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.
சுவாமி : காட்டழகிய சிங்கர்.

மூர்த்தி : கருடன்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தல வரலாறு : நரசிம்ஹ அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும்.  இதில் இவர்  சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார்.  நரசிம்மரின்  உருவம் சிங்க முகத்துடனும், கூர்மையான நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.   


 பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  இப்பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது.  திருவானைக்காவலில் இருந்து, திருவரங்கம்  வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி,  மக்களுக்கும் பெரும் பயத்தைத் ஏற்படுத்தியது.


யானைகளின் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை  இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலும் கட்டினார்.  அப்படி உருவானதே இந்த காட்டழகிய  சிங்கப்பெருமாள் கோயில்.  இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது.  காட்டுக்குள்  குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார்.

பின் ,  கி.பி. 1297-ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து  புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத்திகழ வழி ஏற்படுத்தினார்.  இந்த மன்னனே,  திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவர்.  

 பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். 

கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். 

 வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்மப்  பெருமானின் தத்ரூப தரிசனத்தை நமக்கு தருகிறது .

உள்ளே நுழையும் போது இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் உள்ளது.  


திருவரங்கம்  நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார்.  இங்கே  நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி  வேட்டைக்குக் கிளம்புகிறார்.  

இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம்  ஆனப்பிறகு, வேட்டை உற்சவம் தொடங்குகிறது. 

குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமான் ,  இங்கு இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.

  


காட்டழகிய சிங்கர் கோயிலின் உள்ளே பலிபீடத்தைத் தாண்டி, கோயிலின் முன் மண்டபத்துக்குள்  மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள் உள்ளது.  

திருச்சுற்றில் முதலில் பரிவார  தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம்.  இதில் யோக அனந்தர்,  யோக நரஸிம்மர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது.  

காயத்ரி மண்டபத்தில் யோக  நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.  பிராகாரத்தில் வலம்  வரும்போது, சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன.  

வலப்புறத்தில்  வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்கள் உள்ளது.திருச்சுற்று 


உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம்.  

முகமண்டபம், மஹாமண்டபமும் உள்ளன.  

எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது.  கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன்  சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன.  

10 படிகள் ஏறி சென்று நரசிம்மரை தரிசிக்க வேண்டும் .
இன்னும் பல மண்டபங்கள், உத்தம நம்பி  வம்சத்தில் உதித்த சக்ரராயராலும், நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.


மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.  

பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர  நரஸிம்மராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன்  நரஸிம்மரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்மர், யோக  நரஸிம்மர், அனந்த நரஸிம்மர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்மரின் தரிசனம் இங்கே   கிடைக்கிறது.


 சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம்.  அன்று  பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது.  இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு  கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.  


  சிங்கப்பெருமானின்  வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாதத்திலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும்  நடைபெறுகிறது.மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார்.   அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரகசிய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த  இடம் காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஆகும்.  
திருக்குளம் 


மிக அருமையான இடத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம் . மனதிற்கு நிறைவும், அமைதியும் தரும் சிங்கப்பெருமான் தரிசனம். இந்த ஊரடங்கு நேரத்தில் கிடைத்த மிக சிறப்பான தரிசனம் இது.
பெரிய திருமொழி - முதற்பத்து 
ஏழாம் திருமொழி – அங்கண்ஞாலம 


1015

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால் 
ஏத்த * அங்குஒராளரியாய் இருந்த அம்மானதிடம் * 
காய்த்தவாகைநெற்றுஒலிப்பக் கல்லதர்வேய்ங்கழை போய் * 
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1016

நல்லைநெஞ்சே! நாம்தொழுதும் நம்முடைநம்பெருமான் * 
அல்லிமாதர்புல்கநின்ற ஆயிரந்தோளனிடம் * 
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து * அதர்வாய்ச் 
சில்லுசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.


ஓம் நமோ நாராயணாய நம

அன்புடன் 
அனுபிரேம் 

6 comments:

 1. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. காட்டழகிய சிங்கப் பெருமான் கோவிலைப் பற்றிய விபரங்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. புரட்டாசி சனிக் கிழமையன்று ஸ்ரீமன்நாராயணனின் படங்கள், செய்திகள் என பதிவு அற்புதமாக இருந்தது அழகிய கோவில்.. சமயம் வரும் போது சென்று தரிசிக்க பிரியப்படுகிறேன். உங்களுக்கு இந்த சூழ்நிலையில் பெருமாளின் தரிசனம் கிடைத்தது மகிழ்விற்குரிய விஷயம். மிக அழகாக ஸ்தல வரலாற்றுடன் பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 2. காட்டழகிய சிங்கர் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். நன்றி. நான் இந்த பெருமாளை தரிசித்து நீண்ட காலங்களாகி விட்டது. அப்போதெல்லாம் அந்த இடம் மரங்கள் அடர்ந்து, அஸ்தமித்த பிறகு செல்வதற்கு அத்தனை பாதுகாப்பான இடம் என்று சொல்லமுடியாமல் இருந்தது. இப்பொழுது மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன். 

  ReplyDelete
 3. மிகவும் அழகான கோவில். சில முறை அங்கே சென்றிருக்கிறேன். மிகவும் அமைதியான கோவிலும் கூட.

  உங்கள் பதிவு வழி கோவிலுக்குச் சென்று தரிசிக்க முடிந்தது. படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete
 4. இதுவரை நான் பார்த்திராத கோயில். அங்கு செல்லும் நாள் விரைவில் அமையும் என நம்புகிறேன்.

  ReplyDelete