14 January 2023

30. திருப்பாவை - வங்கக் கடல் கடைந்த மாதவனைக்

 முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். 

அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். 




13 January 2023

29. திருப்பாவை - சிற்றஞ்சிறு காலே வந்து

 இருபத்தொன்பதாம் பாசுரம் -  இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.




12 January 2023

28. திருப்பாவை - கறவைகள் பின் சென்று கானம்

 இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.






11 January 2023

27. திருப்பாவை - கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

  இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.





10 January 2023

26. திருப்பாவை - மாலே ! மணிவண்ணா!

 இருபத்தாறாம் பாசுரம் -  இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். 

முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். 

நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.





09 January 2023

25. திருப்பாவை - ஒருத்தி மகனாய்

  இருபத்தஞ்சாம் பாசுரம் - எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.




08 January 2023

24. திருப்பாவை - அன்று இவ்வுலகம்

 இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.