23 October 2017

கந்தசஷ்டி விரதம்!

கந்தசஷ்டி விரதம்!



“எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்” என்பது ஆன்றோர் வாக்கு.


முருகனுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதமே தலைமையானது.

 ஒப்பற்றது.

இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர்.









இது திதி விரதம். `சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்!


உண்மைதான்.

அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான்.


முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்ந்து போரிட்டான்.

ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான்.

பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான்.

மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.




 குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

 இதைத் தான் `சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழியாகக் கூறுவார்கள்.

சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும்.

அதாவது மகப்பேறில்லாதவர்கள்  சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.




ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது.



இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.


முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர்.


சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர்.



 உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.





விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும்.


ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு.


முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும்.


ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம்.


ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம்.


திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும்.


ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்..

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !





ஆறு என்ற எண்,

முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது.

அவனது திருமுகங்கள் ஆறு,

கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்;

அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:

குமாராய அல்லது சரவண பவ;

அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள்,

அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம்,

மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என

இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.






சண்முக தத்துவம் 

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,

இரு முகம் - அக்னிக்கு,

மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,

நான்முகம் - பிரம்மனுக்கு,

ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு

ஆறு முகம் - கந்தனுக்கு.


சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்

முக்தி அளிக்க ஒரு முகம்

ஞானம் அருள ஒரு முகம்

அக்ஞானம் அழிக்க ஒரு முகம்

சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்

பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.






ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்).

இதன் மகிமை


ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு









வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்கென்று

நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கணுங் கட்கிங்ஙன்

வெய்யிற்கொதுங்க வுதவாவுடம்பின் வெறுநிழல்போற்

கையிற்பொருளு முதவாதுகாணுங் கடைவழிக்கே.

கந்தரலங்காரம்-18



(வைரக் கதிர் வீசும் வடிவேலோனை வாழ்த்தி, வறியவர்களான

ஏழைகளுக்கு, ஒரு நொய் அரிசியில் ஒரு சிறு பிளவு

அரிசியையாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு, இங்கு,

 வெய்யிலில் ஒதுங்க உங்களின் உடம்பின் நிழல் உதவாது;

அதுபோல, உங்கள் கையில் பொருள் இருந்தாலும், அது கடைசி

காலத்துக்கு உங்களுக்கு உதவாது போய்விடும், காண்பீராக!)

அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-18





அருள் முகமாம் முருகனின் அருள் அனைவருக்கும்  பரி பூரணமாக கிடைக்கட்டும்....


அன்புடன்

அனுபிரேம்

5 comments:

  1. முருகா என்றழைக்கவா..
    முத்துக்குமரா என்றழைக்கவா..
    கந்தா என்றழைக்கவா..
    கதிர்வேலா என்றழைக்கவா!..

    அழகன் முருகனைப் போல
    இன்றைய பதிவும் அழகு!..

    ReplyDelete
  2. முருகனின் அருள் பரி கிடைக்க உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    பதிவு வெகு அருமை.
    படங்களும் செய்திகளும் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.
    போன வருடம் கந்தசஷ்டி சிறப்பு பதிவாய் ஆறு நாட்களும் பதிவு போட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா அம்மா..நியாபகம் இருக்கு...

      புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களும்....

      கந்தசஷ்டி விரத நாளில் முருகன் கோவில்களும் பதிவிட்டீங்க...

      அப்பொழுது தான் நான் நினைத்தேன் அடுத்த வருட புரட்டாசிக்கு இதுபோல் நாமும் பதிவிட வேண்டும் என...

      பெருமாள் அருளால் இந்த வருடம் 5 கிழமையும் பதிவிட முடிந்தது.....

      நன்றி அம்மா..

      Delete
  3. அருமையான பதிவு... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக விரதமிருப்பர்... முன்பு படிக்கும் காலத்தில் நானும் ஒருவேளை மட்டுமே உண்பேன் சோறு உண்பதில்லை.

    இப்போதும் சோறில்லை ஆனா தானியம் சேர்த்து இருவேளை ஆக்கியிருக்கிறேன்...

    சிலர் இரவில் மிளகை விழுங்கி ஒரு கப் தண்ணீர் மட்டும் குடிப்போரும் உண்டு 6 நாட்களும்.

    ReplyDelete