28 May 2018

ஸ்ரீ நம்மாழ்வார்


இன்று  (28.5.2018)  நம்மாழ்வார்    அவதார தினம் .....

 (வைகாசியில் – விசாகம்)........








ஆழ்வார்  வாழி திருநாமம்!



திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே

திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே

இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே











நம்மாழ்வார்


பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி

தந்தை : காரி

தாய் : உடையநங்கை

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12

நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)

கிழமை : வெள்ளி

எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி

பாடல்கள் : 1296

சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்








வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும்.

வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார்.



  ஆழ்வார் திருநகரியில்  கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் , வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி-உடையநங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர்.

உடைய நங்கையின் ஊர் திருவண்பரிசாரம்.(இன்றைய திருப்பதிசாரம்).

திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார்.






மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.

அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர்.

சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார்.

ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.


பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ இருந்தது இந்தக் குழந்தை.

விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர்.

 உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்று பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் திருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்.




ஆழ்வார் புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் வரையிலும் கண் திறக்காமல் எதுவும் பேசாமல் பெருமானைச் சிந்தித்தபடி இருந்தார்.

இது இப்படி இருக்க, ஆழ்வாருக்கு பல வருடங்கள் முன்பே பிறந்து தல யாத்திரையாக வடநாடு சென்றிருந்த மதுரகவி என்பவர், அயோத்தியில் இருந்த போது தெற்கே ஒரு பெருந்தெய்வப் பேரொளியைக் கண்டார். அதைப் பின்பற்றி வந்த அவர் இறுதியில் குருகூரில் திருப்புளியடியில் வீற்றிருந்த ஆழ்வார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.




கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார்.

 ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார்.

மதுரகவி அவரை நோக்கி “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.

ஆழ்வாரும் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று அருளினார்.

மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார்.

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.)





அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”.

ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.




திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.

மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார்.

நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.

நம்மாழ்வார் மொத்தம் 35 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பர்.


 பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர்.

இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும்.

ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர்.

இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு.

 இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
 


 திருவிருத்தம்


(2478)

பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா

மெய்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.



(2479)

செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்

அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ

முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்

தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.



(2480)


குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,

நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல்,

தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்

தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச கமே.





ஓம் நமோ நாராயணாய நம!!
நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்...

6 comments:

  1. நம்மாழ்வார் திருவடி சரணம்.
    ஆழ்வார் வரலாறு திருவிருத்த பகிர்வு அருமை.

    ReplyDelete
  2. படங்கள் அருமை. விவரம் அறிந்தேன் அனு

    ReplyDelete
  3. நல்ல விவரங்கள். எத்தைத் தின்று வந்திருக்கா என்று பார்த்தேன் வந்துவிட்டது அந்தத் தத்துவம்!!! சூப்பர் அனு!! கூடவே எங்கூர்லதான் அவங்க அம்மா இருந்தாங்கன்ற தகவலையும் சொல்லிக்கறேன் ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    ReplyDelete
  4. நம்மாழ்வார் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் எல்லாமே அழகா இருக்கு அனு.

    ReplyDelete
  5. நம்மாழ்வாரின் பாடல்களைப் படித்துள்ளேன். அவருடைய வரலாற்றைப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete