21 September 2019

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்







அழகர் மலை  மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் உள்ள அழகிய சோலைவனம் . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.





இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் அழகர். இவரே வடமொழியில் " சுந்தர ராஜன் " என்று சொல்லப்படுவர்.


 மூலவர்     : பரமஸ்வாமி

  உற்சவர் : சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்),
                            கல்யாணசுந்தர வல்லி

 தாயார்     : ஸ்ரீதேவி, பூதேவி

  தல விருட்சம் : ஜோதி விருட்சம், சந்தனமரம்.

  தீர்த்தம்     : நூபுர கங்கை

தல விருட்சம்  : ஜோதி விருட்சம்,சந்தனமரம்.




மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் கல்யாண சுந்தரவல்லி தயார் வலப்புறத்திலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் இடப்புறத்திலும் புடைசூழ சேவை சாதிக்கிறார்.

மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.

தூங்கானை (கஜப்ருஷ்ட) விமான அமைப்பு இக்கோவிலின் சிறப்பாகும்.

அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கல்லால் அமைக்கப்பட்டது.

இதற்கு மேல் பொன்வேய்ந்த சிகரம், ஸ்தூபி ஆகிய எல்லாம் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மண்டபம் அமைந்துள்ளது. மூலவரின் வேறு பெயர்கள் கள்ளழகர், மாலங்காரர், மாலிருஞ்சோலை நம்பி என்பனவாகும்.




உற்சவர் சுந்தரராஜர பெருமாள்

உற்சவர், மூலவர் ஆகிய இருவரும் பஞ்ச ஆயுதங்களான சங்கு, சக்கரம் (மூலவர் பிரயோக சக்கரம்), வாள், கோதண்டம் (வில்) மற்றும் கதையுடன் காட்சி தருகிறார்கள்.

உற்சவர் திருமேனி அபரஞ்சிதம் என்ற தூய தங்கத்தால் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.

அவருக்கு திருமஞ்சனம் நூபுரகங்கை நீரால் செய்யப்படுகின்றது. வேறு நீர் பயன்படுத்தினால் உற்சவர் மேனி கருத்து விடுகின்றது.





 தல வரலாறு:
   

  எமதர்ம ராஜனுக்கு ஒரு முறை சாபம் ஏற்பட்டது. அச்சாபத்தை போக்க பூலோகத்தில்  விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.

இம்மலை 7 மலைகளை கொண்டது.

தர்மராஜனின் தபசை கண்டு மனம் இறங்கிய  பெருமாள் காட்சித் தந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நின்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார்.

அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.

எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு, தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது. 




      மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார்.

அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது.


 இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார்.

பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை சுதபஸ் முனி  . கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ' அதாவது "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ" என சாபமிட்டார்.

சாபம் பெற்ற சுதபஸ், "துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினார்.

அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார்.

அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,'' என்றார்.

அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார்.

 சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்.

அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.




தாயார் கல்யாண சுந்தரவல்லி என்ற ஸ்ரீதேவி தனிக்கோயிலில் குடிகொண்டுள்ளதால் தனிக்கோவில் தாயார் என்று பெயர்.





   
  கருப்பண்ணசுவாமி :  இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்குபவர்  கருப்பண்ணசுவாமி .

கிருஷ்ணபுத்திரன் எனப்படும் இவருக்கு உருவம் கிடையாது. கோபுரக் கதவுகளே தெய்வமாக இங்கு வழிபடப்படுகிறது.

வளம் மிக்க கேரள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் ,ஒருமுறை பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் திவ்விய தேசமான அழகர்கோவில் வந்தான் , அழகே உருவான கள்ளழகரை தரிசித்தான் .

அழகரின் அழகைக் கண்ட அந்த அரசன் அதை உருவேற்றி சக்தியேற்றி தம் தேசமான கேரளாவுக்குக் கொண்டு செல்ல திட்டம் தீட்டினான் . நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளைத் தேர்வு செய்து அழகரின் சக்தியை எடுத்து அழகரைக் கேரளம் தூக்கி வரும்படி கட்டளையிட்டான்.

பதினெட்டு மந்திரவாதிகளும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் . பதினெட்டு மந்திரவாதிகளுக்குக் காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும், வெள்ளைக் குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கிப் புறப்பட்டனர்.

அனைவரும் அழகர் மலையை அடைந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது . அழகரின் அழகிய தங்க ஆபரணங்களைக் கண்ட 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, ஆபரணங்களையும் அழகரையும் தூக்கிச் செல்லும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கிச் சென்றனர்.

இவர்களின் கெட்ட நோக்கத்தைக் கண்ட அடியார் ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .

தன்னிடம் மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்குக் கருணை புரிய இறைவன் கருணை கொண்டார் . காவல் தெய்வம் கருப்பசாமிக்குக் காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,"என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் ". காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது.

காடு வீடெல்லாம் முன்னோடியாய் காவல் புரிந்து மக்களைக் காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் . 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் .

 ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன்,  திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்குப் படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்குப் படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்குப் படைக்கப் படுகிறது .


சந்தனத்தால் கதவை அலங்காரம் செய்து நிலைமாலை சாத்துகின்றனர்.  நீதி தெய்வமான இவருக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது சிறப்பு. வேண்டுதல் நிறைவேறியதும் கத்தி, அரிவாள்,
ஈட்டி ஆகியவற்றைக் காணிக்கையாகப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.


தினமும் கள்ளழகரின் அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தும் நூபுர கங்கைத்தீர்த்தம் இவர் முன்னிலையில்வைக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படும்.

இங்கு விநாயகர், ஆண்டாள், சோலைமலை நாச்சியார், சுந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்டோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் கொடிமரம் உள்ளது.

மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.












இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.



புஷ்கரணி 



பெரியாழ்வார் திருமொழி
நான்காம் பத்து
இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்ட
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு


அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை *
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை *
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் *  
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2)

1 338


வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் * தங்கை 
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை *
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்து * பல்லாண்டொலி 
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 

2 339


தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை *
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை *
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை *
அக்கானெறியைமாற்றும் தண்மாலிருஞ்சோலையே.

3 340




எங்களின் மதுரை பயணத்தில் எடுத்த காட்சிகள் .. கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதியில்லை. அதனால் வெளிப்புற காட்சிகள் மட்டும் இங்கு. நூபுரகங்கை படங்கள் நாளைய பதிவில்....


                                                  ஓம் நமோ நாராயணாய..


அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. வரலாற்றுக்கதைகளை மிக அழகாய் சொன்னதுடன் அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள்! அருமை!

    ReplyDelete
  2. சிறு வயதில் அதாவது 11த் 12த் படிக்கும் பருவத்தில் அடிக்கடி நண்பர்களுடன் சென்று வந்து இடம் இது,, அதன் பிறகு உங்கள் பதிவின் மூலம் மீண்டும் ஒரு தடவை சுற்றி வந்தது போல இருக்கிறது....ப்ழைய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றிம்மா

    ReplyDelete
  3. எத்தனை தகவல்கள். அனைத்தும் எனக்குப் புதிது. படங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete
  4. கிளரொளி இளமை பாசுரம் போட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன்.

    நானும் டிசம்பரில் ப்ராப்தம் இருந்தால் சேவிப்பேன், கருப்பண்ணசாமி முதற்கொண்டு.

    பிரசாதம் பற்றி எழுதலை.

    மூலவர் பற்றிய செய்தி புதிது. படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கிளரொளி இளமை பாசுரம் போட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன்.....

      இந்த பதிவை பார்த்ததும் அப்பா சொன்னது அதான்.

      எங்களுக்கு இது எதிர்பாராமல் கிடைத்த தரிசனம் ..தங்களுக்கு விரைவில் சிறப்பான தரிசனம் கிடைக்கும்.

      Delete