11 August 2020

கோகுலாஷ்டமி - நவநீத நாட்டியம்.....!!!

 ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.










நவநீத நாட்டியம்.....!!!

கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.

இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னது தான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.

யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். 

கண்ணன் அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்" என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.

அவள் சொன்னது போலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு" என்று அபிநயித்தான்.

அதைப் பார்த்த யசோதை சிரித்தபடியே "கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்"என்றாள்.


"அப்படியா, சரி "என்றவனிடம்

 யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம் இழுக்கும் போது, வலது கால் தூக்கியும் இடது பக்கம் இழுக்கும் போது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் " என்றாள். 

அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணைக்காக
கால் மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். 

யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.

யசோதையின் வேலையும் முடிந்தது. 

கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. 

ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.

யசோதையும் தன கையில் யானைத்தலையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்.

அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான். 

அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். 

அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள் உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன்.

 யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள். 

அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கிய பின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.

தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள் யசோதை.


வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம். 

நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள்.
என்றும்  கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

(படித்ததில் பிடித்தது  )




பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு


தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்



உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா! 
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல் * 
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே! 
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே! * 
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச் 
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக *
ஐய! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை 
ஆயர்கள் போரேறே! ஆடுகஆடுகவே. (2) 

1 64



கோளரியின் உருவங்கொண்டு அவுணனுடலம் 
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்! *  
மீளஅவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி 
மேலையமரர்பதிமிக்கு வெகுண்டுவர *
காளநன்மேகமவை கல்லொடுகால் பொழியக் 
கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே! 
ஆள! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை 
ஆயர்கள் போரேறே! ஆடுகஆடுகவே. 

2 65









நம்முடை நாயகனே நான்மறையின்பொருளே 1 
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு * ஒருகால் 
தம்மனையானவனே! தரணிதலமுழுதும் 
தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும் *
விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும் 
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே! * 
அம்ம! எனக்கு ஒருகால்ஆடுகசெங்கீரை 
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 

3 66



வானவர்தாம் மகிழவன்சகடமுருள 
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே! * 
கானக வல்விளவின் காயுதிரக்கருதிக் 
கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே! * 
தேனுகனும்முரனும் திண்திறல்வெந்நரகன் 
என்பவர்தாம் மடியச்செருவதிரச் செல்லும் *
ஆனை! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை 
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

4 67








மத்தளவும் தயிரும் வார்குழல்நன்மடவார் 
வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி * ஒருங்கு 
ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை 
ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்! * 
முத்தினிளமுறுவல் முற்றவருவதன்முன் 
முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய *
அத்த! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 

5 68



காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா! 
கானகமாமடுவில் காளியனுச்சியிலே *
தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா! 
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே! * 
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை 
அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்! *
ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை 
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

6 69










துப்புடையார்கள் தம்சொல்வழுவாதுஒருகால் 
தூயகருங்குழல் நல்தோகைமயிலனைய *
நப்பினை தன்திறமாநல்விடையேழவிய 
நல்லதிறலுடைய  நாதனும்ஆனவனே! * 
தப்பினபிள்ளைகளைத் தனமிகுசோதிபுகத் 
தனியொரு தேர்கடவித்தாயொடுகூட்டிய * என் 
அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை 
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

7 70



உன்னையும்ஒக்கலையில் கொண்டுதமில்மருவி 
உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும் *
கன்னியரும்மகிழக் கண்டவர்கண்குளிரக் 
கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி *
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ் 
சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! * 
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை 
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2)

8 71














பாலொடுநெய்தயிர் ஒண்சாந்தொடுசண்பகமும் 
பங்கயம்நல்ல கருப்பூரமும்நாறிவர *
கோலநறும்பவளச் செந்துவர்வாயினிடைக் 
கோமளவெள்ளி முளைப்போல் சிலபல்லிலக *
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே 
நின்கனிவாயமுதம் இற்றுமுறிந்துவிழ *
ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை 
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.

9 72



செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல்விரலில் 
சேர்திகழாழிகளும் கிண்கிணியும் * அரையில் 
தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின் 
பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும் *
மங்கலஐம்படையும் தோல்வளையும் குழையும் 
மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக *
எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை 
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. 

10 73




அன்னமும்மீனுருவும் ஆளரியும்குறளும் 
ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே! * 
என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை 
ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று *
அன்னநடைமடவாள் அசோதையுகந்தபரிசு 
ஆனபுகழ்ப் புதுவைப்பட்டனுரைத்ததமிழ் *
இன்னிசைமாலைகள் இப்பத்தும்வல்லார் உலகில் 
எண்திசையும்புகழ்மிக்கு இன்பமதெய்துவரே. (2) 

11 74





ஸ்ரீரெங்கத்தில் என்று கிருஷ்ண  ஜெயந்தி கொண்டாடப்படுகின்றதோ  அன்று தான் எங்கள்  வீட்டிலும் , அதனால் எங்களுக்கு அடுத்த மாதம்  தான் ஸ்ரீ கிருஷ்ண  ஜெயந்தி, 
ஆனாலும்  கண்ணணை கொண்டாட நாள் கணக்கு ஏது  ....எங்கும், என்றும் அவன் நல்லருள் புரிவான் ...நம் கண்ணன் அன்றோ...!






ஆன்மா எனும் தயிரை..
 உடல் எனும் பானையில் இட்டு..
பக்தி எனும் மத்து கொண்டு.. 
கிருஷ்ண பிரேமை எனும் கயிறு கொண்டு..கிருஷ்ணா..
கிருஷ்ணா என முன்னும் பின்னும் கடைந்தால்..

பகவத் அனுக்கிரகம் எனும் வெண்ணெய் கிடைக்குமே...

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. கண்ணுக்கினியான்
    கருத்துக்கினியான்
    மனத்துக்கினியான்!...

    ஸ்ரீ கிருஷ்ண.. கிருஷ்ண..

    அழகான படங்களுடன் இனிய பதிவு..

    நலம் வாழ்க..

    ReplyDelete
  2. பதிவு நன்றாக வந்திருக்கு. பெரியாழ்வார் ப்ரபந்தத்துடன் ஜ்வலிக்கிறது.

    கண்ணனின் படங்கள் அழகாக இருக்கக் கேட்கவா வேணும்.... சில மாதங்களுக்கு முன்பு மதுராவில் அவன் ஜனித்த பூமியில் சேவித்த நினைவு வந்தது. துவாரகைக் கோவில்களில்தான் எப்படிப்பட்ட பக்தி உள்ளங்கள்? பார்க்கும்போதே... இவர்களிடம் உள்ள பக்தியில் கடுகளவாவது எனக்குக் கொடு என்று கேட்கத் தோன்றியது.

    உங்களுக்கும் அடுத்த மாதம்தானே ஸ்ரீஜெயந்தி. அப்போ அதற்குப் பிறகு சீடை பதிவு வரும்.

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அழகு.
    ஸ்ரீ ஜெயந்தி சிறப்பு பதிவு மிக அருமை.
    பகவத் அனுகிரகம் என்ற வெண்ணெய் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுவோம் கண்ணனை.

    ReplyDelete