14 August 2020

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

வாழ்க வளமுடன் 

இன்று   ஆலயதரிசனம் வழியாக திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்  தரிசனம்  காணலாம்....

பிரம்மாவுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கோவில்கள் உள்ளன. 

அவற்றில் சிறப்பானது திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவிலாகும்.




மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்

அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத் கவுரி)

தல விருட்சம் : மகிழமரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்








கோவில் வரலாறு

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.

 தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்,சிவபெருமான். 

படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். 

அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். 

படைப்புத்தொழிலும் பறி போனது. 

நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். 

அதற்கு சிவன் பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் துவாதசலிங்க வடிவில் இருக்கும் என்னை வணங்கினால், சாப விமோசனம் பெறுவாய் என்றார். 

மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். 

பிரம்மனும் அவ்வாறு செய்து சாபம் நீங்கப் பெற்றார். 

என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.



கோவில் அமைப்பு 

இவ்வாலயம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது. 

கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து வேத மண்டபம், நாத மண்டபம் ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். 

பிரகார வலம் வரும் போது, சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, 

அடுத்து அருகில் தனிசன்னிதியில் பிரம்மா, 

அடுத்து சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, 

அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என வரிசையாகத் தரிசிக்கலாம்.

பிரம்மன் வழிபட்ட துவாதசலிங்கம்  தனி மண்டபத்தில் உள்ளது.

 பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. 

இத்தலத்திலுள்ள காலபைரவர் மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரைப் போல உதவுகிறார். 

அம்பாள் பிரம்மநாயகியின் சன்னிதி சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. 


அம்பாள் கோவில் அடுத்துள்ள வடக்குப் பிரகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது.

 குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.








புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.

திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.

பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



இங்கும் கோவிலின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. எனவே முக நூலிலிருந்து  கிடைத்த அற்புத  படங்கள் ...







இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

மேலும்  வியாழக்கிழமையில் இங்கு வந்து  பிரம்மாவை தரிசிப்பது மிகவும் சிறப்பு.

 நாங்கள் சென்றதும் ஒரு வியாழக்கிழமை ஆனால் இந்த அளவு விசேஷமும், கூட்டமும் இருக்கும் என அறியாது சென்று விட்டோம். அதனால் சில மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் பெற்றோம்.


திருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்


பாடல் எண் : 1 பண் : நட்டபாடை

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 


பொழிப்புரை:
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!



பாடல் எண் : 2 பண் : நட்டபாடை

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 


பொழிப்புரை:
வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!




பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 


பொழிப்புரை:
கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!


இறைவன்   திருவடிகளே சரணம் .....

அன்புடன் 
அனுபிரேம் 

5 comments:

  1. திருப்பட்டூர் பல துறை சென்றுள்ளேன். இந்த அளவிற்கு பெரிய அளவில் வேறு எங்குமே பிரம்மாவிற்கு சிலை கிடையாது. அந்த நிலையில் இது வேறு சிலையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை நான் முதலில் பார்த்தபோது உணர்ந்தேன். பொதுவாக பிரம்மாவினை கோஷ்டங்களில் காணமுடியும். கும்பகோணத்தில் பிரம்மன் கோயில் என்ற கோயிலில் மூலவரின் வலது புறத்தில் தனி சன்னதியில் பிரம்மாவைக் காணலாம்.

    ReplyDelete
  2. இந்தக் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து நம் ஜாதகத்தை மூலவர் காலடியில் வைத்துவிட்டு எடுத்தால், நம் தலைவிதி பெட்டராகும் என்ற நம்பிக்கையில் பலரும் இந்தக் கோவிலை தரிசனம் செய்கிறார்கள்.

    நல்ல பகிர்வு. எப்போதும்போல் அருமையான படங்கள்.

    தோடுடைய செவியன் - ரசித்துப் படித்த பாடல்.

    ReplyDelete
  3. தலவரலாறும் படங்களும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சகோதரி.

    துளசிதரன்

    ReplyDelete
  4. தலவரலாறும், படங்களும் மிக அருமை.
    நாங்களும் போய் வந்து இருக்கிறோம். நானும் பதிவு போட்டு இருக்கிறேன்.
    தேவார வகுப்பில் நட்டபாடை ராகத்தில் அமைந்த பாடல்களை இரண்டு வாரமாய் படித்தோம்.

    ReplyDelete
  5. இந்தத் தலத்தை தரிசனம்
    செய்ய வேண்டும் என ஆவலுண்டு..
    இறையருளால் விரைவில் நேரம் கூடி வரும்..

    நலம் வாழ்க..

    ReplyDelete